ஏசாயா 26:1-21

  • நம்பிக்கை மற்றும் மீட்பு பற்றிய பாடல் (1-21)

    • யா யெகோவாதான் என்றென்றுமுள்ள கற்பாறை (4)

    • பூமியில் உள்ள ஜனங்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் (9)

    • “உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள் உயிர்பெறுவார்கள்” (19)

    • உள்ளறைகளுக்குப் போய் ஒளிந்துகொள்ளுங்கள் (20)

26  அந்த நாளில் யூதா தேசத்திலே+ இந்தப் பாட்டுப் பாடப்படும்:+ “நம்முடைய நகரம் வெல்ல முடியாத நகரம்.+ மீட்பை அதற்கு மதிலாகவும் அரணாகவும் அவர் வைத்திருக்கிறார்.+   நீதியுள்ள ஜனம் வருவதற்காகக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.+உண்மையோடு நடந்துகொள்ளும் ஜனம் உள்ளே வரட்டும்.   கடவுளே, உங்களை முழுமையாகச் சார்ந்திருக்கிறவர்களை* நீங்கள் பாதுகாப்பீர்கள்.அவர்களை எப்போதும் சமாதானத்தோடு வாழ வைப்பீர்கள்.+ஏனென்றால், அவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.+   யெகோவாமேல் என்றென்றும் நம்பிக்கை வையுங்கள்.+யா* யெகோவாதான் என்றென்றுமுள்ள கற்பாறை போன்றவர்.+   ஆணவமும் அகங்காரமும் பிடித்த நகரத்தை அவர் தாழ்த்துகிறார். அதைக் கீழே தள்ளுகிறார்.தரைவரைக்கும் தாழ்த்துகிறார்.மண்ணோடு மண்ணாக்குகிறார்.   ஏழைகளின் கால்களும்,எளியவர்களின் பாதங்களும் அதை மிதித்துப்போடும்.”   நீதிமானின் பாதை நேர்மையான பாதை. நீங்கள் அதை மேடுபள்ளங்கள் இல்லாத சமமான பாதையாக்குவீர்கள்.ஏனென்றால், நீங்கள் நேர்மையானவர்.   யெகோவாவே, உங்கள்மேல் நம்பிக்கை வைத்துஉங்களுடைய நீதியான வழிகளில் நடக்கிறோம். உங்கள் பெயரும் உங்களைப் பற்றிய நினைவும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.*   என் உள்ளம் ராத்திரியில் உங்களை நினைத்து ஏங்குகிறது.உங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறது.+இந்தப் பூமியை நீங்கள் நியாயந்தீர்க்கும் சமயங்களில்ஜனங்கள் நீதியைக் கற்றுக்கொள்கிறார்கள்.+ 10  கெட்டவனுக்குக் கருணை காட்டினாலும்அவன் நீதியைக் கற்றுக்கொள்ள மாட்டான்.+ நேர்மையானவர்கள் வாழ்கிற தேசத்திலும் அவன் அக்கிரமம் செய்வான்.+யெகோவாவின் மகிமையை அவன் உணர மாட்டான்.+ 11  யெகோவாவே, நீங்கள் எதிரிகளின் மேல் கையை ஓங்கியிருக்கிறீர்கள்; அவர்கள் அதைப் பார்ப்பதில்லை.+ உங்களுடைய ஜனங்கள்மேல் நீங்கள் காட்டும் அளவுகடந்த அன்பை அவர்கள் பார்த்து வெட்கப்பட்டுப்போவார்கள். உங்களுடைய கோபத் தீ உங்கள் எதிரிகளைப் பொசுக்கிவிடும். 12  யெகோவாவே, எங்களை நீங்கள் சமாதானமாக வாழ வைப்பீர்கள்.+நாங்கள் எதையுமே சொந்தமாகச் சாதிக்கவில்லை,நீங்கள்தான் எல்லாவற்றையும் சாதிக்க வைத்தீர்கள். 13  எங்கள் கடவுளான யெகோவாவே, மற்ற எஜமான்களும் எங்களை ஆட்சி செய்திருக்கிறார்கள்.+ஆனால், உங்களுடைய பெயரை மட்டுமே நாங்கள் புகழ்கிறோம்.+ 14  அவர்கள் செத்துவிட்டார்கள், உயிர்பெற மாட்டார்கள். செயலிழந்து கிடக்கிறார்கள், எழுந்திருக்க மாட்டார்கள்.+ நீங்கள் அவர்களைத் தண்டித்து அழித்துவிட்டீர்கள்.அவர்களுடைய பெயர்கூட அழிந்துபோகும்படி செய்துவிட்டீர்கள். 15  யெகோவாவே, நீங்கள் இந்த ஜனங்களைப் பெருக வைத்தீர்கள்.இந்த ஜனங்களைப் பெருக வைத்தீர்கள்.உங்களையே மகிமைப்படுத்தினீர்கள்.+ தேசத்தின் எல்லைகளை நாலாபக்கமும் விரிவாக்கினீர்கள்.+ 16  யெகோவாவே, கஷ்டத்தில் தவிக்கும்போது அவர்கள் உங்களைத் தேடினார்கள்.அவர்களை நீங்கள் கண்டித்தபோது அமைதியாகவும் உருக்கமாகவும் ஜெபம் செய்தார்கள்.+ 17  யெகோவாவே, ஒரு கர்ப்பிணி பிரசவ வேதனைப்படுவது போல,வலியில் கதறுவது போல,எங்களைக் கதற வைத்துவிட்டீர்கள். 18  நாங்கள் கர்ப்பமானோம்,பிரசவ வேதனையில் துடித்தோம். ஆனால், வெறும் காற்றைப் பெற்றெடுத்தோம்.தேசத்தை நிரப்ப எங்களுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை. எங்களால் தேசத்தைக் காப்பாற்ற முடியவில்லை. 19  கடவுள் இப்படிச் சொல்கிறார்: “உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள் உயிர்பெறுவார்கள். என்னுடைய ஜனங்களில் இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள்.+ மண்ணுக்குள் இருப்பவர்களே,+எழுந்து சந்தோஷத்தில் பாடுங்கள்! உங்களுடைய பனி விடியற்கால* பனியைப் போல இருக்கிறது.செத்துக் கிடப்பவர்களைப் பூமி உயிரோடு எழுப்பும்.* 20  என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள்.கதவுகளை அடைத்துக்கொள்ளுங்கள்.+ கடவுளுடைய கோபம் தீரும்வரைகொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.+ 21  இதோ, யெகோவா புறப்பட்டு வருகிறார்.ஜனங்கள் செய்த குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க வருகிறார்.தேசத்தில் இரத்தம் சிந்தப்பட்டதைத் தேசமே காட்டிக்கொடுக்கும்.கொல்லப்பட்டவர்களை இனியும் மூடி மறைக்காது.”

அடிக்குறிப்புகள்

அல்லது, “கடவுளே, மன உறுதியோடு இருப்பவர்களை.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
அதாவது, “கடவுளையும் அவருடைய பெயரையும் நினைத்துப் பார்க்கவும் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவும் ஆசையாக இருக்கிறோம்.”
அல்லது, “செடிகளின் மேலுள்ள.”
வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களைப் பூமி பெற்றெடுக்கும்.”