எஸ்றா 7:1-28

  • எஸ்றா எருசலேமுக்கு வருகிறார் (1-10)

  • எஸ்றாவுக்கு அர்தசஷ்டாவின் கடிதம் (11-26)

  • எஸ்றா யெகோவாவைப் புகழ்கிறார் (27, 28)

7  பின்பு, பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில்+ எஸ்றா*+ எருசலேமுக்குத் திரும்பி வந்தார். இவர் செராயாவின் மகன், செராயா+ அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின்+ மகன்,  இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூப்பின் மகன்,  அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின்+ மகன், அசரியா மெராயோத்தின் மகன்,  மெராயோத் செராகியாவின் மகன், செராகியா உசீயின் மகன், உசீ புக்கியின் மகன்,  புக்கி அபிசுவாவின் மகன், அபிசுவா பினெகாசின்+ மகன், பினெகாஸ் எலெயாசாரின்+ மகன், எலெயாசார் முதன்மை குருவான ஆரோனின்+ மகன்.  பாபிலோனிலிருந்து வந்த எஸ்றா, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா மோசேயின் மூலம் கொடுத்திருந்த திருச்சட்டத்தில் புலமை பெற்றிருந்தார்;+ அதை நகலெடுப்பவராகவும்* இருந்தார். அவருடைய கடவுளாகிய யெகோவா அவருக்குத் துணையாக இருந்ததால் அவர் கேட்ட எல்லாவற்றையும் ராஜா கொடுத்தார்.  குருமார்கள், லேவியர்கள்,+ பாடகர்கள்,+ வாயிற்காவலர்கள்,+ ஆலயப் பணியாளர்கள்*+ ஆகிய இஸ்ரவேலர்கள் சிலர் அர்தசஷ்டா ராஜா ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில் எருசலேமுக்கு வந்தார்கள்.  அதே வருஷம், ஐந்தாவது மாதம் எஸ்றா எருசலேமுக்கு வந்தார்.  அவருடைய கடவுள் அவருக்கு உறுதுணையாக இருந்ததால், முதலாம் மாதம் முதலாம் நாளில் பாபிலோனிலிருந்து புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதலாம் நாளில் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்.+ 10  யெகோவாவின் திருச்சட்டத்தைப் படித்துப் பின்பற்றவும்,+ அதிலுள்ள விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் இஸ்ரவேலில் கற்றுக்கொடுக்கவும்+ அவர் தன் இதயத்தைத் தயார்படுத்தியிருந்தார்.* 11  இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் ஆராய்வதில் நிபுணராகவும், அவற்றை நகலெடுப்பவராகவும்* இருந்த குருவாகிய எஸ்றாவுக்கு அர்தசஷ்டா ராஜா ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார். அதில், 12  * “ராஜாதி ராஜாவாகிய அர்தசஷ்டா,+ பரலோகத்தின் கடவுளுடைய திருச்சட்டத்தை நகலெடுப்பவரும்* குருவுமாகிய எஸ்றாவுக்கு எழுதுவதாவது: உனக்கு வாழ்த்துக்கள்! 13  என் ராஜ்யத்தில் குடியிருக்கிற இஸ்ரவேலர்களிலும் அவர்களுடைய குருமார்களிலும் லேவியர்களிலும் யாரெல்லாம் உன்னுடன் எருசலேமுக்குப் போக விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் போகலாம் என்று உத்தரவு கொடுக்கிறேன்.+ 14  ராஜாவாகிய நானும் என்னுடைய ஏழு ஆலோசகர்களும் உன்னை அனுப்புகிறோம். உன் கையிலுள்ள உன் கடவுளுடைய திருச்சட்டத்தை யூதாவிலும் எருசலேமிலும் வாழ்கிறவர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்று நீ போய்ப் பார்க்க வேண்டும். 15  ராஜாவாகிய நானும் என் ஆலோசகர்களும் மனப்பூர்வமாகக் கொடுக்கிற வெள்ளியையும் தங்கத்தையும், எருசலேமில் குடிகொண்டுள்ள இஸ்ரவேலின் கடவுளுக்கு நீ எடுத்துக்கொண்டு போக வேண்டும். 16  அதோடு, உன் ஜனங்களும் குருமார்களும் எருசலேமிலுள்ள தங்கள் கடவுளின் ஆலயத்துக்காக மனப்பூர்வமாகத் தருகிற காணிக்கைகளையும், பாபிலோன் மாகாணம் முழுவதும் உனக்குக் கிடைக்கிற வெள்ளியையும் தங்கத்தையும் நீ எடுத்துக்கொண்டு போக வேண்டும்.+ 17  இந்தப் பணத்தை வைத்து காளைகளையும்,+ செம்மறியாட்டுக் கடாக்களையும்,+ செம்மறியாட்டுக் குட்டிகளையும்,+ அவற்றோடு செலுத்த வேண்டிய உணவுக் காணிக்கைகளையும்,+ திராட்சமது காணிக்கைகளையும்+ உடனடியாக வாங்கி, எருசலேமிலுள்ள உன் கடவுளுடைய ஆலயத்தின் பலிபீடத்தில் செலுத்த வேண்டும். 18  மீதமுள்ள வெள்ளியையும் தங்கத்தையும் என்ன செய்ய வேண்டுமென்று நீயும் உன் சகோதரர்களும் நினைக்கிறீர்களோ அதை உங்கள் கடவுளுடைய விருப்பப்படி* செய்யலாம். 19  உன் கடவுளுடைய ஆலய சேவைக்காகக் கொடுக்கப்படுகிற எல்லா பாத்திரங்களையும் எருசலேமிலுள்ள கடவுளுடைய சன்னிதியில் நீ வைக்க வேண்டும்.+ 20  உன் கடவுளுடைய ஆலயத்துக்குத் தேவையான மற்ற எல்லாவற்றையுமே அரசு கஜானாவிலிருந்து+ வாங்கிக் கொடுக்க வேண்டும். 21  ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தைச் சேர்ந்த பொக்கிஷ அறை அதிகாரிகள் எல்லாருக்கும் அர்தசஷ்டா ராஜாவாகிய நான் உத்தரவிடுவது என்னவென்றால், பரலோகத்தின் கடவுளுடைய திருச்சட்டத்தை நகலெடுப்பவரும்* குருவுமாகிய எஸ்றா+ கேட்கிற எல்லாவற்றையும் நீங்கள் உடனே கொடுக்க வேண்டும். 22  அதிகபட்சமாக 100 தாலந்து* வெள்ளியும், 100 கோர் அளவு* கோதுமையும், 100 ஜாடி* திராட்சமதுவும்,+ 100 ஜாடி எண்ணெயும்+ கொடுக்க வேண்டும், உப்பையும்+ தாராளமாக அள்ளிக் கொடுக்க வேண்டும். 23  பரலோகத்தின் கடவுள் தன்னுடைய ஆலயத்துக்காக என்னவெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கட்டளை தந்திருக்கிறாரோ+ அதையெல்லாம் பக்திவைராக்கியத்தோடு கொடுக்க வேண்டும். அப்போதுதான், ராஜாவின் குடிமக்களும் அவருடைய மகன்களும் பரலோகத்தின் கடவுளுடைய கடும் கோபத்துக்கு ஆளாகாமல் இருப்பார்கள்.+ 24  குருமார்கள், லேவியர்கள், இசைக் கலைஞர்கள்,+ வாயிற்காவலர்கள், ஆலயப் பணியாளர்கள்*+ என அந்த ஆலயத்தில் சேவை செய்கிற யார்மேலும் எந்த வரியையும்*+ சுமத்தக் கூடாது. 25  எஸ்றாவே, உன் கடவுள் தந்திருக்கிற ஞானத்தால் நீ நடுவர்களையும் நீதிபதிகளையும் நியமிக்க வேண்டும். ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் வசிக்கிற எல்லாருக்கும், அதாவது உன் கடவுளுடைய சட்டதிட்டங்களைத் தெரிந்துவைத்திருக்கிற எல்லாருக்கும், அவர்கள் நீதி வழங்க வேண்டும். அந்தச் சட்டதிட்டங்களைப் பற்றித் தெரியாதவர்களுக்கு நீ அவற்றைக் கற்றுத்தர வேண்டும்.+ 26  உன் கடவுளுடைய திருச்சட்டத்துக்கும் ராஜாவின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவர்களை உடனடியாகத் தண்டிக்க வேண்டும். அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களுக்கு மரண தண்டனையோ சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்க வேண்டும்” என்று எழுதியிருந்தார். 27  எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்தை அழகுபடுத்த ராஜாவின் இதயத்தைத் தூண்டிய நம் முன்னோர்களின் கடவுளான யெகோவாவுக்குப் புகழ் சேருவதாக!+ 28  ராஜாவுக்கும் அவருடைய ஆலோசகர்களுக்கும்+ உயர் அதிகாரிகளுக்கும் முன்னால் கடவுள் எனக்கு மாறாத அன்பைக் காட்டினார்.+ என் கடவுள் யெகோவா எனக்குத் துணையாக இருந்ததால் நான் தைரியமடைந்து, என்னோடு கூட்டிக்கொண்டு போவதற்காக இஸ்ரவேலர்களில் முக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “உதவி.”
வே.வா., “அவர் ஒரு எழுத்தராகவும்.”
வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”
வே.வா., “தன் இதயத்தில் தீர்மானித்திருந்தார்.”
வே.வா., “ஒரு எழுத்தராகவும்.”
எஸ்றா 7:12 முதல் 7:26 வரையான வசனங்கள் முதன்முதலாக அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன.
வே.வா., “திருச்சட்டத்தின் எழுத்தரும்.”
வே.வா., “சித்தத்தின்படி.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”
வே.வா., “திருச்சட்டத்தின் எழுத்தரும்.”
ஒரு கோர் அளவு என்பது சுமார் 170 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
மூலமொழியில், “பாத்.” ஒரு பாத் என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”
நே.மொ., “தலை வரியையோ கலால் வரியையோ சுங்க வரியையோ.”