அப்போஸ்தலரின் செயல்கள் 8:1-40

  • சவுல் துன்புறுத்துகிறான் (1-3)

  • சமாரியாவில் பிலிப்புவின் ஊழியத்துக்கு நல்ல பலன் (4-13)

  • பேதுருவும் யோவானும் சமாரியாவுக்கு அனுப்பப்படுகிறார்கள் (14-17)

  • கடவுளின் சக்தியைப் பணம்கொடுத்து வாங்க சீமோன் முயற்சிக்கிறான் (18-25)

  • எத்தியோப்பிய அதிகாரி (26-40)

8  ஸ்தேவானைக் கொலை செய்வதற்கு சவுலும் உடந்தையாக இருந்தான்.+ அந்த நாளில், எருசலேமிலிருந்த சபைக்குக் கடுமையான துன்புறுத்தல் வந்தது; அப்போஸ்தலர்களைத் தவிர மற்ற எல்லாரும் யூதேயா, சமாரியா பகுதிகள் முழுவதும் சிதறிப்போனார்கள்.+  பயபக்தியுள்ள ஆண்கள் ஸ்தேவானின் உடலைத் தூக்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்து, அவருக்காக மிகவும் அழுது துக்கம் அனுசரித்தார்கள்.  சவுலோ, ஒவ்வொரு வீடாகப் புகுந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய்ச் சிறையில் அடைத்து, சபையைக் கொடூரமாகத் துன்புறுத்திவந்தான்.+  ஆனாலும், சிதறிப்போனவர்கள் தேசம் முழுவதும் போய் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்தார்கள்.+  பிலிப்பு என்பவர் சமாரியா நகரத்துக்கு*+ போய் அங்கே இருந்தவர்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.  எல்லாருமே அவர் சொன்ன விஷயங்களைக் கூர்ந்து கேட்டார்கள்; அவர் செய்த எல்லா அடையாளங்களையும் கவனித்தார்கள்.  நிறைய பேரைப் பிடித்திருந்த பேய்கள் கத்திக் கூச்சல் போட்டுக்கொண்டு அவர்களைவிட்டு வெளியேறின.+ பக்கவாத நோயாளிகள் பலரும், கால் ஊனமான பலரும் குணமாக்கப்பட்டார்கள்.  அதனால், அந்த நகரத்தில் இருந்தவர்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள்.  அதே நகரத்தில் சீமோன் என்ற ஒருவன் இருந்தான்; அவன் மாயமந்திரங்கள் செய்து, சமாரியாவிலிருந்த மக்களைப் பிரமிக்க வைத்திருந்தான்; தன்னை ஒரு பெரிய ஆள் என்று சொல்லிக்கொண்டும் இருந்தான். 10  சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் அவன் சொல்வதைக் கவனித்துக் கேட்டு, “இவர் சக்திபடைத்த தெய்வப் பிறவி” என்று சொன்னார்கள். 11  அவன் தன்னுடைய மாயமந்திரங்கள் மூலம் ரொம்பக் காலமாகவே மக்களைப் பிரமிக்க வைத்திருந்ததால், அவன் சொன்னதைக் கவனித்து கேட்டார்கள். 12  ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தையும்+ இயேசு கிறிஸ்துவின் பெயரையும் பற்றிய நல்ல செய்தியை பிலிப்பு சொன்னபோது, ஆண்களும் பெண்களும் நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்.+ 13  சீமோனும்கூட இயேசுவின் சீஷனாக ஆனான்; அவன் ஞானஸ்நானம் எடுத்த பின்பு, எப்போதும் பிலிப்புவோடு+ இருந்தான்; அடையாளங்களும் மாபெரும் அற்புதங்களும்* நடப்பதைப் பார்த்துப் பிரமித்துப்போனான். 14  கடவுளுடைய வார்த்தையை சமாரியர்கள் ஏற்றுக்கொண்ட செய்தியை எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டபோது,+ பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். 15  அந்த இரண்டு பேரும் அங்கே போய், கடவுளுடைய சக்தி சமாரியர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று ஜெபம் செய்தார்கள்.+ 16  அதுவரை அவர்களில் யாருக்கும் கடவுளுடைய சக்தி கிடைக்கவில்லை; எஜமானாகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் மட்டுமே எடுத்திருந்தார்கள்.+ 17  அதனால், அவர்கள் இரண்டு பேரும் சமாரியர்கள்மேல் கைகளை வைத்தார்கள்;+ அப்போது, கடவுளுடைய சக்தியை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். 18  அப்போஸ்தலர்கள் யார்மேல் கைகளை வைக்கிறார்களோ அவர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைப்பதை சீமோன் பார்த்தபோது அவர்களிடம் பணத்தைக் கொண்டுவந்து, 19  “நானும் யார்மேல் கைகளை வைக்கிறேனோ அவர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்” என்று கேட்டான். 20  ஆனால் பேதுரு அவனிடம், “கடவுள் தரும் இலவச அன்பளிப்பைப் பணம் கொடுத்து வாங்கலாம் என்று நீ நினைத்ததால் உன் பணம் உன்னோடு அழிந்துபோகட்டும்.+ 21  உன் உள்ளம் கடவுளுடைய பார்வையில் நேர்மையாக இல்லாததால், இதில் உனக்குப் பங்கும் கிடையாது, பாகமும் கிடையாது. 22  உன்னுடைய கெட்ட குணத்தைவிட்டு மனம் திருந்து; உன் உள்ளத்தில் தோன்றிய பொல்லாத எண்ணத்துக்காக மன்னிப்பு கேட்டு யெகோவாவிடம்* மன்றாடு, ஒருவேளை அவர் உன்னை மன்னிக்கலாம். 23  நீ கசப்பான விஷம்!* அநீதிக்கு அடிமை!” என்றார். 24  அதற்கு சீமோன், “நீங்கள் சொன்ன எதுவும் எனக்கு நடந்துவிடாதபடி தயவுசெய்து எனக்காக யெகோவாவிடம்* மன்றாடுங்கள்” என்று கேட்டுக்கொண்டான். 25  பின்பு, யெகோவாவின்* வார்த்தையைப் பற்றி அவர்கள் முழுமையாகச் சாட்சி கொடுத்துவிட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்; வழியில் சமாரியர்களுடைய பல கிராமங்களில் நல்ல செய்தியை அறிவித்தார்கள்.+ 26  பின்பு பிலிப்புவிடம் யெகோவாவின்* தூதர்,+ “நீ எழுந்து, எருசலேமிலிருந்து காசாவுக்குப் போகும் பாதையில் தெற்கு நோக்கிப் போ” என்று சொன்னார். (இது ஒரு பாலைவனப் பாதை.) 27  அதன்படியே அவர் எழுந்து போனார்; அப்போது, எத்தியோப்பியர்களுடைய ராணியின்* சொத்துகள் எல்லாவற்றையும் நிர்வகித்த எத்தியோப்பிய அதிகாரி* ஒருவர் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குப் போய்விட்டு,+ 28  திரும்பி வந்துகொண்டிருந்தார். ரதத்தில் உட்கார்ந்தபடி ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அவர் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தார். 29  அப்போது கடவுளுடைய சக்தி பிலிப்புவிடம், “நீ ஓடிப்போய் அந்த ரதத்தோடு சேர்ந்துகொள்” என்று சொன்னது. 30  பிலிப்பு அந்த ரதத்தோடு சேர்ந்து ஓடியபோது, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அந்த அதிகாரி சத்தமாக வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டார்; அப்போது அவரிடம், “நீங்கள் வாசிப்பது உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டார். 31  அதற்கு அவர், “ஒருவர் கற்றுக்கொடுக்காவிட்டால் எனக்கு எப்படிப் புரியும்?” என்று சொல்லி, தன்னோடு வந்து உட்காரும்படி பிலிப்புவைக் கேட்டுக்கொண்டார். 32  அவர் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்த வேதவசனங்கள் இவைதான்: “வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும், மயிர் கத்தரிப்பவன் முன்னால் அமைதியாக இருக்கிற ஆட்டுக்குட்டியைப் போலவும் அவர் வாயே திறக்கவில்லை.+ 33  அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, அநியாயமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டார்.+ அவருடைய வம்சத்தின் விவரங்களைப் பற்றி யார் சொல்வார்கள்? அவருடைய உயிர் இந்தப் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே.”+ 34  பிலிப்புவிடம் அந்த அதிகாரி, “தீர்க்கதரிசி இதில் யாரைப் பற்றிச் சொல்கிறார்? தன்னைப் பற்றியா வேறொருவரைப் பற்றியா? தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டார். 35  அப்போது பிலிப்பு பேச ஆரம்பித்தார்; அந்த வேதவசனத்திலிருந்து ஆரம்பித்து, இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை அவருக்கு அறிவித்தார். 36  அவர்கள் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தபோது, தண்ணீர் இருக்கிற ஓர் இடத்துக்கு வந்தார்கள்; அப்போது அந்த அதிகாரி, “இதோ, இங்கே தண்ணீர் இருக்கிறது! ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?” என்று கேட்டார். 37  *—— 38  உடனே, ரதத்தை நிறுத்தச்சொல்லி உத்தரவிட்டார்; அப்போது, அவரும் பிலிப்புவும் தண்ணீருக்குள் இறங்கினார்கள். அவருக்கு பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்தார். 39  அவர்கள் தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தபோது, யெகோவாவின்* சக்தி பிலிப்புவை உடனடியாக வேறொரு இடத்துக்கு வழிநடத்தியது; அதற்குப் பின்பு, அந்த அதிகாரி அவரைப் பார்க்கவில்லை; இருந்தாலும், அவர் சந்தோஷமாகத் தன் வழியில் போனார். 40  பிலிப்புவோ அஸ்தோத்துக்குப் போனார். அங்கிருந்து அவர் செசரியாவுக்குப்+ போய்ச் சேரும்வரை, வழியில் இருக்கிற எல்லா நகரங்களிலும் நல்ல செய்தியை அறிவித்துக்கொண்டே போனார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “சமாரியாவில் இருக்கிற ஒரு நகரத்துக்கு.”
நே.மொ., “வல்லமையான செயல்களும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “பித்தநீர்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
கிரேக்கில், “கந்தாகே” என்ற பட்டப்பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எத்தியோப்பிய ராணிகள் பலருக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்.
நே.மொ., “அண்ணகர்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.