ஏசாயா 30:1-33

  • எகிப்து செய்யும் உதவி வீணிலும் வீண் (1-7)

  • தீர்க்கதரிசியின் செய்தியை மக்கள் கேட்பதில்லை (8-14)

  • நம்பிக்கை வைத்தால் பலம் கிடைக்கும் (15-17)

  • யெகோவா தன் மக்களுக்குக் கருணை காட்டுகிறார் (18-26)

    • யெகோவா, மகத்தான போதகர் (20)

    • “இதுதான் சரியான வழி” (21)

  • அசீரியாமீது யெகோவா தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவார் (27-33)

30  யெகோவா இப்படிச் சொல்கிறார்:“முரட்டுப் பிடிவாதமுள்ள பிள்ளைகளே, உங்களுக்கு ஐயோ கேடு!+நீங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறீர்கள்.எனக்குப் பிடிக்காததைத் திட்டம் போட்டுச் செய்கிறீர்கள்.+நான் சொல்லாமலேயே* மற்ற தேசங்களோடு கூட்டுச் சேர்கிறீர்கள்.   என்னிடம் கேட்காமலேயே+ எகிப்துக்குப் போகிறீர்கள்.+பார்வோன் உங்களைக் காப்பாற்றுவான் என்று நினைக்கிறீர்கள்.எகிப்து உங்களுக்குப் பாதுகாப்பு தரும் என்று நம்புகிறீர்கள்.   ஆனால், பார்வோன் காப்பாற்றுவான் என்று நினைப்பவர்களுக்கு அவமானம்தான் வரும்.எகிப்து பாதுகாப்பு தரும் என்று நம்புகிறவர்களுக்கு வெட்கக்கேடுதான் மிஞ்சும்.+   ஏனென்றால், அதிபதிகள் சோவானில்+ இருக்கிறார்கள்.தூதுவர்கள் ஆனேசுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.   எந்த உதவியும் செய்ய முடியாதவர்களை நம்பிப் போனவர்கள் அவமானம் அடைவார்கள்.அந்த ஜனங்களால் எந்தப் பிரயோஜனமும் பயனும் இருக்காது.வெட்கமும் மானக்கேடும்தான் மிஞ்சும்.”+  தெற்கிலுள்ள மிருகங்களுக்கு எதிரான தீர்ப்பு: ஆபத்து நிறைந்த தேசத்தின் வழியாகத் தூதுவர்கள் போகிறார்கள்.அது கர்ஜிக்கிற சிங்கம் வாழ்கிற தேசம்.விரியன் பாம்பும், சீறிப் பாய்கிற கொடிய பாம்பும் நிறைந்த தேசம்.அதன் வழியாக விலைமதிப்புள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு போகிறார்கள்.கழுதைகளின் மேலும் ஒட்டகங்களின் மேலும் ஏற்றிக்கொண்டு போகிறார்கள். ஆனாலும், அந்தப் பொருள்களால் எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது.   ஏனென்றால், எகிப்து செய்யும் உதவி வீணிலும் வீண்.+ அதனால்தான், “சும்மா உட்கார்ந்திருக்கும் ராகாப்”+ என்று அதை நான் அழைத்தேன்.   “இப்போது நீ போய் இந்த வார்த்தைகளை எழுது.இது எதிர்காலத்துக்குப் பிரயோஜனமாக இருக்கும்.என்றென்றும் ஒரு சாட்சியாக இருக்கும்.+இந்த விஷயங்களை அவர்களுக்கு முன்பாகப் பலகையில் எழுது.ஒரு புத்தகத்தில் பதிவு செய்.+   ஏனென்றால், இந்த ஜனங்கள் அடங்காதவர்கள்,+ பொய்யும் பித்தலாட்டமும் செய்கிற பிள்ளைகள்.+யெகோவாவின் சட்டத்தை* கேட்க மனமில்லாத பிள்ளைகள்.+ 10  தரிசனம் பார்க்கிறவர்களிடம், ‘தரிசனங்களைப் பார்க்காதீர்கள்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களிடம், ‘நீங்கள் பார்க்கிற நிஜமான தரிசனங்களைச் சொல்லாதீர்கள்.+ எங்கள் காதுக்கு இனிமையானதைச் சொல்லுங்கள்; நீங்களாகவே கற்பனை செய்து சொல்லுங்கள்.+ 11  நேர்வழியில் போகாதீர்கள்; அந்தப் பாதையைவிட்டு விலகுங்கள். இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளைப் பற்றி எங்களிடம் பேசுவதை நிறுத்துங்கள்’+ என்று சொல்கிறார்கள்.” 12  அதனால், இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள் இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய வார்த்தைகளை நீங்கள் கேட்பதில்லை.+பொய்யையும் பித்தலாட்டத்தையும் நம்புகிறீர்கள்.அதையே சார்ந்திருக்கிறீர்கள்.+ 13  அதனால், நீங்கள் செய்கிற இந்தக் குற்றம் உடைந்த மதில்போல் இருக்கும்,பெயர்ந்து நிற்கும் உயரமான மதிலைப் போல இருக்கும். அது திடீரென்று ஒரு நொடிப்பொழுதில் விழுந்து நொறுங்கும். 14  பெரிய மண் ஜாடி நொறுங்குவது போல அது நொறுங்கும்.அடுப்பிலிருந்து நெருப்பை அள்ளவோதேங்கிக்கிடக்கும்* தண்ணீரை எடுக்கவோஒரு சின்னத் துண்டுகூட மிஞ்சாத அளவுக்குத் தூள்தூளாகிவிடும்.” 15  ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும் உன்னதப் பேரரசருமாகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியாக இருந்தால் காப்பாற்றப்படுவீர்கள்.நீங்கள் பதட்டம் அடையாமல் என்மேல் நம்பிக்கை வைத்தால் பலமாக இருப்பீர்கள்.”+ ஆனால், அவர் சொல்கிறபடி செய்ய உங்களுக்கு இஷ்டமில்லை.+ 16  “நாங்கள் குதிரைகளில் ஏறி ஓடிப்போவோம்” என்று சொல்கிறீர்கள். நீங்கள் அப்படித்தான் ஓடிப்போவீர்கள். “வேகமாகப் பாயும் குதிரைகள்மேல் ஏறிப்போவோம்”+ என்று சொல்கிறீர்கள். உங்களைத் துரத்துகிறவர்கள்தான் வேகமாகப் பாய்ந்து வருவார்கள்.+ 17  ஒரே ஒருவனைப் பார்த்து ஆயிரம் பேர் நடுங்குவீர்கள்;+ஐந்து பேரைப் பார்த்து நீங்கள் ஓட்டம் பிடிப்பீர்கள்.கடைசியில், மலை உச்சியிலுள்ள ஒரு கம்பத்தைப் போலவும்,மேட்டின் மேலுள்ள ஒரு கொடியைப் போலவுமே மிஞ்சியிருப்பீர்கள்.+ 18  ஆனால், உங்களுக்குக் கருணை காட்ட யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார்.+உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக எழுந்திருப்பார்.+ ஏனென்றால், யெகோவா நியாயம் வழங்குகிற கடவுள்.+ அவருக்காக ஆவலோடு காத்திருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+ 19  சீயோன் ஜனங்கள் திரும்பவும் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அப்போது நீ அழ மாட்டாய்.+ நீ உதவிக்காகக் கதறும்போது அவர் கருணை காட்டுவார்; உன் குரலைக் கேட்டதுமே பதில் கொடுப்பார்.+ 20  உங்களுடைய மகத்தான போதகராகிய யெகோவா வேதனையை உணவாகவும் உபத்திரவத்தைத் தண்ணீராகவும் தந்தால்கூட+ இனி உங்களிடமிருந்து மறைந்திருக்க மாட்டார். உங்களுடைய மகத்தான போதகரை+ உங்கள் கண்களாலேயே பார்ப்பீர்கள். 21  ஒருவேளை நீங்கள் நேரான வழியைவிட்டு இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ போனால்,+ “இதுதான் சரியான வழி,+ இதிலே நடங்கள்” என்ற குரல் பின்னாலிருந்து உங்கள் காதுகளில் கேட்கும். 22  வெள்ளி முலாமும் தங்க முலாமும் பூசிய உங்களுடைய சிலைகளை+ நீங்கள் நாசமாக்குவீர்கள். தீட்டுப்பட்ட* துணியைத் தூக்கி எறிவதுபோல், “ஒழிந்துபோ!” என்று சொல்லி* அவற்றைத் தூக்கி எறிவீர்கள்.+ 23  அப்போது, நீங்கள் விதைத்த விதைகள் முளைப்பதற்குக் கடவுள் மழையைக் கொடுப்பார்.+ நிலத்திலிருந்து சத்தான உணவுப் பொருள்கள் ஏராளமாக விளையும்.+ அந்த நாளில், உங்களுடைய ஆடுமாடுகள் பரந்துவிரிந்த மேய்ச்சல் நிலங்களில் மேயும்.+ 24  நிலத்தை உழுகிற காளைகளும் கழுதைகளும், பதர் நீக்கப்பட்ட* சத்தான தீவனத்தை* தின்னும். 25  கோபுரங்கள் இடிந்து விழுகிற மகா அழிவின் நாளில், உயரமான எல்லா மலைகளிலும் குன்றுகளிலும் ஆறுகளும் நீரோடைகளும் பாய்ந்தோடும்.+ 26  யெகோவா தன்னுடைய ஜனங்களின் காயங்களை* கட்டி,+ தான் அடித்ததால் உண்டான படுகாயத்தைக் குணமாக்கும்+ நாளில், முழு நிலவின் வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல ஆகும்; சூரிய வெளிச்சமோ, ஏழு பகல்களின் வெளிச்சம்போல் ஏழு மடங்காக ஆகும்.+ 27  இதோ, யெகோவா தூரத்திலிருந்து வருகிறார்.*பயங்கர கோபத்தோடும் புயல் மேகங்களோடும் வருகிறார். அவருடைய உதடுகளில் கோபம் கொப்பளிக்கிறது.அவருடைய நாக்கு பொசுக்கிவிடும் தீப்பிழம்புபோல் இருக்கிறது.+ 28  தேசங்களை அழிவின் சல்லடையில் சலிப்பதற்கு,அவருடைய சக்தி* வருகிறது; கழுத்துவரை எட்டும் வெள்ளத்தைப் போல் வருகிறது.அவர் ஜனங்களுடைய தாடைகளில் கடிவாளம் போட்டு,+ அழிவின் பாதைக்கு இழுத்துச் செல்வார். 29  ஆனால் நீங்கள் பாடும் பாடல்,பண்டிகை கொண்டாடுகிற ராத்திரியில் பாடும் பாடல் போல இருக்கும்.+இஸ்ரவேலின் கற்பாறையாக+ இருக்கிற யெகோவாவின் மலைக்குபுல்லாங்குழலை ஊதிக்கொண்டே* நடந்து போகிறவனைப் போலஉங்கள் உள்ளம் சந்தோஷத்தில் பூரிக்கும். 30  யெகோவா கம்பீரமாக முழங்குவார்.+அவர் கடும் கோபத்தினாலும்,+ பொசுக்கிவிடும் நெருப்பினாலும்,+கன மழையினாலும்,+ இடியினாலும், புயலினாலும், ஆலங்கட்டி* மழையினாலும்+தன்னுடைய கைபலத்தைக் காட்டுவார்.+ 31  யெகோவாவின் சத்தத்தால் அசீரியா நடுநடுங்கும்.+அதை ஒரு தடியால் அவர் அடிப்பார்.+ 32  யெகோவா தடியை ஓங்கி அசீரியாவை அடிக்கும் ஒவ்வொரு சமயத்திலும்,போரில் அந்த ஜனங்களை வீழ்த்தும்+ ஒவ்வொரு சமயத்திலும்,கஞ்சிராவின் ஓசையும் யாழின் இசையும் கேட்கும்.+ 33  அவர்களுடைய தோப்பேத்*+ ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருக்கிறது.அது ராஜாவுக்காகவும் தயார் செய்யப்பட்டிருக்கிறது.+ அவர் அதை ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கியிருக்கிறார்.அங்கே பெரிய விறகுக் கட்டும், நெருப்பும் இருக்கிறது. யெகோவாவின் மூச்சுக்காற்று பயங்கரமாகப் பற்றியெரியும் கந்தகத் தீயைப் போல் வந்துஅதைக் கொளுத்திப்போடும்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “என்னுடைய சக்தியால் தூண்டப்படாமலேயே.”
வே.வா., “அறிவுரையை.”
அல்லது, “தொட்டியிலிருந்து.”
அதாவது, “மாதவிலக்கினால் தீட்டுப்பட்ட.”
அல்லது, “சீ! என்று சொல்லி.”
வே.வா., “சுக்காங்கீரை கலந்த தீவனத்தை.”
வே.வா., “தூற்றுவாரியால் தூற்றப்பட்ட.”
வே.வா., “முறிவுகளை.”
நே.மொ., “யெகோவாவின் பெயர் தூரத்திலிருந்து வருகிறது.”
வே.வா., “மூச்சுக்காற்று.”
வே.வா., “புல்லாங்குழலின் ஓசையைக் கேட்டுக்கொண்டே.”
அதாவது, “பனிக்கட்டி.”
“தோப்பேத்” என்பது நெருப்பு எரியும் இடம். இந்த வசனத்தில் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.