எஸ்தர் 5:1-14

  • ராஜாவிடம் எஸ்தர் போகிறாள் (1-8)

  • ஆமானின் ஆத்திரமும் அகங்காரமும் (9-14)

5  மூன்றாம் நாள்,+ ராணிக்குரிய உடையை எஸ்தர் உடுத்திக்கொண்டு ராஜாவுடைய மாளிகையின் உள்முற்றத்தில் போய் நின்றாள். அதற்கு நேராக இருந்த அரச மாளிகையிலே ராஜா சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார். அந்தச் சிம்மாசனம் நுழைவாசலைப் பார்த்தபடி இருந்தது.  முற்றத்தில் நின்றுகொண்டிருந்த எஸ்தரைப் பார்த்ததும் ராஜா சந்தோஷப்பட்டார். பின்பு, தன்னுடைய பொன் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினார்.+ அப்போது, எஸ்தர் போய் செங்கோலின் நுனியைத் தொட்டாள்.  ராஜா அவளிடம், “என்ன விஷயம், எஸ்தர் ராணியே? உனக்கு என்ன வேண்டும்? என்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்றார்.  அதற்கு எஸ்தர், “ராஜாவுக்கு நல்லதாகப் பட்டால், இன்று நான் ஏற்பாடு செய்திருக்கும் விருந்துக்கு நீங்கள் ஆமானைக்+ கூட்டிக்கொண்டு வர வேண்டும்” என்றாள்.  உடனே ராஜா தன் ஆட்களிடம், “எஸ்தர் கேட்டுக்கொண்டபடி ஆமானைச் சீக்கிரம் வரச் சொல்லுங்கள்” என்றார். பின்பு, ராஜாவும் ஆமானும் எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்குப் போனார்கள்.  விருந்தின் முடிவில் திராட்சமது பரிமாறப்பட்டபோது எஸ்தரைப் பார்த்து ராஜா, “உனக்கு என்ன வேண்டுமென்று சொல். உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். உன் விருப்பம் என்ன? என்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்”+ என்றார்.  அதற்கு எஸ்தர், “எனக்கு என்ன வேண்டுமென்று சொல்கிறேன், ராஜாவே.  ராஜாவுக்கு என்மேல் பிரியம் இருந்தால், என் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினால், நாளைக்கு நான் ஏற்பாடு செய்திருக்கிற விருந்துக்கும் ஆமானோடு ராஜா வர வேண்டும். அப்போது, எனக்கு உண்மையில் என்ன வேண்டுமென்று ராஜாவிடம் சொல்கிறேன்” என்றாள்.  அன்று ஆமான் மிகுந்த சந்தோஷத்தோடும் குஷியோடும் அங்கிருந்து கிளம்பினான். ஆனால், அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாய் தனக்கு முன்னால் பயபக்தியோடு எழுந்து நிற்காததையும் தனக்கு மரியாதை கொடுக்காததையும் பார்த்தவுடன் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.+ 10  ஆனாலும், தன்னை அடக்கிக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டான். பின்பு, தன்னுடைய நண்பர்களையும் மனைவி சிரேஷையும்+ கூப்பிட்டு, 11  தனக்கு நிறைய சொத்துப்பத்துகளும் மகன்களும்+ இருப்பதைப் பற்றிப் பெருமையடித்தான். அதோடு, எல்லா தலைவர்களையும் ஊழியர்களையும்விட உயர்ந்த பதவியை ராஜா தனக்குக் கொடுத்து தன்னைக் கௌரவித்திருப்பதைப் பற்றிப் பெருமையடித்தான்.+ 12  பின்பு அவன், “ராஜாவோடு விருந்துக்கு வரும்படி எஸ்தர் ராணி என்னை மட்டும்தான் கூப்பிட்டிருந்தார்!+ அதுமட்டுமல்ல, ராஜாவோடும் தன்னோடும் விருந்து சாப்பிட நாளைக்கும் என்னைக் கூப்பிட்டிருக்கிறார்!+ 13  ஆனாலும் என்ன பிரயோஜனம்? அந்த யூதன் மொர்தெகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கும்வரை எனக்கு நிம்மதியே கிடையாது” என்று சொன்னான். 14  இதைக் கேட்ட அவன் மனைவி சிரேஷும் அவனுடைய நண்பர்களும், “சுமார் 73 அடி* உயரத்துக்கு ஒரு மரக் கம்பத்தை நாட்டுங்கள். அதில் மொர்தெகாயைத் தொங்கவிட வேண்டுமென்று காலையில் ராஜாவிடம் போய்ச் சொல்லுங்கள்.+ அதன் பிறகு, ராஜாவோடு சந்தோஷமாக விருந்துக்குப் போங்கள்” என்று சொன்னார்கள். இந்த ஆலோசனை ஆமானுக்குப் பிடித்திருந்ததால் மரக் கம்பத்தை நாட்ட ஏற்பாடு செய்தான்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “50 முழ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.