எஸ்தர் 6:1-14

  • மொர்தெகாயை ராஜா கௌரவிக்கிறார் (1-14)

6  அந்த நாள் ராத்திரி ராஜாவுக்குத் தூக்கம் வரவில்லை. அதனால், தன்னுடைய காலத்தின் சரித்திரப் புத்தகத்தை+ எடுத்துவரும்படி சொன்னார். அது அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டது.  அதில், ராஜாவின் அரண்மனை அதிகாரிகளாகவும் வாயிற்காவலர்களாகவும் வேலை செய்த பிக்தானாவும் தேரேசும் அகாஸ்வேரு ராஜாவைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதைப் பற்றி மொர்தெகாய் தெரியப்படுத்திய விஷயம் எழுதப்பட்டிருந்தது.+  உடனே ராஜா, “அதற்காக மொர்தெகாயை எப்படிக் கௌரவித்தோம், அவருக்கு என்ன சன்மானம் கொடுத்தோம்?” என்று கேட்டார். அப்போது ராஜாவின் உதவியாளர்கள், “அவருக்கு நாம் ஒன்றுமே செய்யவில்லை” என்று சொன்னார்கள்.  அதன்பின் ராஜா, “முற்றத்தில் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டார். அந்தச் சமயம் பார்த்து, ராஜாவுடைய மாளிகையின் வெளிமுற்றத்துக்குள்+ ஆமான் வந்து நின்றுகொண்டிருந்தான். தான் நாட்டியிருந்த மரக் கம்பத்தில் மொர்தெகாயைத் தொங்கவிடுவது பற்றி ராஜாவிடம் பேச அங்கு வந்திருந்தான்.+  ராஜாவின் உதவியாளர்கள், “முற்றத்தில் ஆமான்+ நின்றுகொண்டிருக்கிறார்” என்று சொன்னார்கள். உடனே ராஜா, “அவனை வரச் சொல்லுங்கள்” என்றார்.  ஆமான் வந்ததும் ராஜா அவனிடம், “யாரையாவது ராஜா கௌரவிக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அப்போது ஆமான், “என்னைத் தவிர ராஜா யாரைக் கௌரவிக்கப் போகிறார்?” என்று நினைத்தான்.+  அதனால் அவரிடம், “யாரையாவது ராஜா கௌரவிக்க விரும்பினால்,  அவருக்காக ராஜா உடுத்தும் உடை கொண்டுவரப்பட வேண்டும்.+ ராஜா சவாரி செய்கிற குதிரையும் தலை அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டுவரப்பட வேண்டும்.  அவை ராஜாவின் மதிப்புமிக்க அதிகாரிகளில் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த அதிகாரி, ராஜா யாரைக் கௌரவிக்க விரும்புகிறாரோ அவருக்கு அந்த உடையைப் போட்டுவிட்டு, அவரை அந்தக் குதிரைமேல் உட்கார வைத்து, நகரத்தின் பொது சதுக்கத்தில் வலம்வரச் செய்ய வேண்டும். அப்போது, ‘ராஜா யாரைக் கௌரவிக்க விரும்புகிறாரோ அவர் இப்படித்தான் கௌரவிக்கப்படுவார்!’ என்று அவருக்கு முன்னால் ஆட்கள் சொல்லிக்கொண்டே போக வேண்டும்” என்று சொன்னான்.+ 10  அதைக் கேட்டதும் ராஜா ஆமானிடம், “சீக்கிரம்! உடையையும் குதிரையையும் கொண்டுபோய், நீ சொன்னதையெல்லாம் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கும் மொர்தெகாய்க்குச் செய். அதில் ஒன்றைக்கூடச் செய்யாமல் இருந்துவிடாதே” என்று சொன்னார். 11  அதனால், ஆமான் அந்த உடையைக் கொண்டுபோய் மொர்தெகாய்க்குப்+ போட்டுவிட்டான். அவரை அந்தக் குதிரையின் மேல் உட்கார வைத்து, நகரத்தின் பொது சதுக்கத்தில் வலம்வரச் செய்து, “ராஜா யாரைக் கௌரவிக்க விரும்புகிறாரோ அவர் இப்படித்தான் கௌரவிக்கப்படுவார்!” என்று அவருக்கு முன்னால் சொல்லிக்கொண்டே போனான். 12  அதன்பின், மொர்தெகாய் அரண்மனை வாசலுக்குத் திரும்பினார். ஆனால், ஆமான் துக்கத்தில் முக்காடு போட்டுக்கொண்டு, அவசர அவசரமாகத் தன் வீட்டுக்குப் போனான். 13  நடந்ததையெல்லாம் தன் மனைவி சிரேஷிடமும்+ எல்லா நண்பர்களிடமும் சொன்னான். அதற்கு அவனுடைய ஆலோசகர்களும் மனைவி சிரேஷும், “மொர்தெகாயிடம் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். அவன் ஒரு யூதனாக இருப்பதால், அவனை உங்களால் ஜெயிக்கவே முடியாது. உங்கள் கதி அவ்வளவுதான்!” என்று சொன்னார்கள். 14  இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோதே அரண்மனை அதிகாரிகள் வந்து, எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு ஆமானை அவசரமாகக் கூட்டிக்கொண்டு போனார்கள்.+

அடிக்குறிப்புகள்