ஆதியாகமம் 48:1-22

  • யோசேப்பின் இரண்டு மகன்களையும் யாக்கோபு ஆசீர்வதிக்கிறார் (1-12)

  • எப்பிராயீமுக்கு அதிக ஆசீர்வாதம் கிடைக்கிறது (13-22)

48  பிற்பாடு, “உங்களுடைய அப்பாவின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வருகிறது” என்று யோசேப்பிடம் சொல்லப்பட்டது. உடனே, அவர் தன்னுடைய இரண்டு மகன்களான மனாசேயையும் எப்பிராயீமையும் கூட்டிக்கொண்டு தன்னுடைய அப்பாவைப் பார்க்கப் போனார்.  “உங்கள் மகன் யோசேப்பு வந்திருக்கிறார்” என்று யாக்கோபிடம் சொல்லப்பட்டது. அவர் தன்னுடைய பலத்தையெல்லாம் திரட்டி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.  பின்பு யோசேப்பிடம், “சர்வவல்லமையுள்ள கடவுள் கானான் தேசத்திலுள்ள லஸ் நகரத்தில் எனக்குத் தோன்றி என்னை ஆசீர்வதித்தார்.  அப்போது அவர் என்னிடம், ‘நான் உன்னை ஏராளமாகப் பெருக வைப்பேன். உன்னுடைய சந்ததியை ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆக்குவேன். உனக்குப்பின் வரும் உன் வம்சத்துக்கு இந்தத் தேசத்தை நிரந்தர சொத்தாகத் தருவேன்’ என்றார்.  எகிப்து தேசத்துக்கு நான் வருவதற்குமுன் உனக்குப் பிறந்த இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள். ரூபனையும் சிமியோனையும் போலவே எப்பிராயீமும் மனாசேயும் என்னுடைய மகன்களாக இருப்பார்கள்.  ஆனால், இவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் உன் பிள்ளைகளாக இருப்பார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களுடைய சகோதரர்களின் நிலத்தில் ஒரு பங்கு கிடைக்கும்.  பதானைவிட்டு நான் வரும்போது, கானான் தேசத்தில் உன் அம்மா ராகேல் இறந்துபோனாள். அப்போது, நான் அவள் பக்கத்தில்தான் இருந்தேன். எப்பிராத்து என்ற பெத்லகேம் ரொம்பத் தூரத்தில் இருந்ததால் எப்பிராத்துக்குப் போகும் வழியிலேயே அவளை அடக்கம் செய்தேன்” என்றார்.  பின்பு, இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டார்.  அப்போது யோசேப்பு தன் அப்பாவிடம், “இந்தத் தேசத்தில் கடவுள் எனக்குத் தந்த மகன்கள்” என்றார். அதற்கு அவர், “தயவுசெய்து அவர்களை என் பக்கத்தில் கொண்டுவா, நான் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றார். 10  இஸ்ரவேல் வயதானவராக இருந்ததால் அவருடைய பார்வை மங்கியிருந்தது, அவரால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அதனால், யோசேப்பு அவர்களை அவர் பக்கத்தில் கொண்டுபோய் நிற்க வைத்தார். அவர் அவர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். 11  இஸ்ரவேல் யோசேப்பிடம், “உன்னுடைய முகத்தைப் பார்ப்பேன் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. ஆனால், இப்போது கடவுள் உன்னுடைய வாரிசுகளைப் பார்க்கும் பாக்கியத்தைக்கூட தந்திருக்கிறார்” என்றார். 12  அதன்பின், யோசேப்பு இஸ்ரவேலின் முழங்கால் பக்கத்திலிருந்த தன்னுடைய மகன்களைப் பின்னால் தள்ளி நிற்க வைத்துவிட்டு, மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். 13  பின்பு, யோசேப்பு அவர்கள் இரண்டு பேரையும் இஸ்ரவேலுக்குப் பக்கத்தில் நிற்க வைத்தார். எப்பிராயீமைத் தன்னுடைய வலது கையால் பிடித்து இஸ்ரவேலின் இடது பக்கத்திலும், மனாசேயைத் தன்னுடைய இடது கையால் பிடித்து இஸ்ரவேலின் வலது பக்கத்திலும் நிற்க வைத்தார். 14  ஆனால், இஸ்ரவேல் தன்னுடைய வலது கையை எப்பிராயீமின் தலையிலும் இடது கையை மனாசேயின் தலையிலும் வைத்தார். மனாசேதான் மூத்தவன் என்று தெரிந்திருந்தும் அப்படிச் செய்தார். 15  பின்பு அவர் யோசேப்பை ஆசீர்வதித்து, “என் தாத்தா ஆபிரகாமும் என் அப்பா ஈசாக்கும் வணங்கிய உண்மைக் கடவுள்என் வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தி* வந்திருக்கிறார். 16  எல்லா துன்பத்திலும் தேவதூதர் மூலம் என்னைக் காப்பாற்றியிருக்கிறார். அந்த உண்மைக் கடவுள் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கட்டும். என் பெயரும் என் தாத்தா ஆபிரகாமின் பெயரும் என் அப்பா ஈசாக்கின் பெயரும் இவர்கள் மூலமாக நிலைத்திருக்கட்டும்.இந்தப் பூமியில் இவர்கள் ஏராளமாகப் பெருகட்டும்” என்றார். 17  எப்பிராயீமின் தலையில் தன்னுடைய அப்பா வலது கையை வைத்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவருடைய கையை எப்பிராயீமின் தலையிலிருந்து எடுத்து மனாசேயின் தலையில் வைக்கப் போனார். 18  அப்போது தன் அப்பாவிடம், “அப்பா, நீங்கள் கையை மாற்றி வைத்திருக்கிறீர்கள். இவன்தான் மூத்த மகன். உங்களுடைய வலது கையை இவனுடைய தலையில் வையுங்கள்” என்றார். 19  ஆனால் அவருடைய அப்பா கொஞ்சமும் சம்மதிக்காமல், “தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆவான், இவனும் பலம்படைத்தவனாக ஆவான். ஆனால், இவனுடைய தம்பி இவனைவிட அதிக பலம்படைத்தவனாக ஆவான். இவனுடைய தம்பியின் சந்ததி மாபெரும் தேசங்களைப் போலப் பெருகும்” என்றார். 20  பின்பு அவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதித்து, “இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது,‘கடவுள் உன்னை எப்பிராயீமைப் போலவும் மனாசேயைப் போலவும் ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று சொல்லட்டும்” என்றார். இப்படி, அவர் மனாசேயைவிட எப்பிராயீமை உயர்த்தினார். 21  அதன்பின் இஸ்ரவேல் யோசேப்பிடம், “சீக்கிரத்தில் நான் சாகப்போகிறேன். ஆனால், கடவுள் எப்போதும் உங்கள் எல்லாரோடும் இருப்பார். உங்களுடைய முன்னோர்களின் தேசத்துக்கே உங்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு போவார். 22  நான் உன் சகோதரர்களுக்குக் கொடுப்பதைவிட ஒரு பங்கு அதிகமான நிலத்தை உனக்குத் தருகிறேன். வாளோடும் வில்லோடும் எமோரியர்களுடன் போராடி நான் பெற்ற நிலம் அது” என்றார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மேய்த்து.”