ஆதியாகமம் 3:1-24

  • பாவத்தின் ஆரம்பம் (1-13)

    • முதல் பொய் (4, 5)

  • யெகோவாவின் பேச்சை மீறியவர்களுக்குத் தண்டனை (14-24)

    • பெண்ணின் சந்ததி பற்றி முன்னறிவிக்கப்படுகிறது (15)

    • ஏதேனிலிருந்து துரத்தப்படுகிறார்கள் (23, 24)

3  கடவுளாகிய யெகோவா படைத்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட பாம்பு மிகவும் ஜாக்கிரதையானதாக* இருந்தது. அது அந்தப் பெண்ணிடம், “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?” என்று கேட்டது.  அதற்கு அந்தப் பெண், “தோட்டத்தில் இருக்கிற மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம்.  ஆனால், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தை நாங்கள் சாப்பிடக் கூடாது என்றும், தொடக் கூடாது என்றும் கடவுள் சொல்லியிருக்கிறார். மீறினால் நாங்கள் செத்துப்போவோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்” என்றாள்.  அப்போது அந்தப் பாம்பு அவளிடம், “நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள்.  நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு* கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்” என்று சொன்னது.  அதன்பின், அந்த மரத்தின் பழம் அவளுடைய கண்களுக்கு மிகவும் நல்ல* பழமாகவும், அழகான பழமாகவும் தெரிந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆசையாக இருந்தது. அதனால், அந்தப் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். பிறகு, தன் கணவனோடு இருந்தபோது அவனுக்கும் கொஞ்சம் கொடுத்தாள், அவனும் சாப்பிட்டான்.  உடனே, அவர்கள் இரண்டு பேருடைய கண்களும் திறந்தன, தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள். அதனால், அத்தி இலைகளைத் தைத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்கள்.  பின்பு, தென்றல் காற்று வீசும் சாயங்கால வேளையில் கடவுளாகிய யெகோவா தோட்டத்தில் நடந்துகொண்டிருந்த சமயத்தில், அந்த மனிதனும் அவன் மனைவியும் அவருடைய குரலைக் கேட்டார்கள். கடவுளாகிய யெகோவாவின் கண்ணில் படாமல் இருப்பதற்காக அவர்கள் உடனே தோட்டத்திலுள்ள மரங்களுக்கு நடுவில் ஒளிந்துகொண்டார்கள்.  அப்போது கடவுளாகிய யெகோவா அந்த மனிதனிடம், “நீ எங்கே இருக்கிறாய்?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார். 10  கடைசியாக அவன், “தோட்டத்தில் உங்களுடைய குரலைக் கேட்டேன், ஆனால் நான் நிர்வாணமாக இருப்பதால் பயந்து ஒளிந்துகொண்டேன்” என்று சொன்னான். 11  அதற்கு அவர், “நீ நிர்வாணமாக இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடக் கூடாது என்று நான் சொல்லியிருந்த மரத்தின் பழத்தை நீ சாப்பிட்டாயா?” என்று கேட்டார். 12  அதற்கு அவன், “என்னோடு இருப்பதற்காக நீங்கள் எனக்குத் தந்த பெண்தான் அந்த மரத்தின் பழத்தைக் கொடுத்தாள், அதனால் சாப்பிட்டேன்” என்று சொன்னான். 13  அப்போது கடவுளாகிய யெகோவா அந்தப் பெண்ணிடம், “நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “அந்தப் பாம்புதான் என்னை ஏமாற்றியது, அதனால்தான் சாப்பிட்டேன்” என்று சொன்னாள். 14  பின்பு கடவுளாகிய யெகோவா அந்தப் பாம்பிடம், “நீ இப்படிச் செய்ததால், வீட்டு விலங்குகள் எல்லாவற்றிலும் காட்டு மிருகங்கள் எல்லாவற்றிலும் நீ சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றில் ஊர்ந்து போவாய், உன் வாழ்நாளெல்லாம் மண்ணைத் தின்பாய். 15  உனக்கும் பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார்,* நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்”* என்று சொன்னார். 16  கடவுள் அந்தப் பெண்ணிடம், “நீ கர்ப்பமாக இருக்கும்போது உன் வலியை ரொம்பவே அதிகமாக்குவேன். வலியோடுதான் நீ பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய். உன் கணவன்மேல் ஏக்கமாகவே இருப்பாய், அவன் உன்னை அடக்கி ஆளுவான்” என்றார். 17  பின்பு அவர் ஆதாமிடம்,* “நீ உன் மனைவியின் பேச்சைக் கேட்டு, ‘சாப்பிடக் கூடாது’ என்று நான் சொல்லியிருந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட்டதால் இந்த நிலம் சபிக்கப்பட்டிருக்கும். வயிற்றுப்பிழைப்புக்காக உன் வாழ்நாளெல்லாம் நீ சிரமப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும். 18  நிலத்தில் முட்செடிகளும் முட்புதர்களும் முளைக்கும். அதில் விளைவதைத்தான் நீ சாப்பிட வேண்டும். 19  நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்றார். 20  அதன்பின், ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள்* என்று பெயர் வைத்தான். ஏனென்றால், அவள்தான் உயிருள்ள எல்லாருக்கும் தாய். 21  கடவுளாகிய யெகோவா நீளமான தோல் உடைகளைச் செய்து ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் கொடுத்தார். 22  பின்பு, கடவுளாகிய யெகோவா இப்படிச் சொன்னார்: “இதோ, நன்மை தீமையைத் தெரிந்துகொள்வதில்* மனிதன் நம்மைப் போல ஆகிவிட்டான். இப்போது அவன் வாழ்வுக்கான மரத்தின் பழத்தையும் பறித்துச் சாப்பிட்டு என்றென்றும் வாழாதபடி,—” 23  இப்படிச் சொல்லிவிட்டு, கடவுளாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அவனை மண்ணிலேயே வேலை செய்வதற்காகத் துரத்திவிட்டார். 24  அவனைத் துரத்திய பின்பு, வாழ்வுக்கான மரத்துக்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்கு ஏதேன் தோட்டத்தின் கிழக்கே கேருபீன்களை நிறுத்தினார். சுடர்விட்டபடி எப்போதும் சுழன்றுகொண்டிருந்த வாளையும் அங்கே வைத்தார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தந்திரமுள்ளதாக.”
அதாவது, “தீர்மானித்து.”
வே.வா., “ருசியான.”
வே.வா., “நொறுக்குவார்.”
வே.வா., “காயப்படுத்துவாய்.”
ஆதாம் என்ற பெயரின் அர்த்தம், “மனிதன்; மனித இனம்.”
அர்த்தம், “உயிருள்ளவள்.”
அதாவது, “தீர்மானிப்பதில்.”