எஸ்றா 1:1-11

  • ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு கோரேஸ் ராஜாவின் கட்டளை (1-4)

  • பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வர ஜனங்கள் தயாராகிறார்கள் (5-11)

1  பெர்சிய ராஜா கோரேஸ்+ ஆட்சி செய்த முதலாம் வருஷத்திலே, எரேமியா மூலம் சொன்னதை+ நிறைவேற்றுவதற்காக கோரேசின் மனதை யெகோவா தூண்டினார். யெகோவாவின் தூண்டுதலால், கோரேஸ் தன்னுடைய சாம்ராஜ்யம் முழுவதும் ஓர் அறிவிப்பு செய்து, அதை எழுதியும் வைத்தார்.+ அதில்,  “பெர்சிய ராஜா கோரேஸ் அறிவிப்பது என்னவென்றால், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவா இந்த உலகத்தில் இருக்கிற எல்லா தேசங்களையும் என் கையில் கொடுத்திருக்கிறார்.+ யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி என்னிடம் கட்டளையிட்டிருக்கிறார்.+  அவருடைய ஜனங்களில் யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ அவர்களெல்லாம் யூதாவிலுள்ள எருசலேமுக்குப் போய், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்ட வேண்டும். அவர்களுடைய கடவுள் அவர்களோடு இருப்பாராக. அவர்தான் உண்மைக் கடவுள்; அவருடைய ஆலயம் எருசலேமில் இருந்தது.*  அவருடைய ஜனங்கள் எங்கு தங்கியிருந்தாலும் சரி,+ அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் அவர்களுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் மற்ற பொருள்களையும் ஆடுமாடுகளையும் கொடுத்து உதவ வேண்டும். அதோடு, உண்மைக் கடவுளின் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் காணிக்கைகளைக் கொடுத்தனுப்ப வேண்டும்’”+ என்று எழுதப்பட்டிருந்தது.  அப்போது, யூதா கோத்திரத்தையும் பென்யமீன் கோத்திரத்தையும் சேர்ந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், குருமார்கள், லேவியர்கள் என யாருடைய மனதை உண்மைக் கடவுள் தூண்டினாரோ அவர்கள் எல்லாரும் எருசலேமில் இருந்த யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காகப் புறப்பட்டார்கள்.  அக்கம்பக்கத்தில் இருந்த எல்லாரும் அவர்களிடம் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். அதோடு, வெள்ளிப் பாத்திரங்களையும், தங்கப் பாத்திரங்களையும், விலைமதிப்புள்ள பொருள்களையும், மற்ற சாமான்களையும், ஆடுமாடுகளையும் கொடுத்து உதவினார்கள்.*  முன்பு ஒரு சமயம் நேபுகாத்நேச்சார் எருசலேமில் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்களை எடுத்துவந்து அவனுடைய தெய்வத்தின் கோயிலில் வைத்திருந்தான்.+ அவற்றையும் திருப்பிக் கொடுக்க கோரேஸ் ராஜா உத்தரவு போட்டார்.  அவற்றைக் கோயிலிலிருந்து எடுத்து யூதா கோத்திரத் தலைவரான சேஸ்பாத்சாரிடம்*+ எண்ணிக் கொடுக்கும்படி பொக்கிஷ அறை அதிகாரியான மித்திரேதாத்துக்குக் கட்டளை தந்தார்.  எண்ணிக் கொடுக்கப்பட்டவை இவைதான்: தங்கக் கூடைகள் 30, வெள்ளிக் கூடைகள் 1,000, மாற்றுப் பாத்திரங்கள் 29, 10  சிறிய தங்கக் கிண்ணங்கள் 30, சிறிய வெள்ளிக் கிண்ணங்கள் 410, வேறு பாத்திரங்கள் 1,000. 11  தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மொத்தம் 5,400. பாபிலோனிலிருந்து விடுதலையான ஆட்களோடு+ சேர்ந்து எருசலேமுக்குப் போனபோது சேஸ்பாத்சார் இவற்றை எடுத்துக்கொண்டு போனார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “அவர் எருசலேமில் இருக்கிறார்.”
நே.மொ., “அவர்களுடைய கையைப் பலப்படுத்தினார்கள்.”
ஒருவேளை, “செருபாபேலிடம்.”