ஏசாயா 37:1-38

  • ஏசாயா மூலம் எசேக்கியா கடவுளிடம் உதவி கேட்கிறார் (1-7)

  • எருசலேமில் இருப்பவர்களை சனகெரிப் மிரட்டுகிறான் (8-13)

  • எசேக்கியாவின் ஜெபம் (14-20)

  • யெகோவா என்ன சொன்னார் என்பதை ஏசாயா தெரிவிக்கிறார் (21-35)

  • ஒரு தேவதூதர் 1,85,000 அசீரிய வீரர்களைக் கொன்றுபோடுகிறார் (36-38)

37  எசேக்கியா ராஜா அதைக் கேட்டவுடனே தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார். பின்பு, துக்கத் துணியை* போட்டுக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்குப் போனார்.+  அதன்பின், அரண்மனை நிர்வாகியான எலியாக்கீமையும் செயலாளரான செப்னாவையும் மூத்த குருமார்களையும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியிடம் அனுப்பினார். அவர்கள் துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு ஏசாயாவிடம்+ போய்,  “‘இந்த நாள் நமக்கு இக்கட்டான நாள். இன்று நாம் அவமதிக்கப்பட்டோம்,* கேவலப்படுத்தப்பட்டோம். பிரசவ நேரம் நெருங்கியும், பிள்ளை பெற்றெடுக்கச் சக்தியில்லாத பெண்ணைப் போல ஆகிவிட்டோம்.+  அசீரிய ராஜா தன்னுடைய ஊழியன் ரப்சாக்கேயை அனுப்பி, உயிருள்ள கடவுளைப் பழித்துப் பேசியிருக்கிறான்.+ அவன் பேசிய பேச்சை உங்கள் கடவுளான யெகோவா கேட்டிருப்பார். அவனுக்கு யெகோவா தக்க தண்டனை தருவார். அதனால், இப்போது தேசத்தில் மீதியிருக்கிற ஜனங்களுக்காக+ அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’+ என்று எசேக்கியா உங்களிடம் சொல்லச் சொன்னார்” என்றார்கள்.  எசேக்கியா ராஜாவின் ஊழியர்கள் இதை ஏசாயாவிடம் சொன்னபோது,+  ஏசாயா அவர்களிடம், “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘அசீரிய ராஜாவின் ஊழியர்கள்+ என்னை நிந்தித்துப் பேசியதைக் கேட்டு நீங்கள் பயப்படாதீர்கள்.+  அவன் மனதில் ஒரு யோசனையை வர வைப்பேன். ஒரு செய்தியைக் கேட்டு தன்னுடைய தேசத்துக்கு அவனைத் திரும்பிப் போக வைப்பேன்.+ அவனுடைய தேசத்திலேயே அவனை வாளுக்குப் பலியாக்குவேன்.’+ இதை உங்கள் எஜமானிடம் போய்ச் சொல்லுங்கள்” என்றார்.  அசீரிய ராஜா லாகீசிலிருந்து போய்விட்டதை ரப்சாக்கே கேள்விப்பட்டு, அவரிடம் திரும்பிப் போனான். அப்போது, அசீரிய ராஜா லிப்னாவுக்கு எதிராகப் போர் செய்துகொண்டிருந்தான்.+  அந்தச் சமயத்தில், “எத்தியோப்பிய ராஜாவான திராக்கா உங்களோடு போர் செய்ய வந்திருக்கிறார்” என்று அசீரிய ராஜாவிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டதும் அவன் மறுபடியும் எசேக்கியாவிடம் தூதுவர்களை அனுப்பினான்.+ 10  அந்தத் தூதுவர்களிடம், “நீங்கள் யூதாவின் ராஜா எசேக்கியாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: ‘எருசலேமை அசீரிய ராஜாவின் கையில் கொடுக்கப்போவதில்லை என்று உன் கடவுள் சொன்னால் அதை நம்பி ஏமாந்துவிடாதே.+ 11  இதோ பார்! அசீரிய ராஜாக்கள் மற்ற எல்லா தேசங்களையும் அடியோடு அழித்துப்போட்டதை நீ கேள்விப்படவில்லையா?+ நீ மட்டும் என் கையிலிருந்து தப்பித்துவிடுவாயா? 12  என்னுடைய முன்னோர்கள் மற்ற தேசங்களை அழித்தபோது அங்கிருந்த தெய்வங்களால் அவற்றைக் காப்பாற்ற முடிந்ததா?+ கோசான் ஜனங்களும் ஆரான்+ ஜனங்களும் ரேத்சேப் ஜனங்களும் தெல்-ஆசாரில் குடியிருந்த ஏதேன் ஜனங்களும் எங்கே? 13  காமாத்தின் ராஜாவும் அர்பாத்தின் ராஜாவும் எங்கே? செப்பர்வாயிம்,+ ஏனா, ஈவா நகரங்களின் ராஜாக்களெல்லாம் இப்போது எங்கே?’” என்று கேட்டான். 14  அசீரிய ராஜா அனுப்பிய கடிதங்களைத் தூதுவர்களிடமிருந்து எசேக்கியா வாங்கிப் படித்தார். பின்பு, யெகோவாவின் ஆலயத்துக்குப் போய் அவற்றை* யெகோவாவின் முன்னால் விரித்து வைத்து,+ 15  யெகோவாவிடம் ஜெபம் செய்து,+ 16  “பரலோகப் படைகளின் யெகோவாவே,+ இஸ்ரவேலின் தேவனே, கேருபீன்களுக்கு மேலே* வீற்றிருப்பவரே, நீங்கள் ஒருவர்தான் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் கடவுள். நீங்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்த உண்மைக் கடவுள். 17  யெகோவாவே, தயவுசெய்து காதுகொடுத்துக் கேளுங்கள்!+ யெகோவாவே, உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்!+ உயிருள்ள கடவுளாகிய உங்களைப் பழித்து சனகெரிப் என்னவெல்லாம் எழுதி அனுப்பியிருக்கிறான் என்று பாருங்கள்.+ 18  யெகோவாவே, அசீரிய ராஜாக்கள் எல்லா தேசங்களையும் அழித்துப்போட்டது உண்மைதான்,+ அவர்களுடைய சொந்த தேசத்தையும்கூட அவர்கள் அழித்துப்போட்டார்கள். 19  அங்கிருந்த ஜனங்கள் வணங்கிய தெய்வங்களையும் நெருப்பில் எரித்துப்போட்டார்கள்.+ அவையெல்லாம் கடவுள் கிடையாதே, மனுஷர்கள் செய்தவைதானே,+ வெறும் மரக்கட்டையும் கல்லும்தானே. அதனால்தான் அவர்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 20  ஆனால் யெகோவாவே, எங்கள் கடவுளே, நீங்கள் மட்டும்தான் கடவுள்+ என்பதைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் யெகோவாவே, எதிரியின் கையிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார். 21  பின்பு எசேக்கியாவுக்கு ஆமோத்சின் மகன் ஏசாயா இப்படிச் செய்தி அனுப்பினார்: “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா உன்னிடம் சொல்வது இதுதான்: ‘அசீரிய ராஜா சனகெரிப்பைப் பற்றி நீ என்னிடம் ஜெபம் செய்ததால்,+ 22  யெகோவாவாகிய நான் அவனுக்கு எதிராகச் சொல்வது இதுதான்: “சீயோன் கன்னிப்பெண் உன்னை ஏளனம் செய்கிறாள், கேலி செய்கிறாள். எருசலேம் மகள் உன்னைப் பார்த்துக் கிண்டலாகத் தலை ஆட்டுகிறாள். 23  நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்!+ அவரையே நிந்தித்துவிட்டாய்!அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+ அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+ 24  உன் ஊழியர்களை அனுப்பி யெகோவாவுக்கே சவால் விட்டு,+‘ஏராளமான போர் ரதங்களோடு வருவேன்,மலைகளின் உச்சிக்கே ஏறுவேன்,+லீபனோனின் எல்லைகளுக்குப் போவேன். அங்கே உயர்ந்தோங்கி நிற்கும் தேவதாரு மரங்களையும் செழிப்பான ஆபால் மரங்களையும் வெட்டுவேன். அங்கே இருக்கும் பெரிய மலைகளுக்கும் அடர்த்தியான காடுகளுக்கும் போவேன். 25  கிணறுகளைத் தோண்டி, தண்ணீரைக் குடிப்பேன்.என் பாதம் பட்டதும் எகிப்தின் ஆறுகள்* வறண்டுபோகும்’ என்று சொன்னாய். 26  நடக்க வேண்டியதை நான்தான் வெகு காலத்துக்கு முன்பே முடிவுசெய்தேன், இதை நீ கேள்விப்படவில்லையா? நான்தான் ஆரம்பக் காலத்திலிருந்தே இதை ஏற்பாடு செய்தேன்.*+ இப்போது இதை நிறைவேற்றப்போகிறேன்.+ மதில் சூழ்ந்த நகரங்களை நீ மண்மேடுகளாக்குவாய்.+ 27  அவற்றின் குடிமக்கள் எதுவும் செய்ய முடியாமல்* தவிப்பார்கள்.கதிகலங்கிப்போவார்கள், அவமானப்படுவார்கள். புல்பூண்டுகளைப் போல் வாடிப்போவார்கள்.கூரையில் முளைத்து, கிழக்குக் காற்றில் பட்டுப்போகும் புல்லைப் போல் ஆவார்கள். 28  நீ எப்போது உட்காருகிறாய், எப்போது போகிறாய், எப்போது வருகிறாய் என்றெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்.+எனக்கு எதிராக நீ கொதித்தெழுவதும் தெரியும்.+ 29  என்மேல் இருக்கிற ஆத்திரத்தில்+ நீ கத்துவதைக் கேட்டேன்.+ அதனால் உன் மூக்கில் கொக்கி மாட்டி, உன் வாயில் கடிவாளம் போட்டு,+வந்த வழியிலேயே உன்னைத் திரும்பிப் போக வைப்பேன்.” 30  “‘எசேக்கியா, உனக்கு நான் தரும் அடையாளம் இதுதான்: இந்த வருஷம் தானாக விளைந்ததை* சாப்பிடுவீர்கள். அடுத்த வருஷம் அதிலிருந்து முளைக்கிற பயிர்களைச் சாப்பிடுவீர்கள். ஆனால், அதற்கடுத்த வருஷம் நீங்களே விதைத்து அறுவடை செய்வீர்கள், திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.+ 31  யூதா ஜனங்களில் மீதியிருக்கிற ஆட்கள்+ மரம்போல் வேரூன்றி நிற்பார்கள், காய்த்துக் குலுங்குவார்கள். 32  மீதியிருக்கிற ஜனங்கள் எருசலேமிலிருந்தும், உயிர்தப்புகிற ஆட்கள் சீயோன் மலையிலிருந்தும் புறப்பட்டுப் போவார்கள்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.+ 33  அசீரிய ராஜாவைப் பற்றி யெகோவா சொல்வது என்னவென்றால்,+ “இந்த நகரத்துக்குள் அவன் வர மாட்டான்.+இங்கே ஒரு அம்புகூட எறிய மாட்டான்.கேடயத்தை எடுத்துக்கொண்டு போர் செய்ய மாட்டான்.மண்மேடுகள் அமைத்து முற்றுகையிடவும் மாட்டான்.”’+ 34  யெகோவா சொல்வது என்னவென்றால், ‘வந்த வழியிலேயே அவன் திரும்பிப் போவான்.இந்த நகரத்துக்குள் நுழைய மாட்டான். 35  என்னுடைய பெயருக்காகவும்+ என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும்+இந்த நகரத்தைப் பாதுகாப்பேன்,+ இதைக் காப்பாற்றுவேன்.’” 36  பின்பு, யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார். ஜனங்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+ 37  அதனால், அசீரிய ராஜாவான சனகெரிப் நினிவேக்குத்+ திரும்பிப் போய் அங்கேயே தங்கினான்.+ 38  ஒருநாள், அவனுடைய தெய்வமான நிஸ்ரோக்கின் கோயிலில் அவன் மண்டிபோட்டு வணங்கிக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய மகன்கள் அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு,+ அரராத் பகுதிக்குத்+ தப்பியோடினார்கள். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் எசரத்தோன்+ ராஜாவானான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கண்டிக்கப்பட்டோம்.”
நே.மொ., “அதை.”
அல்லது, “நடுவில்.”
வே.வா., “நைல் நதியின் கால்வாய்கள்.”
வே.வா., “உருவாக்கினேன்.”
வே.வா., “ஆதரவு இல்லாமல்.”
வே.வா., “சிந்திய தானியங்களிலிருந்து விளைந்ததை.”