ஏசாயா 18:1-7
-
எத்தியோப்பியாவுக்கு எதிரான தீர்ப்பு (1-7)
18 ஆறுகள் ஓடும் பகுதியில் பூச்சிகளின் சிறகொலி கேட்கிற எத்தியோப்பிய தேசத்துக்கு ஐயோ கேடு!+
2 அது கடல் வழியாகத் தூதுவர்களை அனுப்புகிறது.அவர்களை நாணற்புல்* படகுகளில் அனுப்பி,
“தூதுவர்களே, வேகமாகப் போங்கள்.உயரமாகவும் பளபளப்பான சருமத்தோடும் இருக்கிற ஜனங்களிடம் போங்கள்.எல்லாரும் பார்த்துப் பயப்படுகிற ஜனங்களிடம் போங்கள்.+பல தேசங்களை வென்ற பலம்படைத்த ஜனங்களிடம் போங்கள்.ஆறுகள் அடித்துக்கொண்டு போகிற தேசத்தில் வாழ்கிறவர்களிடம் போங்கள்” என்று சொல்கிறது.
3 தேசத்து ஜனங்களே, பூமியின் குடிமக்களே,மலைகள்மேல் ஏற்றப்பட்ட கொடியை* போன்ற ஒன்று உங்கள் கண்களுக்குத் தெரியும்.ஊதுகொம்பின் சத்தம் போன்ற ஒரு சத்தம் உங்கள் காதில் கேட்கும்.
4 யெகோவா என்னிடம்,
“சூரிய வெப்பம் கடுமையாக இருக்கும்போதும்,உஷ்ணமான அறுவடைக் காலத்தில் பனி மூட்டம் உண்டாகும்போதும்,நான் அமைதியாக இருந்து, நான் நிலைநாட்டிய இடத்தை* பார்த்துக்கொண்டிருப்பேன்.
5 திராட்சைக் கொடி பூ பூத்து, காய் காய்த்து, பழம் பழுப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.ஆனால், அறுவடைக்கு முன்பே அதன் கிளைகளை அரிவாளால் வெட்டிப்போடுவேன்.அதன் கொடிச் சுருள்களை அறுத்து எறிவேன்.
6 அவையெல்லாம் மலைகளிலுள்ள பறவைகளுக்கும்நிலத்திலுள்ள மிருகங்களுக்கும் உணவாகும்.
அந்தப் பறவைகள் கோடைக் காலம் முழுவதும் அவற்றைத் தின்னும்.அந்த மிருகங்கள் அறுவடைக் காலம் முழுவதும் அவற்றைத் தின்னும்.
7 அப்போது, பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு ஒரு அன்பளிப்பு கொண்டுவரப்படும்.அது, உயரமாகவும் பளபளப்பான சருமத்தோடும் இருக்கிற ஜனங்களின் தேசத்திலிருந்து,எல்லாரும் பார்த்துப் பயப்படுகிறவர்களின் தேசத்திலிருந்து,பல தேசங்களை வென்ற பலம்படைத்த தேசத்திலிருந்து,ஆறுகள் அடித்துக்கொண்டு போகிற தேசத்திலிருந்து,பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயர் தாங்கிய சீயோன் மலைக்குக்+ கொண்டுவரப்படும்” என்று சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “பாப்பிரஸ் புல்.”
^ வே.வா., “நாட்டப்பட்ட கொடிக் கம்பத்தை.”
^ அல்லது, “இடத்திலிருந்து.”