ஆதியாகமம் 21:1-34

  • ஈசாக்கு பிறக்கிறார் (1-7)

  • ஈசாக்கை இஸ்மவேல் கேலி செய்கிறான் (8, 9)

  • ஆகாரும் இஸ்மவேலும் வெளியே அனுப்பப்படுகிறார்கள் (10-21)

  • அபிமெலேக்குடன் ஆபிரகாம் செய்கிற ஒப்பந்தம் (22-34)

21  யெகோவா தான் சொன்னபடியே சாராளுக்குக் கருணை காட்டினார். அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார்.  அதனால் சாராள் கர்ப்பமாகி, வயதான ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தபடியே குறித்த காலத்தில் இது நடந்தது.  சாராள் பெற்றெடுத்த மகனுக்கு ஈசாக்கு என்று ஆபிரகாம் பெயர் வைத்தார்.  கடவுளுடைய கட்டளைப்படியே ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில் அவனுக்கு விருத்தசேதனம் செய்தார்.  ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாமுக்கு 100 வயது.  அப்போது சாராள், “கடவுள் என்னைச் சந்தோஷமாகச் சிரிக்க வைத்திருக்கிறார். இதைக் கேள்விப்படுகிற எல்லாரும் என்னோடு சேர்ந்து* சிரிப்பார்கள்” என்று சொன்னாள்.  அதோடு, “நான் என்னுடைய கணவருக்குக் குழந்தை பெற்றுக் கொடுப்பேன் என்று யாராவது நினைத்திருப்பார்களா? இருந்தாலும், அவருடைய வயதான காலத்தில் அவருக்கு நான் ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்” என்று சொன்னாள்.  ஈசாக்கு வளர்ந்து தாய்ப்பாலை மறந்தான். அன்றைக்கு ஆபிரகாம் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்தார்.  ஆனால், எகிப்தியப் பெண் ஆகார் மூலமாக ஆபிரகாமுக்குப் பிறந்த மகன், ஈசாக்கைக் கேலி செய்வதை சாராள் கவனித்துக்கொண்டே இருந்தாள். 10  அதனால் சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் இவளுடைய மகனையும் துரத்திவிடுங்கள். இவளுடைய மகன் என்னுடைய மகன் ஈசாக்கோடு வாரிசாக இருக்க முடியாது!” என்றாள். 11  ஆனால் ஆபிரகாமுக்கு, தன்னுடைய மகனைப் பற்றி அவள் இப்படிச் சொன்னது மிகவும் வேதனையாக இருந்தது. 12  அப்போது கடவுள் ஆபிரகாமிடம், “உன்னுடைய மகனையும் உன்னுடைய அடிமைப் பெண்ணையும் பற்றி சாராள் சொன்னதை நினைத்து வேதனைப்படாதே. அவளுடைய பேச்சைக் கேள். ஏனென்றால், ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும். 13  உன்னுடைய அடிமைப் பெண்ணின் மகனையும் ஒரு தேசமாக ஆக்குவேன்; ஏனென்றால், அவனும் உன் சந்ததிதான்” என்று சொன்னார். 14  அதனால் ஆபிரகாம் விடியற்காலையில் எழுந்து, உணவையும் ஒரு தோல் பை நிறைய தண்ணீரையும் எடுத்து, ஆகாரின் தோள்மேல் வைத்து, அவளையும் பையனையும் அனுப்பி வைத்தார். அவள் அங்கிருந்து புறப்பட்டுப் போய், பெயெர்-செபாவின் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள். 15  கடைசியில், தோல் பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துபோனபோது அவள் தன்னுடைய பையனை ஒரு புதரின் கீழ் விட்டுவிட்டாள். 16  பின்பு, அம்பு பாயும் தூரத்துக்குப் போய் உட்கார்ந்துகொண்டு, “என் பையன் சாவதை என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லிக் கதறி அழ ஆரம்பித்தாள். 17  அப்போது, அந்தப் பையனுடைய குரலைக் கடவுள் கேட்டார். பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதர் ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகாரே, ஏன் அழுகிறாய்? பயப்படாதே, அங்கே கிடக்கிற உன் மகனுடைய குரலைக் கடவுள் கேட்டார். 18  எழுந்திரு, அவனைத் தூக்கிவிடு, உன் கையால் தாங்கிப் பிடித்துக்கொள். அவனை நான் மாபெரும் தேசமாக்குவேன்” என்று சொன்னார். 19  அதன்பின் கடவுள் அவளுடைய கண்களைத் திறந்ததால், தண்ணீருள்ள ஒரு கிணற்றை அவள் பார்த்தாள். உடனே போய், தோல் பையில் தண்ணீரை நிரப்பி தன் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். 20  கடவுள் அவனோடு இருந்தார். அவன் வனாந்தரத்தில் குடியிருந்தான். வளர்ந்து ஆளான பின்பு அம்புவிடுவதில் அவன் திறமைசாலியாக ஆனான். 21  பாரான் வனாந்தரத்தில் அவன் குடியிருந்தபோது, அவனுடைய அம்மா எகிப்து தேசத்துப் பெண்ணை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தாள். 22  அந்தச் சமயத்தில், அபிமெலேக்கு தன்னுடைய படைத் தளபதி பிகோலைக் கூட்டிக்கொண்டு ஆபிரகாமிடம் வந்து, “நீ செய்கிற எல்லா காரியத்திலும் கடவுள் உன்னோடு இருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது. 23  அதனால், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீ நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டாய் என்று கடவுள் பெயரில் சத்தியம் செய்து கொடு. நான் உனக்கு விசுவாசமாக இருப்பது போல நீயும் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நீ குடியிருக்கிற இந்தத் தேசத்தின் ஜனங்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்” என்று சொன்னார். 24  அதற்கு ஆபிரகாம், “நான் விசுவாசமாக இருப்பேன், இது சத்தியம்” என்றார். 25  ஆனாலும் ஆபிரகாம், அபிமெலேக்கின் ஆட்கள் சண்டைபோட்டுப் பிடுங்கிக்கொண்ட கிணற்றைப் பற்றி அவரிடம் புகார் செய்தார். 26  அதற்கு அபிமெலேக்கு, “யார் அப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. இதுவரை இந்த விஷயத்தைப் பற்றி நீ என்னிடம் எதுவும் சொல்லவில்லை, யாருமே சொல்லவில்லை” என்றார். 27  பின்பு, ஆபிரகாம் அபிமெலேக்குக்கு ஆடுமாடுகளைக் கொடுத்தார். இரண்டு பேரும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். 28  அதன்பின், ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளை மட்டும் ஆபிரகாம் தனியாக நிற்க வைத்தார். 29  அதைப் பார்த்தபோது அபிமெலேக்கு அவரிடம், “ஏன் இந்த ஏழு ஆட்டுக்குட்டிகளை மட்டும் தனியாக நிற்க வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார். 30  அதற்கு ஆபிரகாம், “நான் இந்தக் கிணற்றைத் தோண்டினேன் என்பதற்கு அத்தாட்சியாக இந்த ஏழு ஆட்டுக்குட்டிகளை என்னிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார். 31  பின்பு, அந்த இடத்துக்கு பெயெர்-செபா* என்று பெயர் வைத்தார். ஏனென்றால், அந்த இடத்தில் இரண்டு பேரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். 32  அவர்கள் இரண்டு பேரும் பெயெர்-செபாவில் ஒப்பந்தம் செய்த பின்பு, அபிமெலேக்கும் அவருடைய படைத் தளபதி பிகோலும் பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் திரும்பிப் போனார்கள். 33  பின்பு, பெயெர்-செபாவில் ஆபிரகாம் ஒரு சவுக்கு மரத்தை நட்டு வைத்தார். என்றென்றுமுள்ள கடவுளான யெகோவாவின் பெயரை அங்கே போற்றிப் புகழ்ந்தார். 34  பெலிஸ்தியர்களின் தேசத்தில் ஆபிரகாம் நிறைய காலம் தங்கியிருந்தார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “என்னைப் பார்த்து.”
அர்த்தம், “உறுதிமொழியின் கிணறு; ஏழின் கிணறு.”