ஆதியாகமம் 49:1-33

  • மரணப் படுக்கையில் யாக்கோபு தீர்க்கதரிசனம் சொல்கிறார் (1-28)

    • யூதாவிலிருந்து ஷைலோ வருவார் (10)

  • தன்னை எங்கே அடக்கம் செய்ய வேண்டுமென்று யாக்கோபு சொல்கிறார் (29-32)

  • யாக்கோபின் மரணம் (33)

49  பின்பு, யாக்கோபு தன்னுடைய மகன்களைக் கூப்பிட்டு, “எல்லாரும் கூடிவந்து நில்லுங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நடக்கப்போவதை நான் சொல்கிறேன்.  யாக்கோபின் மகன்களே, எல்லாரும் கூடிவந்து கேளுங்கள். உங்களுடைய அப்பா இஸ்ரவேல் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.  ரூபன்! நீ என்னுடைய மூத்த மகன், நீ என்னுடைய வலிமை, நீ என்னுடைய முதல் வாரிசு.* நீ மகா கண்ணியமும் மகா பலமும் பெற்றிருந்தாய்.  ஆனால், நீ உயர்வடைய மாட்டாய். ஏனென்றால், கொந்தளிக்கும் தண்ணீரைப் போல அடங்காமல் போய்விட்டாய். உன் அப்பாவின் படுக்கைக்கே போய் அதைக் களங்கப்படுத்தினாய். இவன் என்னுடைய படுக்கைக்கே போய்விட்டானே!  சிமியோனும் லேவியும் சகோதரர்கள். அவர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் இறங்குகிறார்கள்.  என் உயிரே, அவர்களுடைய கூட்டத்தில் சேராதே. என் மேன்மையே,* அவர்களுடைய நட்பைத் தேடாதே. அவர்கள் கோபத்தில் ஆட்களை வெட்டிக் கொன்றார்கள். வீம்புக்காக எருதுகளை நொண்டியாக்கினார்கள்.*  அவர்களுடைய கோபம் வெறித்தனமானது, அது சபிக்கப்படட்டும். அவர்களுடைய ஆத்திரம் கண்மூடித்தனமானது, அது சபிக்கப்படட்டும். யாக்கோபின் தேசத்திலும் இஸ்ரவேலின் தேசத்திலும் அவர்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.  யூதா! உன் சகோதரர்கள் உன்னைப் புகழ்வார்கள். உன்னுடைய கை எதிரிகளின் கழுத்தைப் பிடிக்கும். உன்னுடைய அப்பாவின் மகன்கள் உனக்கு முன்னால் தலைவணங்குவார்கள்.  யூதா ஒரு சிங்கக்குட்டி! என் மகனே, நீ இரையைத் தின்றுவிட்டு எழுந்துபோவாய். சிங்கத்தைப் போலக் கால்நீட்டிப் படுத்திருப்பாய். அவன் ஒரு சிங்கம், அவனை எழுப்ப யாருக்குத் துணிச்சல் இருக்கிறது? 10  ஷைலோ* வரும்வரை யூதாவைவிட்டு செங்கோல் விலகாது, அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள். 11  யூதா தன்னுடைய கழுதையைத் திராட்சைக் கொடியிலும் கழுதைக்குட்டியைச் செழிப்பான திராட்சைக் கொடியிலும் கட்டிவைப்பான். தன்னுடைய உடையைத் திராட்சமதுவிலும், தன்னுடைய அங்கியைத் திராட்சரசத்திலும் துவைப்பான். 12  அவனுடைய கண்கள் திராட்சமதுவினால் சிவந்திருக்கின்றன. அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாக இருக்கின்றன. 13  செபுலோன், கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கிற கடற்கரைக்குப் பக்கத்தில் குடியிருப்பான். அவனுடைய எல்லை சீதோனின் திசையில் இருக்கும். 14  இசக்கார், இரண்டு மூட்டைகளைச் சுமந்துகொண்டே படுத்திருக்கிற வலிமையான கழுதை. 15  அவன் குடியிருக்கிற தேசம் அருமையாகவும் அழகாகவும் இருப்பதைப் பார்ப்பான். சுமை சுமப்பதற்காகத் தோளைச் சாய்ப்பான், கொத்தடிமைபோல் வேலை செய்வான். 16  தாண், இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாக இருந்து, தன்னுடைய ஜனங்களுக்கு நீதி வழங்குவான். 17  கொம்பு விரியன் பாம்பு எப்படி வழியோரத்தில் படுத்துக்கொண்டு, குதிரையின் குதிங்காலைக் கடித்து, அதன்மேல் சவாரி செய்பவனைப் பின்பக்கமாக விழ வைக்குமோ அப்படித்தான் அவனும் செய்வான். 18  யெகோவாவே, உங்கள் மீட்புக்காக நான் காத்திருப்பேன். 19  காத்தை ஒரு கொள்ளைக்கூட்டம் தாக்க வரும், ஆனால் அவன் அந்தக் கூட்டத்தைத் துரத்திக்கொண்டு போய்த் தாக்குவான். 20  ஆசேரிடம் உணவு ஏராளமாக இருக்கும், ராஜாக்கள் சாப்பிடும் உணவைத் தருவான். 21  நப்தலி, பாய்ந்தோடும் மான். இனிமையான வார்த்தைகளைப் பேசுவான். 22  யோசேப்பு, நீரூற்றுக்குப் பக்கத்திலுள்ள பழ மரத்தின் அடிக்கன்று; அதன் கிளைகள் மதில்மேல் படர்ந்திருக்கும். 23  வில்வீரர்கள் அவனுக்கு எப்போதும் தொல்லை கொடுத்தார்கள். அவன்மேல் அம்புகளை எறிந்தார்கள். அவனைப் பகைத்துக்கொண்டே இருந்தார்கள். 24  ஆனால், அவனும் வில்லைக் கையில் தயாராக வைத்திருந்தான். அவனுடைய கைகள் வலிமையுடனும் துடிப்புடனும் இருந்தன. இஸ்ரவேலின் மூலைக்கல்லாகவும் மேய்ப்பராகவும் யாக்கோபுக்கு வலிமைமிக்கவராகவும் இருந்தவர்தான்* அதற்குக் காரணம். 25  அவனை* அவனுடைய அப்பாவின் கடவுள் அன்பளிப்பாகக் கொடுத்தார். கடவுள் அவனுக்குக் கைகொடுப்பார். சர்வவல்லமையுள்ளவரோடு அவன் இருக்கிறான். வானத்திலிருந்தும் பூமியின் ஆழத்திலிருந்தும் கடவுள் அவனுக்கு ஆசீர்வாதங்களைத் தருவார். ஏராளமான பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் தந்து ஆசீர்வதிப்பார். 26  உன் அப்பா தந்திருக்கிற ஆசீர்வாதங்கள், நிலையான மலைகளுக்கும் குன்றுகளுக்கும் இருக்கிற சிறப்புகளைவிட சிறந்ததாக இருக்கும். அந்த ஆசீர்வாதங்கள் எப்போதும் யோசேப்பின் மேல் தங்கும். அவன் தன்னுடைய சகோதரர்களிலிருந்து விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். 27  பென்யமீன், ஓநாயைப் போல் எப்போதும் கடித்துக் குதறுவான். காலையில் தன்னுடைய இரையைத் தின்பான்; சாயங்காலத்தில், தான் கைப்பற்றியதைப் பங்குபோடுவான்” என்றார். 28  அந்த 12 பேரிலிருந்துதான் இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் வந்தன. அவர்களுடைய அப்பா அவர்களை ஆசீர்வதித்தபோது இதைத்தான் சொன்னார். அவரவருக்குத் தகுந்த ஆசீர்வாதத்தைத் தந்தார். 29  அதன்பின் அவர்களிடம், “நான் சீக்கிரத்தில் சாகப்போகிறேன்.* ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையில் என்னை அடக்கம் செய்யுங்கள். அங்குதான் என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். 30  கானான் தேசத்தில் மம்ரேக்குப் பக்கத்திலே மக்பேலாவில் உள்ள நிலத்தில் அந்தக் குகை இருக்கிறது. ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் அந்த நிலத்தைக் கல்லறை நிலமாக விலைக்கு வாங்கினார். 31  அங்கேதான் ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கேதான் ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கேதான் லேயாளை நான் அடக்கம் செய்தேன். 32  அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டன” என்று சொன்னார். 33  யாக்கோபு தன்னுடைய மகன்களுக்கு இந்த எல்லா அறிவுரைகளையும் கொடுத்துவிட்டு, தன்னுடைய கால்களைத் தூக்கிக் கட்டில்மேல் வைத்துப் படுத்தார். அதன்பின் இறந்துபோனார்.*

அடிக்குறிப்புகள்

வே.வா., “என்னுடைய ஆண்மையின் முதல் பலன்.”
அல்லது, “மனமே.”
அதாவது, “எருதுகளின் பின்தொடை தசைநார்களை வெட்டினார்கள்.”
அர்த்தம், “உரிமைக்காரர்.”
யெகோவாவையும் குறிக்கலாம் யோசேப்பையும் குறிக்கலாம்.
அதாவது, “யோசேப்பை.”
நே.மொ., “என் முன்னோர்களுடன் சேர்க்கப்படப்போகிறேன்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்பட்டார்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.