உபாகமம் 30:1-20

  • யெகோவாவிடம் திரும்பி வருதல் (1-10)

  • யெகோவாவின் கட்டளைகள் கஷ்டமானவை அல்ல (11-14)

  • வாழ்வையோ சாவையோ தேர்ந்தெடுத்தல் (15-20)

30  பின்பு அவர், “நான் உங்கள் முன்னால் வைத்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் நிறைவேறும்போது,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சிதறிப்போக வைக்கும் தேசங்களில்+ அவற்றை நினைத்துப் பார்த்து,+  உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் ஒருவேளை நீங்கள் திரும்பி வரலாம்.+ ஒருவேளை நீங்களும் உங்கள் மகன்களும் இன்று நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கேட்டு, முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்,+  சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+  நீங்கள் பூமியின் எல்லைக்கே துரத்தப்பட்டிருந்தாலும், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவார்.+  உங்களுடைய முன்னோர்கள் சொந்தமாக்கிக்கொண்ட தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கொண்டுவந்து சேர்ப்பார். நீங்களும் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். அப்போது அவர் உங்களைச் சீரும் சிறப்புமாக வாழ வைப்பார். நீங்கள் உங்களுடைய முன்னோர்களைவிட ஏராளமாகப் பெருகுவீர்கள்.+  நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டி, வாழ்வு பெறும்படி,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய இதயத்தையும் உங்கள் பிள்ளைகளின் இதயத்தையும் சுத்தமாக்குவார்.+  உங்களை வெறுத்து உங்களைப் பாடாய்ப் படுத்திய எதிரிகள்மேல் உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தச் சாபங்கள் எல்லாவற்றையும் கொண்டுவருவார்.+  அப்போது, நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வந்து அவருடைய பேச்சைக் கேட்பீர்கள். இன்று நான் கொடுக்கிற அவருடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கடைப்பிடிப்பீர்கள்.  நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.+ உங்களுக்கு ஏராளமான பிள்ளைகளையும் மந்தைகளையும் விளைச்சலையும் தருவார். யெகோவா உங்கள் முன்னோர்களை ஆசீர்வதிப்பதில் சந்தோஷப்பட்டது போலவே உங்களை ஆசீர்வதிப்பதிலும் சந்தோஷப்படுவார்.+ 10  அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு, இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிப்பீர்கள். முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பி வருவீர்கள்.+ 11  நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளை நீங்கள் கடைப்பிடிக்க முடியாத அளவுக்குக் கஷ்டமானது இல்லை, கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தூரத்திலும் இல்லை.+ 12  ‘பரலோகத்துக்கு ஏறிப்போய் நமக்காக யார் அதைக் கொண்டுவருவார்? அப்போதுதானே அதைக் கேட்டு நடக்க முடியும்’ என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு அது பரலோகத்திலும் இல்லை,+ 13  ‘கடல் தாண்டிப்போய் நமக்காக யார் அதைக் கொண்டுவருவார்? அப்போதுதானே அதைக் கேட்டு நடக்க முடியும்’ என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு அது கடலைத் தாண்டியும் இல்லை. 14  அந்த வார்த்தை உங்களுக்கு ரொம்பப் பக்கத்திலேயே இருக்கிறது. உங்கள் வாயிலும் இதயத்திலும் இருக்கிறது.+ அதனால் அதை உங்களால் கடைப்பிடிக்க முடியும்.+ 15  இன்று நான் உங்கள் முன்னால் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ 16  உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி,+ அவருடைய வழிகளில் நடந்து, அவருடைய கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் கடைப்பிடித்தால், அதாவது உங்கள் கடவுளாகிய யெகோவா இன்று என் மூலம் கொடுக்கிற கட்டளைகளைக் கேட்டு நடந்தால், வாழ்வு பெறுவீர்கள்.+ ஏராளமாகப் பெருகுவீர்கள். நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்.+ 17  ஆனால் உங்கள் இதயம் அவரைவிட்டு விலகிவிட்டால்,+ அதாவது நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்காமல் வேறு தெய்வங்கள்மேல் ஆசைப்பட்டு அவற்றை வணங்கினால்,+ 18  நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.+ நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள். 19  இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ நீங்களும் உங்கள் சந்ததிகளும்+ பிழைப்பதற்காக, 20  நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி,+ அவருடைய பேச்சைக் கேட்டு நடந்து, அவருக்கு உண்மையாக* இருப்பதன் மூலம்+ வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாதான் உங்களுக்கு வாழ்வு தருவார். உங்கள் முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தில்+ அவர்தான் உங்களை நீண்ட காலம் வாழ வைப்பார்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அவரைப் பற்றிக்கொண்டு.”