அப்போஸ்தலரின் செயல்கள் 28:1-31
28 நாங்கள் பத்திரமாகக் கரைசேர்ந்த அந்தத் தீவின் பெயர் மெலித்தா+ என்று தெரிந்துகொண்டோம்.
2 வேறு மொழி பேசிய அந்தத் தீவுவாசிகள் எங்களிடம் அளவுகடந்த மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டார்கள். மழை பெய்ததாலும் குளிராக இருந்ததாலும் நெருப்பு மூட்டி எங்கள் எல்லாருக்கும் அன்பாக உதவி செய்தார்கள்.
3 பவுல் அந்தச் சமயத்தில் ஒரு கட்டு விறகுக் குச்சிகளை எடுத்து நெருப்பில் போட்டபோது, சூடு தாங்காமல் ஒரு விரியன் பாம்பு வெளியே வந்து அவருடைய கையைக் கவ்விக்கொண்டது.
4 வேறு மொழி பேசிய அந்த மக்கள் அவருடைய கையில் விஷப் பாம்பு தொங்குவதைப் பார்த்தபோது, “நிச்சயமாகவே இந்த ஆள் ஒரு கொலைகாரன்தான். கடலிலிருந்து இவன் தப்பித்தாலும், நீதிநியாயத்திடமிருந்து* தப்பிக்க முடியவில்லை” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.
5 ஆனால், அவர் அந்தப் பாம்பை நெருப்புக்குள் உதறினார்; அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
6 அவருக்கு வீக்கம் ஏற்படும் அல்லது அவர் திடீரென்று செத்து விழுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ரொம்ப நேரம் காத்திருந்தும் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாததால், தங்களுடைய மனதை மாற்றிக்கொண்டு, அவர் ஒரு தெய்வம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
7 அந்தத் தீவின் முக்கியத் தலைவரான புபிலியு என்பவருக்குச் சொந்தமான நிலங்கள் அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்தன. அவர் எங்களை அன்பாக வரவேற்று மூன்று நாட்களுக்கு உபசரித்தார்.
8 அந்தச் சமயத்தில், புபிலியுவின் அப்பா காய்ச்சலாலும் சீதபேதியாலும் அவதிப்பட்டுப் படுக்கையில் கிடந்தார். பவுல் அவரிடம் போய் ஜெபம் செய்து, அவர்மேல் கைகளை வைத்து அவரைக் குணப்படுத்தினார்.+
9 இது நடந்த பின்பு, அந்தத் தீவில் நோய்வாய்ப்பட்டிருந்த மற்றவர்களும் பவுலிடம் வந்து குணமடைந்தார்கள்.+
10 அவர்கள் நிறைய அன்பளிப்புகளைக் கொடுத்து எங்களைக் கெளரவப்படுத்தினார்கள். நாங்கள் கப்பலேறியபோது, எங்கள் பயணத்துக்குத் தேவையான பொருள்களையும் கொண்டுவந்து குவித்தார்கள்.
11 மூன்று மாதங்களுக்குப் பின்பு, “சீயுசின் மகன்களுடைய” சின்னத்தைக் கொண்ட ஒரு கப்பலில் ஏறிப் புறப்பட்டோம். அந்தக் கப்பல் அலெக்சந்திரியா நகரத்திலிருந்து வந்திருந்தது, குளிர் காலத்துக்காக அந்தத் தீவில் ஒதுங்கியிருந்தது.
12 நாங்கள் சீரகூசா துறைமுகத்தை அடைந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
13 அந்த இடத்திலிருந்து புறப்பட்டு ரேகியு நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அடுத்த நாள் தென்திசைக் காற்று வீசியது, இரண்டாம் நாள் புத்தேயோலி துறைமுகத்தை அடைந்தோம்.
14 அங்கே சகோதரர்களைச் சந்தித்தோம். ஏழு நாட்கள் தங்களோடு தங்கும்படி அவர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அங்கே தங்கிய பின்பு, ரோமுக்குப் புறப்பட்டுப் போனோம்.
15 ரோமிலிருந்த சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, எங்களைச் சந்திப்பதற்காக “மூன்று சத்திரம்” என்ற இடம்வரை வந்தார்கள். அவர்களில் சிலர், “அப்பியு சந்தை” வரைக்கும்கூட வந்தார்கள். பவுல் அவர்களைப் பார்த்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்.+
16 கடைசியாக, நாங்கள் ரோமுக்குள் போனபோது, ஒரு படைவீரனுடைய காவலில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுலுக்கு அனுமதி கிடைத்தது.
17 இருந்தாலும் மூன்று நாட்களுக்குப் பின்பு, பிரபலமான யூத ஆண்களை பவுல் வரவழைத்தார். அவர்கள் கூடிவந்த பின்பு, “சகோதரர்களே, நம் மக்களுக்கு விரோதமாகவோ நம் முன்னோர்களின் சம்பிரதாயங்களுக்கு விரோதமாகவோ நான் எதுவும் செய்யவில்லை.+ ஆனாலும் எருசலேமில் கைது செய்யப்பட்டு, ரோமர்களுடைய கையில் ஒப்படைக்கப்பட்டேன்.+
18 அவர்கள் என்னை விசாரணை செய்த பின்பு,+ மரண தண்டனை கொடுக்குமளவுக்கு எந்தக் குற்றத்தையும் என்னிடம் பார்க்காததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.+
19 யூதர்கள் அதை எதிர்த்ததால், ரோம அரசனிடம்* நான் மேல்முறையீடு+ செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் தேசத்தார்மேல் ஏதோவொரு குற்றச்சாட்டைச் சுமத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு நான் அப்படிச் செய்யவில்லை.
20 இதனால்தான் உங்களைப் பார்த்துப் பேசுவதற்காக இங்கே வரும்படி உங்களைக் கேட்டுக்கொண்டேன். இஸ்ரவேலர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தவரின் காரணமாகத்தான் இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன்”+ என்று சொன்னார்.
21 அதற்கு அவர்கள், “உங்களைப் பற்றி யூதேயாவிலிருந்து எங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. இங்கே வந்த சகோதரர்கள் யாரும் உங்களைப் பற்றி எதுவும் தவறாக அறிவிக்கவோ சொல்லவோ இல்லை.
22 இருந்தாலும், உங்களுடைய கருத்துகளை உங்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்வதுதான் சரி என்று நினைக்கிறோம். ஏனென்றால், எல்லா இடங்களிலும் இந்த மதப்பிரிவுக்கு+ விரோதமாகவே பேசப்படுகிறது+ என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
23 பின்பு, அவரைச் சந்திக்க ஒரு நாளைக் குறித்துக்கொண்டு, அவர் தங்கியிருந்த வீட்டுக்கு ஏராளமான ஆட்கள் வந்தார்கள். அப்போது, காலையிலிருந்து சாயங்காலம்வரை, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களிடம் முழுமையாகச் சாட்சி கொடுத்தார். மோசேயின் திருச்சட்டத்திலிருந்தும்+ தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும்+ இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பக்குவமாக விளக்கிச் சொன்னார்.+
24 சிலர் அவர் சொன்ன விஷயங்களை நம்பினார்கள். ஆனால் மற்றவர்கள் நம்பவில்லை.
25 அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அந்த இடத்தைவிட்டுப் போக ஆரம்பித்தார்கள். அப்போது பவுல் இந்தக் குறிப்பை அவர்களிடம் சொன்னார்:
“ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கடவுளுடைய சக்தி மிகச் சரியாகவே உங்கள் முன்னோர்களிடம் இப்படிச் சொன்னது:
26 ‘“காதால் கேட்டாலும் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்; கண்ணால் பார்த்தாலும் ஒருபோதும் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.+
27 இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும் காதுகளால் கேட்காமலும் இதயத்தால் உணராமலும் என்னிடம் திரும்பி வராமலும் நான் அவர்களைக் குணப்படுத்தாமலும் இருக்கும்படி, அவர்களுடைய இதயம் இறுகிப்போயிருக்கிறது; இவர்கள் தங்கள் காதால் மந்தமாய்க் கேட்கிறார்கள், தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்”+ என்று நீ இந்த ஜனங்களிடம் போய்ச் சொல்.’
28 அதனால்தான், கடவுள் தரப்போகிற இந்த மீட்பைப் பற்றிய செய்தி மற்ற தேசத்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது+ என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதை அவர்கள் நிச்சயம் காதுகொடுத்துக் கேட்பார்கள்.”+
29 *——
30 பவுல் தன்னுடைய வாடகை வீட்டில் இரண்டு வருஷங்கள் தங்கியிருந்தார்.+ தன்னைப் பார்க்க வந்த எல்லாரையும் அன்பாக வரவேற்று,
31 எந்தத் தடையும் இல்லாமல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரசங்கித்துவந்தார். அதோடு, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விஷயங்களைக் கொஞ்சமும் தயக்கமில்லாமல்*+ கற்பித்துவந்தார்.
அடிக்குறிப்புகள்
^ கிரேக்கில், டைக்கி. இது, நீதிநியாயம் வழங்கும் பெண் தெய்வத்தையும் குறிக்கலாம்.
^ நே.மொ., “சீஸரிடம்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “விஷயங்களை மிகுந்த தைரியத்தோடு.”