ஆபகூக் 1:1-17
1 ஒரு தரிசனத்தில் ஆபகூக்* தீர்க்கதரிசிக்குக் கிடைத்த செய்தி இதுதான்:
2 அவர் கடவுளிடம், “யெகோவாவே, நான் எவ்வளவு காலத்துக்குத்தான் உதவிக்காகக் கதறுவேன், நீங்கள் ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?+
வன்முறையிலிருந்து காப்பாற்றும்படி எவ்வளவு காலத்துக்குத்தான் கேட்பேன், ஏன் கண்டுகொள்ளாமல்* இருக்கிறீர்கள்?+
3 என்னை ஏன் அக்கிரமங்களைப் பார்க்க வைக்கிறீர்கள்?
கொடுமைகள் நடப்பதை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?
நாச வேலைகளும் வன்முறைகளும் ஏன் என்னுடைய கண் முன்னாலேயே நடக்கின்றன?
எங்கு பார்த்தாலும் ஏன் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது?
4 சட்டத்தை யாரும் மதிப்பதே இல்லை.எங்குமே நியாயம் இல்லை.
நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைக்கிறான்.அதனால்தான், நீதி புரட்டப்படுகிறது”+ என்று சொன்னார்.
5 “ஜனங்களே, சுற்றியுள்ள தேசங்களைக் கூர்ந்து கவனியுங்கள்!
ஏனென்றால், உங்களுடைய காலத்தில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறது.அதைப் பற்றிச் சொன்னால்கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
ஆனாலும், அதை ஆச்சரியத்தோடு பாருங்கள்; பார்த்து அதிர்ச்சி அடையுங்கள்.+
6 நான் கல்தேயர்களை வரவழைப்பேன்.+அவர்கள் ஈவிரக்கம் இல்லாதவர்கள், கண்மூடித்தனமாகத் தாக்குபவர்கள்.
பெரிய பெரிய தேசங்கள்மேல் படையெடுப்பவர்கள்.
தங்களுக்குச் சொந்தமில்லாத இடங்களைக் கைப்பற்றுபவர்கள்.+
7 அவர்கள் கொடூரமானவர்கள், பயங்கரமானவர்கள்.
அவர்களே தங்களுக்குச் சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்,
அவர்களே அதிகாரத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.*+
8 அவர்களுடைய குதிரைகள் சிறுத்தையைவிட வேகமாக ஓடும்.ராத்திரியில் திரிகிற ஓநாய்களைவிட மூர்க்கமாக இருக்கும்.+
அவர்களுடைய போர்க்குதிரைகள் துள்ளிக் குதித்து ஓடும்.அவை வெகு தூரத்திலிருந்து வரும்.
இரையைப் பார்த்ததும் அதன்மேல் பாய்கிற கழுகு போல வேகமாகப் பாயும்.+
9 அவர்கள் எல்லாவற்றையும் நொறுக்கிப்போட படைதிரண்டு வருவார்கள்.+
சுட்டெரிக்கும் கிழக்குக் காற்றைப் போல வேகமாக வருவார்கள்.+மணலை அள்ளுவது போல ஜனங்களை அள்ளிக்கொண்டு போவார்கள்.
10 ராஜாக்களை அவர்கள் கிண்டல் செய்வார்கள்.உயர் அதிகாரிகளை ஏளனம் பண்ணுவார்கள்.+
கோட்டைகளைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பார்கள்.+மண்மேடுகளை எழுப்பி அந்தக் கோட்டைகளைக் கைப்பற்றுவார்கள்.
11 காற்றைப் போல வேகமாகத் தேசத்தைக் கடந்து போவார்கள்.ஆனால், தங்கள் தெய்வம்தான் தங்களுக்குப் பலம் தந்ததாகச் சொல்வார்கள்.*+அதனால், குற்றவாளிகளாக ஆவார்கள்.”+
12 யெகோவாவே, நீங்கள் என்றென்றும் இருப்பவர்.+
என் கடவுளே, பரிசுத்தமான கடவுளே, உங்களுக்குச் சாவு என்பதே இல்லை.*+
யெகோவாவே, எங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பைக் கொடுக்கத்தான் அவர்களை நியமித்தீர்கள்.கற்பாறை போன்றவரே,+ எங்களைத் தண்டிப்பதற்குத்தான்* அவர்களை வரவழைத்தீர்கள்.+
13 மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!அக்கிரமங்களை உங்களால் சகிக்க முடியாதே!+
அப்படியிருந்தும், நயவஞ்சகர்களை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?+நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைப்பதைப் பார்த்து ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?+
14 கடல்மீன்களைப் போலவும் ஆதரவில்லாத* கடல் பிராணிகளைப் போலவும்மனிதர்கள் நடத்தப்படுவதற்கு ஏன் விடுகிறீர்கள்?
15 அவர்கள் எல்லாரையும் எதிரி* தூண்டிலில் பிடிக்கிறான்.மீன்பிடிக்கும் வலையால் இழுக்கிறான்.
அதில் வாரிக்கொள்கிறான்.
அதனால், சந்தோஷத்தில் துள்ளுகிறான்.+
16 தன்னுடைய வலைகளுக்கு அவன் பலிகளைச் செலுத்துகிறான்.அவற்றுக்குத் தூபம் காட்டுகிறான்.ஏனென்றால், அவற்றால்தான் அவனுக்குச் செல்வம் குவிந்தது,*
அருமையான உணவும் கிடைத்தது.
17 அப்படியானால், அவன் தன் வலையை விரித்துக்கொண்டே இருப்பானா?*
கரிசனை இல்லாமல் ஜனங்களைக் கொன்று குவித்துக்கொண்டே இருப்பானா?+
அடிக்குறிப்புகள்
^ ஒருவேளை இதன் அர்த்தம், “இறுக்கமாகக் கட்டிப்பிடித்தல்.”
^ வே.வா., “காப்பாற்றாமல்.”
^ வே.வா., “தங்களை உயர்த்திக்கொள்கிறார்கள்.”
^ அல்லது, “அவர்களுடைய பலம்தான் அவர்களுக்குத் தெய்வம்.”
^ அல்லது, “நாங்கள் சாகப்போவதே இல்லை.”
^ வே.வா., “கண்டிப்பதற்குத்தான்.”
^ வே.வா., “அதிகாரி இல்லாத.”
^ அதாவது, “கல்தேயன்.”
^ நே.மொ., “கொழுமையான பங்கு கிடைத்தது.”
^ அல்லது, “வாளை உருவிக்கொண்டே இருப்பானா?”