ஆமோஸ் 5:1-27

  • கன்னிப் பெண்ணாகிய இஸ்ரவேல் விழுந்துவிட்டாள் (1-3)

  • கடவுளைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள் (4-17)

    • கெட்டதை வெறுத்து நல்லதை நேசியுங்கள் (15)

  • யெகோவாவின் நாள், இருண்ட நாள் (18-27)

    • இஸ்ரவேலின் பலிகள் ஒதுக்கித்தள்ளப்படுகின்றன (22)

5  “இஸ்ரவேல் ஜனங்களே, உங்களுக்காக நான் புலம்பல் பாட்டுப் பாடுகிறேன், கேளுங்கள்:   ‘கன்னிப் பெண்ணாகிய இஸ்ரவேல் விழுந்துவிட்டாள்.அவளால் மறுபடியும் எழுந்திருக்க முடியாது. அவளுடைய தேசத்திலேயே அவள் விழுந்து கிடக்கிறாள்.அவளைத் தூக்கிவிட யாருமே இல்லை.’  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதுதான் நடக்கப்போகிறது.ஆயிரம் பேர் போருக்குப் போவார்கள், ஆனால் நூறு பேர்தான் மிஞ்சுவார்கள்; நூறு பேர் போருக்குப் போவார்கள், ஆனால் பத்துப் பேர்தான் மிஞ்சுவார்கள்.’+  இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள்.+   பெத்தேலைத் தேடிப்போகாதீர்கள்.+கில்காலிலும் பெயெர்-செபாவிலும் கால்வைக்காதீர்கள்.+ஏனென்றால், கில்கால் ஜனங்கள் நிச்சயமாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+பெத்தேல் ஒன்றுமில்லாமல் போய்விடும்.*   யெகோவாவாகிய என்னைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள்.+இல்லாவிட்டால், யோசேப்பின் வம்சத்தார்மேல் நான் நெருப்பாக மூளுவேன்.நெருப்பை அணைக்க யாரும் இருக்க மாட்டார்கள், பெத்தேல் பொசுங்கிவிடும்.   நீங்கள் அநியாயமாகத் தீர்ப்பு சொல்லி, ஜனங்களின் வாழ்க்கையை எட்டிபோல் கசப்பாக்குகிறீர்கள்.*நீங்கள் நீதியை ஒதுக்கித்தள்ளுகிறீர்கள்.+   கிமா நட்சத்திரக் கூட்டத்தையும்* கீஸில் நட்சத்திரக் கூட்டத்தையும்* உருவாக்கியவர்+ நான்தான்.கும்மிருட்டைப் பகலாக மாற்றுபவர் நான்தான்.பகலை இரவாக மாற்றுபவர்+ நான்தான்.கடல்நீரை அள்ளி எடுப்பவர் நான்தான்.பூமிமேல் அதைப் பொழிய வைப்பவர்+ நான்தான்.யெகோவா என்பது என்னுடைய பெயர்.   நான் பலசாலிமேல் திடீரென்று பாய்ந்து அவனை அழிக்கிறேன்.கோட்டைகளை நாசமாக்குகிறேன். 10  நகரவாசலில் உங்களைக் கண்டிக்கிற நீதிபதிகளை நீங்கள் பகைக்கிறீர்கள்.உண்மை பேசுகிறவர்களை வெறுக்கிறீர்கள்.+ 11  ஏழைகளிடமிருந்து வாடகை* வாங்குகிறீர்கள்.தானியத்தை வரியாக வசூலிக்கிறீர்கள்.+அதனால், செதுக்கிய கற்களால் கட்டிய வீடுகளில் இனி குடியிருக்க மாட்டீர்கள்.+உங்கள் அருமையான திராட்சைத் தோட்டங்களிலிருந்து கிடைக்கிற மதுவை இனி குடிக்க மாட்டீர்கள்.+ 12  நீங்கள் கணக்குவழக்கில்லாத குற்றங்கள் செய்திருப்பது எனக்குத் தெரியும்.படுபயங்கரமான பாவங்கள் செய்திருப்பதும் எனக்குத் தெரியும்.நீதிமான்களை ஒடுக்குகிறீர்கள், லஞ்சம் வாங்குகிறீர்கள்.நகரவாசலில் உட்கார்ந்துகொண்டு ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறீர்கள்.+ 13  துன்ப காலம் வரப்போகிறது.+அப்போது, விவேகம்* உள்ளவர்கள் அமைதியாக இருப்பார்கள். 14  நீங்கள் என்றென்றும் வாழ வேண்டுமென்றால்,+கெட்டதைத் தேடாமல் நல்லதைத் தேடுங்கள்.+ அப்போது, நீங்கள் சொல்வது போலவே பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா உங்களோடு இருப்பார்.+ 15  கெட்டதை வெறுத்துவிடுங்கள், நல்லதை நேசியுங்கள்.+நகரவாசலில் நீதி வழங்குங்கள்.+ அப்போது யோசேப்பின் வம்சத்தாரில் மீதியாக இருப்பவர்கள் இரக்கம் பெறுவார்கள்.+பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்.’ 16  அதனால் யெகோவா, பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா, சொல்வது இதுதான்: ‘பொது சதுக்கங்களில் நீங்கள் கதறி அழுவீர்கள்.வீதிகளில் “ஐயோ, ஐயோ!” என்று அலறுவீர்கள். புலம்புவதற்காக விவசாயிகளைக் கூப்பிடுவீர்கள்.ஒப்பாரி வைப்பதற்காகக் கூலிக்கு ஆட்களை அழைப்பீர்கள்.’ 17  ‘திராட்சைத் தோட்டங்களில் கதறல் சத்தம் கேட்கும்.+ஏனென்றால், நான் வந்து உங்களைத் தண்டிப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார். 18  ‘யெகோவாவின் நாளுக்காக ஏங்குபவர்களே, உங்கள் கதி அவ்வளவுதான்!+ யெகோவாவின் நாளில் உங்களுக்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?+ அந்த நாள் இருட்டாக இருக்கும், வெளிச்சமாக இருக்காது.+ 19  ஒருவன் சிங்கத்திடமிருந்து தப்பியோடி, கரடியின் முன்னால் மாட்டிக்கொள்வது போலவும்,வீட்டுக்குப் போய் சுவர்மேல் கையை ஊன்றும்போது பாம்பு அவனைக் கடிப்பது போலவும் உங்கள் நிலைமை இருக்கும். 20  யெகோவாவின் நாள் வெளிச்சமாக இல்லாமல் இருட்டாக இருக்கும்.பிரகாசமான நாளாக இல்லாமல் இருண்ட நாளாக இருக்கும். 21  உங்கள் பண்டிகைகள் எனக்கு வெறுப்பாக இருக்கின்றன, அவற்றை அருவருக்கிறேன்.+உங்களுடைய திருவிழாக்களில் எழும்புகிற வாசனை எனக்குப் பிடிக்கவில்லை. 22  நீங்கள் தகன பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினால்கூட அவற்றை ஒதுக்கித்தள்ளுவேன்.அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.+சமாதான பலியாக நீங்கள் செலுத்தும் கொழுத்த மிருகங்களைப் பார்க்கக்கூட மாட்டேன்.+ 23  கூச்சல் போட்டுப் பாடுவதை நிறுத்துங்கள்.உங்களுடைய நரம்பிசைக் கருவிகளின் இசையை நான் கேட்கப்போவதில்லை.+ 24  உங்கள் தேசத்தில் நியாயம் தண்ணீராகப் பெருக்கெடுக்க வேண்டும்.+நீதி வற்றாத நதியாக ஓட வேண்டும். 25  இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் 40 வருஷங்கள் வனாந்தரத்தில் அலைந்தீர்களே.அப்போது பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களா என்ன?+ 26  இப்போது உங்கள் ராஜாவான சக்குத்தையும் கைவனையும்* வேறு இடத்துக்குச் சுமந்துகொண்டு போவீர்கள்.நீங்கள் உண்டாக்கிய உங்களுடைய நட்சத்திர தெய்வச் சிலைகளைச் சுமந்துகொண்டு போவீர்கள். 27  தமஸ்குவையும் தாண்டி நீங்கள் சிறைப்பட்டுப் போகும்படி செய்வேன்’+ என்று பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா என்ற பெயருள்ளவர்+ சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

அல்லது, “தீய சக்திகளின் இடமாக மாறிவிடும்.”
நே.மொ., “நீங்கள் நியாயத்தை எட்டியாக ஆக்குகிறீர்கள்.”
இது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.
இது ரிஷப நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரங்களைக் குறிக்கலாம்.
வே.வா., “நில வரி.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதல்.”
இந்த இரண்டு தெய்வங்களும் சனிக் கிரகத்தைக் குறிக்கலாம்.