அப்போஸ்தலரின் செயல்கள் 5:1-42

  • அனனியாவும் சப்பீராளும் (1-11)

  • அப்போஸ்தலர்கள் நிறைய அடையாளங்களைச் செய்கிறார்கள் (12-16)

  • சிறைச்சாலையில் போடப்படுகிறார்கள், விடுதலை செய்யப்படுகிறார்கள் (17-21அ)

  • மறுபடியும் நியாயசங்கத்துக்கு முன்னால் நிறுத்தப்படுகிறார்கள் (21ஆ-32)

    • “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” (29)

  • கமாலியேலின் ஆலோசனை (33-40)

  • வீடு வீடாகப் பிரசங்கிக்கிறார்கள் (41, 42)

5  அனனியா என்ற ஒருவன் தன்னுடைய மனைவி சப்பீராளோடு சேர்ந்து ஒரு நிலத்தை விற்றான்.  ஆனால், விற்ற பணத்தில் ஒரு பகுதியை ஒளித்து வைத்துக்கொண்டான், இது அவனுடைய மனைவிக்கும் தெரியும்; பின்பு, மீதி பணத்தை மட்டும் கொண்டுவந்து அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.+  அப்போது பேதுரு, “அனனியாவே, நிலம் விற்ற பணத்தில் ஒரு பகுதியை ஒளித்து வைத்துக்கொண்டு கடவுளுடைய சக்திக்கு+ விரோதமாகப் பொய் சொல்லத் துணியும்படி சாத்தான் உன்னைத் தூண்டியது ஏன்?+  நிலத்தை விற்பதற்கு முன்புவரை அது உனக்குத்தானே சொந்தமாக இருந்தது, அதை விற்ற பின்பும் அந்தப் பணம் உன்னுடையதாகத்தானே இருந்தது? இப்படியொரு காரியத்தைச் செய்ய ஏன் உள்ளத்தில் திட்டம் போட்டாய்? மனுஷர்களிடம் அல்ல, கடவுளிடமே பொய் சொல்லியிருக்கிறாய்” என்றார்.  இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அனனியா கீழே விழுந்து செத்துப்போனான். இதைக் கேள்விப்பட்ட எல்லாரும் மிகவும் பயந்தார்கள்.  பின்பு, சில இளைஞர்கள் எழுந்துவந்து அவனைத் துணிகளில் சுற்றி, அங்கிருந்து தூக்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்.  சுமார் மூன்று மணிநேர இடைவெளிக்குப் பின்பு, அவனுடைய மனைவி அங்கே வந்தாள்; ஆனால், நடந்தது எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.  பேதுரு அவளிடம், “நீங்கள் இரண்டு பேரும் நிலத்தை இவ்வளவுக்குத்தான் விற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆமாம், இவ்வளவுக்குத்தான் விற்றோம்” என்று சொன்னாள்.  அப்போது பேதுரு, “நீங்கள் இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்து யெகோவாவின்* சக்தியை ஏன் சோதித்தீர்கள்? இதோ! உன்னுடைய கணவனை அடக்கம் செய்த ஆட்கள் கதவுக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள், அவர்கள் உன்னையும் தூக்கிக்கொண்டு போவார்கள்” என்று சொன்னார். 10  உடனே அவள் அவருடைய காலடியில் விழுந்து செத்துப்போனாள். அந்த இளைஞர்கள் உள்ளே வந்து பார்த்தபோது அவள் செத்துக் கிடந்தாள்; அவர்கள் அவளைத் தூக்கிக்கொண்டுபோய் அவளுடைய கணவனுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்தார்கள். 11  இதனால் சபையில் இருந்தவர்களும், இதைக் கேள்விப்பட்ட மற்ற எல்லாரும் ரொம்பவே பயந்துபோனார்கள். 12  அப்போஸ்தலர்கள் நிறைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மக்கள் மத்தியில் செய்துகொண்டிருந்தார்கள்.+ அவர்கள் எல்லாரும் வழக்கமாக சாலொமோன் மண்டபத்தில்+ ஒன்றுகூடிவந்தார்கள். 13  அவர்களோடு சேர்ந்துகொள்ள மற்றவர்கள் யாருக்கும் தைரியம் வரவில்லை; இருந்தாலும், அவர்களைப் பற்றிப் பொதுமக்கள் உயர்வாகப் பேசினார்கள். 14  அதிகமதிகமான ஆண்களும் பெண்களும் எஜமானின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய சீஷர்களாக ஆனார்கள்.+ 15  பேதுரு நடந்துபோகும்போது நோயாளிகள் சிலர்மேல் அவருடைய நிழலாவது பட வேண்டும் என்பதற்காக+ அவர்களைச் சிறிய படுக்கைகளிலும் பாய்களிலும் கிடத்தி முக்கியத் தெருக்களில் கொண்டுவந்து வைத்தார்கள். 16  அதுமட்டுமல்ல, எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து நோயாளிகளையும் பேய்களால் அவதிப்பட்டவர்களையும் கூட்டிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்; அவர்கள் அத்தனை பேரும் குணமாக்கப்பட்டார்கள். 17  அப்போது, தலைமைக் குருவும் அவரோடு இருந்த சதுசேய மதப்பிரிவினர் எல்லாரும் பொறாமையால் பொங்கியெழுந்து, 18  அப்போஸ்தலர்களைப் பிடித்து* நகரச் சிறைச்சாலையில் போட்டார்கள்.+ 19  ஆனால், அன்று ராத்திரி யெகோவாவின்* தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து+ அவர்களை வெளியே கொண்டுவந்து, 20  “நீங்கள் போய் ஆலயத்தில் நின்று முடிவில்லாத வாழ்வைப் பற்றிய எல்லா விஷயங்களையும் மக்களிடம் தொடர்ந்து பேசுங்கள்” என்று சொன்னார். 21  அதன்படியே, பொழுது விடிந்தவுடன் ஆலயத்துக்குப் போய் அவர்கள் கற்பிக்க ஆரம்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரோடு இருந்தவர்களும் வந்து, நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்களையும் இஸ்ரவேல் மக்களின் பெரியோர் குழுவினர் எல்லாரையும் ஒன்றுகூட்டினார்கள்; பின்பு, அப்போஸ்தலர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருவதற்காகக் காவலர்களை அனுப்பினார்கள். 22  ஆனால், அந்தக் காவலர்கள் அங்கே போய்ப் பார்த்தபோது சிறைச்சாலையில் அவர்களைக் காணவில்லை. அதனால் அந்தக் காவலர்கள் திரும்பி வந்து, 23  “சிறைச்சாலை நன்றாகப் பூட்டப்பட்டிருந்தது, காவலாளிகளும் கதவுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்; ஆனால், கதவைத் திறந்தபோது உள்ளே யாரையும் காணவில்லை” என்று சொன்னார்கள். 24  இதைக் கேட்டதும், ஆலயத்தின் காவல் தலைவரும் முதன்மை குருமார்களும் அடுத்து என்ன நடக்குமோ என்று நினைத்துக் குழம்பினார்கள். 25  அப்போது ஒருவன் வந்து, “அதோ! நீங்கள் சிறையில் அடைத்திருந்த ஆட்கள் ஆலயத்தில் நின்று மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னான். 26  அதனால், அந்தக் காவல் தலைவர் தன் காவலர்களோடு போய் அவர்களைப் பிடித்துக் கொண்டுவந்தார்; ஆனால், மக்கள் தங்கள்மேல் கல்லெறிவார்கள் என்று பயந்ததால்+ வன்முறை எதையும் கையாளவில்லை. 27  பின்பு, அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து நியாயசங்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது தலைமைக் குரு அவர்களிடம், 28  “இந்தப் பெயரில் கற்பிக்கக் கூடாதென்று நாங்கள் உங்களுக்குக் கண்டிப்புடன் கட்டளை கொடுத்திருந்தோம்;+ அப்படியிருந்தும், எருசலேம் முழுவதையும் உங்கள் போதனையால் நிரப்பியிருக்கிறீர்கள்; அந்த மனுஷனுடைய சாவுக்கு எங்கள்மேல் பழிபோட* குறியாக இருக்கிறீர்கள்”+ என்று சொன்னார். 29  அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும், “நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்.+ 30  நீங்கள் மரக் கம்பத்தில்* அறைந்து* கொன்ற இயேசுவை நம் முன்னோர்களுடைய கடவுள் உயிரோடு எழுப்பினார்.+ 31  இஸ்ரவேலர்கள் மனம் திருந்தி, பாவ மன்னிப்பைப் பெறுவதற்காக+ அவரை அதிபதியாகவும்+ மீட்பராகவும்+ தன்னுடைய வலது பக்கத்துக்கு உயர்த்தினார்.+ 32  இதற்கெல்லாம் நாங்கள் சாட்சிகள்;+ கடவுள் தனக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தருகிற அவருடைய சக்தியும் சாட்சி”+ என்று சொன்னார்கள். 33  அந்த வார்த்தைகளைக் கேட்டு நியாயசங்கத்தார் கொதிப்படைந்து, அவர்களைக் கொன்றுபோடத் துடித்தார்கள். 34  அப்போது, எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்டுவந்த திருச்சட்டப் போதகரான கமாலியேல்+ என்ற பரிசேயர் நியாயசங்கத்தில் எழுந்து நின்று, அப்போஸ்தலர்களைக் கொஞ்ச நேரத்துக்கு வெளியே கொண்டுபோகும்படி கட்டளையிட்டார். 35  பின்பு, அங்கிருந்தவர்களைப் பார்த்து, “இஸ்ரவேலர்களே, இந்த மனுஷர்களுக்கு நீங்கள் செய்ய நினைத்திருப்பதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 36  சில காலத்துக்கு முன்னால், தெயுதாஸ் என்பவன் தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக்கொண்டிருந்தான்; சுமார் 400 ஆண்கள் அவனுடைய கூட்டத்தில் சேர்ந்துகொண்டார்கள். ஆனால், அவன் கொல்லப்பட்டான்; அவன் பேச்சைக் கேட்ட எல்லாரும் சிதறடிக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனார்கள். 37  அதற்குப் பின்பு, பெயர்ப்பதிவு செய்யப்பட்ட காலத்தில் யூதாஸ் என்ற கலிலேயன் ஒருவன் தன்னோடு ஆட்களைச் சேர்த்துக்கொண்டான். ஆனால், அவனும் அழிந்துபோனான், அவனைப் பின்பற்றிய எல்லாரும் சிதறடிக்கப்பட்டார்கள். 38  அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனுஷர்களுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள், இவர்களை விட்டுவிடுங்கள்; இந்தத் திட்டம் அல்லது செயல் மனுஷர்களுடையதாக இருந்தால், அது ஒழிந்துபோகும். 39  ஆனால், அது கடவுளுடையதாக இருந்தால், உங்களால் அதை ஒழிக்கவே முடியாது;+ அதில் தலையிட்டால், நீங்கள் கடவுளோடு போர் செய்கிறவர்களாகக்கூட ஆகிவிடலாம்”+ என்று சொன்னார். 40  அவர்களும் அவருடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்கள்; பின்பு அப்போஸ்தலர்களை வரவழைத்து, அவர்களை அடித்து,+ இயேசுவின் பெயரில் பேசுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டு அனுப்பினார்கள். 41  ஆனால், அவருடைய பெயருக்காகத் தாங்கள் அவமானப்படத் தகுதியுள்ளவர்களெனக் கருதப்பட்டதை நினைத்து அப்போஸ்தலர்கள் சந்தோஷமாக+ நியாயசங்கத்தைவிட்டுப் போனார்கள். 42  அவர்கள் தினமும் ஆலயத்திலும் வீடு வீடாகவும்+ இடைவிடாமல் கற்பித்து, கிறிஸ்துவாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்துவந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “கைது செய்து.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “இந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்த.”
வே.வா., “மரத்தில்.”
நே.மொ., “தொங்கவிட்டு.”