ஆபகூக் 2:1-20

  • “அவர் என்ன செய்தி சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்” (1)

  • தீர்க்கதரிசிக்கு யெகோவா கொடுக்கும் பதில் (2-20)

    • ‘தரிசனத்துக்காகக் காத்திரு’ (3)

    • உண்மையாக இருப்பதன் மூலம் நீதிமான் வாழ்வு பெறுவான் (4)

    • கல்தேயர்களுக்கு வரும் ஐந்து கேடுகள் (6-20)

      • பூமி யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும் (14)

2  நான் ஒரு காவலாளியைப் போல நின்றுகொண்டிருப்பேன்.+அரண்மேல்* ஏறி நிற்பேன். என் மூலம் அவர் என்ன செய்தி சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்.அவர் என்னைக் கண்டிக்கும்போது என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பேன்.   யெகோவா என்னிடம் இப்படிச் சொன்னார்: “இந்தத் தரிசனத்தை எழுதி வை, பலகைகளில் தெளிவாகச் செதுக்கி வை.+அப்போதுதான், அதைச் சரளமாக வாசித்துக் காட்ட முடியும்.+   நிறைவேற வேண்டிய காலத்தில் தரிசனம் நிறைவேறும்.அது வேகமாய் வந்துகொண்டிருக்கிறது; அது வராமல் போகாது.* ரொம்ப நாட்கள் ஆவதுபோல் தெரிந்தாலும் அதற்காகக் காத்திரு.*+ தரிசனம் நிச்சயம் நிறைவேறும். அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!   உண்மையாக இருப்பதன் மூலம்* நீதிமான் வாழ்வு பெறுவான்.+ஆனால், தலைக்கனம் பிடித்தவனைப் பார். அவனுடைய மனதில் நேர்மையே இல்லை.   திராட்சமதுவும் ஏமாற்றுவதால்,அவன்* தன்னுடைய லட்சியத்தை அடையவே மாட்டான். கல்லறையைப் போலப் பேராசையோடும்,மரணத்தைப் போலத் திருப்தி அடையாமலும் இருக்கிறான். தேசங்களைச் சளைக்காமல் கைப்பற்றுகிறான்.ஜனங்கள் எல்லாரையும் வளைத்துப் பிடிக்கிறான்.+   அவர்கள் எல்லாரும் அவனைக் கேலி செய்து நக்கலாகவும் குத்தலாகவும் பேசுவார்கள்.+ அவனைப் பார்த்து இப்படிச் சொல்வார்கள்: ‘மற்றவர்களுக்குச் சொந்தமானதைப் பிடுங்கிக்கொள்பவனே, உனக்குக் கேடுதான் வரும்! இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படிச் செய்வாய்?உன் கடனை அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறாயே!   உனக்குக் கடன் கொடுத்தவர்கள் திடீரென்று உன்மேல் பாய்வார்கள். அவர்கள் விழித்துக்கொண்டு, உன்னைப் பயங்கரமாக உலுக்கியெடுப்பார்கள்.உன்னைச் சூறையாடுவார்கள்.+   மற்ற தேசங்களையெல்லாம் நீ சூறையாடினாயே.ஜனங்களின் இரத்தத்தைச் சிந்தினாயே.பூமியில் நாச வேலைகளைச் செய்தாயே.நகரங்களையும் அங்குள்ள ஜனங்களையும் பாழாக்கினாயே.+இப்போது, மீதியிருக்கிற ஜனங்கள் உன்னைச் சூறையாடுவார்கள்.+   குடும்பத்துக்காக* குறுக்கு வழியில் சம்பாதிக்கிறவனே, உனக்குக் கேடுதான் வரும்!அழிவின் பிடியிலிருந்து நீ தப்பிக்க நினைக்கிறாய்.அதற்காக உயரமான இடத்தில் தங்குவதற்குத் திட்டமிடுகிறாய். 10  சதித்திட்டங்கள் தீட்டுவதால் உன் குடும்பத்துக்கு அவமானத்தைத் தேடிக்கொள்கிறாய். ஜனங்களைக் கொன்று குவிப்பதால் உனக்கு எதிராகவே நீ பாவம் செய்கிறாய்.+ 11  அதனால், சுவரிலுள்ள கல் உனக்கு எதிராகக் கூச்சல்போடும்.கூரையிலுள்ள மரச்சட்டம் அதை எதிரொலிக்கும். 12  ஜனங்களின் இரத்தத்தைச் சிந்தி நகரத்தைக் கட்டுகிறவனுக்கும்,அநீதியினால் ஒரு ஊரை உருவாக்குகிறவனுக்கும் கேடுதான் வரும்! 13  ஜனங்களின் உழைப்பெல்லாம் நெருப்புக்குப் பலியாகிறது.தேசங்கள் படும் பாடுகளெல்லாம் வீணாகிறது. இப்படி நடக்கும்படி செய்பவர் பரலோகப் படைகளின் யெகோவாதான்.+ 14  கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போலபூமி முழுவதும் யெகோவாவின் மகிமையைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+ 15  ஆத்திரத்தோடும் கோபத்தோடும் நண்பர்களுக்கு மதுபானம் கொடுப்பவனே,உனக்குக் கேடுதான் வரும்!போதையேறும் அளவுக்கு நீ அவர்களைக் குடிக்க வைக்கிறாய். அவர்களுடைய நிர்வாணத்தைப் பார்ப்பதற்காகவே இப்படிச் செய்கிறாய்! 16  நீ பேரும் புகழும் அடைவதற்குப் பதிலாகப் பெருத்த அவமானம் அடைவாய். நீயும் நன்றாகக் குடி! விருத்தசேதனம் செய்யப்படாத உன் கோலத்தை எல்லாருக்கும் காட்டு!* யெகோவாவின் வலது கையிலிருக்கும் கோப்பை உன்னிடம் வரும்.+அப்போது, உன் புகழை இழந்து கேவலப்பட்டுப்போவாய். 17  நீ ஜனங்களின் இரத்தத்தைச் சிந்தினாய்.பூமியில் கொடுமைகள் செய்தாய்.நகரங்களையும் ஜனங்களையும் நாசமாக்கினாய்.லீபனோனுக்குக் கொடுமை செய்தாய், அது போல நீயும் கொடுமை செய்யப்படுவாய்.மிருகங்களை அழித்தாய், அது போல நீயும் அழிக்கப்படுவாய்.+ 18  சிலையைச் செதுக்குகிறவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்?அவன் கையால்தானே அதைச் செதுக்கினான்? உலோகச் சிலையையும் பொய்யைப் போதிக்கிற சிலையையும்அவன் நம்பினாலும் அவற்றால் என்ன பிரயோஜனம்?அவை ஒன்றுக்கும் உதவாத ஊமைத் தெய்வங்கள்தானே?+ 19  ஒரு மரத்துண்டைப் பார்த்து, “கடவுளே, கண்திறக்க மாட்டாயா?” என்று கேட்கிறவனுக்கும், பேச முடியாத கல்லைப் பார்த்து, “இறைவா, கண் திறந்து எங்களுக்கு நல்ல வழி காட்டு” என்று சொல்கிறவனுக்கும் கேடுதான் வரும்! அவை தங்கத்தாலும் வெள்ளியாலும் முலாம் பூசப்பட்டிருக்கின்றன.+அவற்றுக்கு உயிர்மூச்சே இல்லை.+ 20  ஆனால், யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.+ பூமியெல்லாம் அவருக்கு முன்னால் அமைதியாக இருக்கட்டும்.’”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மண்மேட்டின் மேல்.”
வே.வா., “பொய்த்துப்போகாது.”
வே.வா., “அது தாமதித்தாலும் அதற்காக ஆவலோடு எதிர்பார்த்திரு.”
அல்லது, “விசுவாசத்தினால்; நம்பிக்கையினால்.”
நே.மொ., “அகம்பாவம் பிடித்தவன்.”
வே.வா., “வம்சத்துக்காக.”
அல்லது, “குடித்துவிட்டுத் தள்ளாடு.”