ஆமோஸ் 7:1-17

  • இஸ்ரவேலின் முடிவு நெருங்கிவிட்டதைக் காட்டும் தரிசனங்கள் (1-9)

    • வெட்டுக்கிளிகள் (1-3), நெருப்பு (4-6), தூக்குநூல் (7-9)

  • தீர்க்கதரிசனம் சொல்வதை நிறுத்தும்படி ஆமோசிடம் சொல்லப்படுகிறது (10-17)

7  உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: ராஜாவுக்கென்று புற்கள் அறுக்கப்பட்ட பின்பு, கடைசிப் பருவத்தின்* பயிர்கள் முளைக்க ஆரம்பித்தபோது கடவுள் வெட்டுக்கிளிக் கூட்டத்தை அனுப்பினார்.  தேசத்தின் பயிர்களை அந்த வெட்டுக்கிளிக் கூட்டம் தின்றுதீர்த்தது. நான் அதைப் பார்த்ததும், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.  அதனால், யெகோவா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.*+ பின்பு யெகோவா என்னிடம், “இது நடக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.  உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: உன்னதப் பேரரசராகிய யெகோவா தண்டனை கொடுப்பதற்காக நெருப்பை வரச் செய்தார். அது ஆழமான கடலை வற்றிப்போக வைத்தது, நிலத்தின் ஒரு பகுதியைச் சுட்டெரித்தது.  அப்போது நான், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து இது நடக்காதபடி தடுத்து நிறுத்துங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.  அதனால், யெகோவா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.*+ பின்பு யெகோவா என்னிடம், “இதுவும் நடக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.  அவர் எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: தூக்குநூலால்* சரிபார்த்துக் கட்டப்பட்ட ஒரு மதில்மேல் யெகோவா நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது.  பின்பு யெகோவா என்னிடம், “ஆமோஸ், நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “ஒரு தூக்குநூலைப் பார்க்கிறேன்” என்றேன். பின்பு யெகோவா, “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களின் நடுவில் நான் தூக்குநூலைத் தொங்கவிடுகிறேன். அவர்களை இனி மன்னிக்க மாட்டேன்.+  ஈசாக்கின் ஆராதனை மேடுகள்+ பாழாக்கப்படும், இஸ்ரவேலின் வழிபாட்டு இடங்கள் நாசமாக்கப்படும்,+ யெரொபெயாமின் குடும்பத்தாரை அழிக்க நான் வாளோடு வருவேன்”+ என்றார். 10  பெத்தேலின் ஆலய குருவான அமத்சியா,+ இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு+ இந்தச் செய்தியை அனுப்பினார்: “ஆமோஸ் இஸ்ரவேலின் நடுவில் இருந்துகொண்டே உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான்.+ அவன் சொல்வதை ஜனங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.+ 11  ஏனென்றால், ராஜாவாகிய நீங்கள் வாளால் சாகப்போகிறீர்கள் என்றும், ஜனங்கள் கண்டிப்பாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள் என்றும் அவன் சொல்கிறான்.”+ 12  பின்பு அமத்சியா ஆமோசிடம், “தரிசனக்காரனே, யூதாவுக்கு ஓடிப் போ. அங்கே உன் பிழைப்பைப் பார்த்துக்கொள், உன் தீர்க்கதரிசனத்தை அங்கே போய்ச் சொல்.+ 13  பெத்தேலில் நீ இனி தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது.+ இது ராஜாவின் கோயிலும்+ அரச மாளிகையும் இருக்கிற இடம்” என்றார். 14  அதற்கு ஆமோஸ், “நான் தீர்க்கதரிசியும் இல்லை, தீர்க்கதரிசியின் மகனும் இல்லை. சாதாரண மேய்ப்பன்,+ காட்டத்தி மரத் தோப்பில் வேலை செய்தவன்.* 15  மந்தைகளின் பின்னால் போய்க்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்தார். பின்பு யெகோவா என்னிடம், ‘நீ போய் என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்’ என்றார்.+ 16  அதனால், யெகோவா சொல்வதை இப்போது கேள்: ‘இஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே+ என்றும், ஈசாக்கின் வம்சத்தாருக்கு எதிராக ஒன்றும் பேசாதே+ என்றும் நீ சொல்கிறாய். 17  அதனால், யெகோவா சொல்வது இதுதான்: “இந்த நகரத்தில் உன் மனைவி விபச்சாரியாவாள், உன் மகன்களும் மகள்களும் வாளால் சாவார்கள். உன் தேசம் அளவுநூலால் அளக்கப்பட்டு பங்கிடப்படும், நீ வேறொரு தேசத்தில் சாவாய். இஸ்ரவேலர்கள் நிச்சயம் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”’”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “ஜனவரி, பிப்ரவரி மாதங்களின்.”
வே.வா., “மனம் வருந்தினார்.”
வே.வா., “மனம் வருந்தினார்.”
வே.வா., “தூக்குக்குண்டினால்.”
வே.வா., “காட்டத்திப் பழங்களைக் குத்திவிட்டவன்.”