ஆதியாகமம் 17:1-27

  • ஆபிரகாம் நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆவார் (1-8)

    • ஆபிராமுக்கு ஆபிரகாம் என்று பெயர் வைக்கப்படுகிறது (5)

  • விருத்தசேதன ஒப்பந்தம் (9-14)

  • சாராய்க்கு சாராள் என்று பெயர் வைக்கப்படுகிறது (15-17)

  • ஈசாக்கு பிறப்பான் என்று வாக்குறுதி கொடுக்கப்படுகிறது (18-27)

17  ஆபிராமுக்கு 99 வயதானபோது யெகோவா அவர்முன் தோன்றி, “நான் சர்வவல்லமையுள்ள கடவுள். நீ என்னுடைய வழியில் நடந்து, குற்றமற்றவனாக இரு.  நான் உன்னோடு செய்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி, உன்னுடைய சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன்” என்றார்.  உடனே, ஆபிராம் சாஷ்டாங்கமாக விழுந்தார். கடவுள் அவரிடம்,  “நான் உன்னோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன். அதனால் நிறைய தேசங்களுக்கு நீ தகப்பனாவாய், இது உறுதி.  இனி நீ ஆபிராம்* என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம்* என்று அழைக்கப்படுவாய். ஏனென்றால், நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கப்போகிறேன்.  உன் சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன். உன்னிடமிருந்து ஜனக்கூட்டங்கள் உருவாகும், உன்னிடமிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.  உன்னோடும், உன் சந்ததியோடும், அவர்களுக்குப் பின்வரும் எல்லா தலைமுறைகளோடும் நான் செய்திருக்கிற நிரந்தரமான ஒப்பந்தத்தைக் காப்பேன். அதன்படியே, உனக்கும் உன்னுடைய வருங்காலச் சந்ததிக்கும் கடவுளாக இருப்பேன்.  நீ அன்னியனாகத் தங்கியிருக்கிற இந்த கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உன் வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்; நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்” என்று சொன்னார்.  அதன்பின் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் உன் வருங்காலச் சந்ததியும், அவர்களுக்குப் பின்வரும் எல்லா தலைமுறைகளும் என் ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 10  நான் உங்களோடு செய்கிற ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம்* செய்துகொள்ள வேண்டும். நீயும் உன் வருங்காலச் சந்ததியும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். 11  நீங்கள் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். நான் உங்களோடு செய்கிற ஒப்பந்தத்துக்கு இதுதான் அடையாளம். 12  இனிவரும் காலமெல்லாம் உன்னுடைய சந்ததியில் பிறக்கிற ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும். உன் வீட்டில் பிறக்கிற எல்லா ஆண் குழந்தைகளும், உன் சந்ததியில் வராத எல்லா ஆண்களும், மற்ற தேசத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகிற எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். 13  உன் வீட்டில் பிறக்கிற எல்லா ஆண் குழந்தைகளும், நீ விலைக்கு வாங்குகிற எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்; இந்த விருத்தசேதன ஒப்பந்தம் நிரந்தர ஒப்பந்தமாக இருக்க வேண்டும். 14  எந்த ஆணாவது விருத்தசேதனம் செய்யவில்லை என்றால் அவன் கொல்லப்பட வேண்டும்; ஏனென்றால், அவன் என் ஒப்பந்தத்தை மீறுகிறான்” என்று சொன்னார். 15  பின்பு கடவுள் ஆபிரகாமிடம், “நீ உன் மனைவியை இனி சாராய்* என்று கூப்பிடக் கூடாது, இனிமேல் அவளுடைய பெயர் சாராள்.* 16  நான் அவளை ஆசீர்வதித்து, அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன். நான் அவளை ஆசீர்வதிக்கப்போவதால், அவளிடமிருந்து தேசங்கள் உருவாகும், ராஜாக்கள் தோன்றுவார்கள்” என்று சொன்னார். 17  அப்போது ஆபிரகாம் சாஷ்டாங்கமாக விழுந்தார். அதன்பின் சிரித்துக்கொண்டே, “100 வயதில் எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறதா? 90 வயதில் சாராள் பிள்ளையைப் பெற்றெடுக்கப்போகிறாளா?” என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டார். 18  ஆபிரகாம் உண்மைக் கடவுளிடம், “இஸ்மவேலுக்கு உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கட்டுமே!” என்றார். 19  அதற்குக் கடவுள், “உன் மனைவி சாராள் கண்டிப்பாக உனக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுப்பாள். அவனுக்கு நீ ஈசாக்கு* என்று பெயர் வைக்க வேண்டும். என்னுடைய ஒப்பந்தத்தை அவனுக்கும் அவனுடைய வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர ஒப்பந்தமாக உறுதிப்படுத்துவேன். 20  இஸ்மவேலைப் பற்றி நீ சொன்னதைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவன் சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன். அவனிடமிருந்து 12 தலைவர்கள் தோன்றுவார்கள். அவனை நான் மாபெரும் தேசமாக்குவேன். 21  ஆனாலும், அடுத்த வருஷம் இதே சமயம் சாராளுக்குப் பிறக்கப்போகிற ஈசாக்கோடுதான் நான் ஒப்பந்தம் செய்வேன்” என்று சொன்னார். 22  ஆபிரகாமிடம் பேசி முடித்த பின்பு கடவுள் அங்கிருந்து போய்விட்டார். 23  அதன்பின், கடவுள் சொன்னபடியே ஆபிரகாம் தன் மகன் இஸ்மவேலுக்கும் தன் வீட்டில் இருந்த எல்லா ஆண்களுக்கும் அதே நாளில் விருத்தசேதனம் செய்தார். அதாவது, தன் வீட்டில் பிறந்த எல்லா ஆண்களுக்கும், தான் விலைக்கு வாங்கிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்தார். 24  ஆபிரகாமுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவருக்கு 99 வயது. 25  அவருடைய மகன் இஸ்மவேலுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 13 வயது. 26  ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மவேலுக்கும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது. 27  அவருடைய வீட்டில் இருந்த எல்லா ஆண்களுக்கும், அதாவது அவர் வீட்டில் பிறந்த எல்லா ஆண்களுக்கும் மற்ற தேசத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட எல்லா ஆண்களுக்கும், அவரோடு சேர்ந்து விருத்தசேதனம் செய்யப்பட்டது.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “தகப்பன் உயர்ந்தவர்.”
அர்த்தம், “திரளான ஜனங்களுக்குத் தகப்பன்.”
ஒருவேளை இதன் அர்த்தம், “சண்டைக்காரி.”
அர்த்தம், “இளவரசி.”
அர்த்தம், “சிரிப்பு.”