ஏசாயா 40:1-31
40 “ஆறுதல் சொல்லுங்கள், என் ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்” என்று உங்கள் கடவுள் சொல்கிறார்.+
2 “எருசலேம் ஜனங்களின் உள்ளத்தைத் தொடும் விதத்தில்* பேசுங்கள்.அவர்களுடைய கஷ்ட காலம் முடிந்தது என்று சொல்லுங்கள்.அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனை கொடுக்கப்பட்டது.+
அவர்கள் செய்த பாவங்களுக்கான கூலியை யெகோவாவின் கையிலிருந்து முழுமையாக* வாங்கிவிட்டார்கள்.”+
3 வனாந்தரத்தில் ஒருவர்,
“யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்!*+
நம் கடவுளுக்காக பாலைவனத்தில்+ ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.+
4 எல்லா பள்ளத்தாக்குகளையும் உயர்த்துங்கள்.எல்லா மலைகளையும் குன்றுகளையும் தாழ்த்துங்கள்.
மேடுபள்ளமான நிலத்தைச் சமமாக்குங்கள்.கரடுமுரடான நிலத்தைச் சமவெளியாக்குங்கள்.+
5 யெகோவா தன்னுடைய மகிமையைக் காட்டுவார்.+ஜனங்கள் எல்லாரும் அதைப் பார்ப்பார்கள்.+யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்” என்று சத்தமாகச் சொல்கிறார்.
6 கேள்! யாரோ ஒருவர், “அறிவிப்பு செய்!” என்று சொல்கிறார்.
“எதை அறிவிப்பு செய்ய வேண்டும்?” என்று இன்னொருவர் கேட்கிறார்.
“மனுஷர்கள் எல்லாரும் பசும்புல்லைப் போல் இருக்கிறார்கள்.
அவர்கள் காட்டும் விசுவாசம்* புல்வெளிப் பூவைப் போல் இருக்கிறது.+
7 யெகோவாவின் மூச்சுக்காற்று பட்டதும்,பசும்புல் காய்ந்துபோகிறது.பூ வாடிப்போகிறது.+
உண்மையில், ஜனங்கள் பசும்புல்லைப் போலவே இருக்கிறார்கள்.
8 பசும்புல் காய்ந்துபோகிறது.பூ வாடிப்போகிறது.நம் கடவுளின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது.”+
9 சீயோனுக்காக நல்ல செய்தியைக் கொண்டுவருபவளே,+உயரமான மலைக்குப் போ.
எருசலேமுக்காக நல்ல செய்தியைக் கொண்டுவருபவளே,உன் குரலை உயர்த்தி சத்தமாகச் சொல்.
பயப்படாமல் தைரியமாகச் சொல்.
“இதோ, உங்கள் கடவுள் வருகிறார்” என்று யூதாவிலுள்ள நகரங்களில் சொல்.+
10 உன்னதப் பேரரசராகிய யெகோவா பலம்படைத்தவராக வருவார்.அவருடைய கை அவருக்காக ஆட்சி செய்யும்.+
இதோ! அவர் பரிசை எடுத்துக்கொண்டு வருகிறார்.கொடுக்கப்போகிற கூலியை எடுத்துக்கொண்டு வருகிறார்.+
11 ஒரு மேய்ப்பனைப் போல அவர் தன்னுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வார்.*+
ஆட்டுக்குட்டிகளைத் தன்னுடைய கைகளால் வாரிக்கொள்வார்.அவற்றைத் தன் நெஞ்சில் வைத்து சுமப்பார்.
கறவை* ஆடுகளை மெதுவாக* நடத்திக்கொண்டு போவார்.+
12 கடல் தண்ணீரையெல்லாம் கையால் அள்ளி அளந்தவன் யார்?+வானத்தைக் கையால் முழம்போட்டு அளந்தவன் யார்?
பூமியின் மண்ணைப் படியால் அளந்தவன் யார்?+மலைகளை எடைபோட்டுப் பார்த்தவன் யார்?குன்றுகளைத் தராசில் நிறுத்தியவன் யார்?
13 யெகோவாவின் சக்தியை அளந்தவன்* யார்?அவருக்கே ஆலோசனை சொல்ல முடிந்தவன் யார்?+
14 அவர் யாரிடம் அறிவுரை கேட்டுப் புரிந்துகொண்டார்?அவருக்கு நியாயத்தைச் சொல்லிக்கொடுக்கிறவன் யார்?அவருக்கு அறிவு புகட்டுகிறவன் யார்?உண்மைகளைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவுகிறவன்* யார்?+
15 இதோ, தேசங்களெல்லாம் வாளியிலிருந்து சிந்தும் ஒரு துளி தண்ணீரைப் போலவும்,தராசில் படிந்திருக்கும் தூசி போலவும் இருக்கின்றன.+
இதோ, அவர் தீவுகளைப் புழுதிபோல் தூக்குகிறார்.
16 பலிபீடத்தில் எரிப்பதற்கு லீபனோனில் இருக்கும் மரங்கள்கூட போதாது.தகன பலி செலுத்துவதற்கு அங்கிருக்கும் மிருகங்களும் போதாது.
17 தேசங்களெல்லாம் அவருக்கு முன்னால் ஒன்றுமே இல்லை.+அவையெல்லாம் அவருக்கு வீணானவை, வெறுமையானவை.+
18 கடவுளை நீங்கள் யாருக்கு ஒப்பிடுவீர்கள்?+
யாருடைய சாயலுக்கு ஒப்பிடுவீர்கள்?+
19 கைத்தொழிலாளி ஒரு சிலையைச் செய்கிறான்.ஆசாரி அதற்குத் தங்கத் தகடு அடிக்கிறான்.+வெள்ளிச் சங்கிலிகளைச் செய்கிறான்.
20 சிலையைச் செய்வதற்காக ஒருவன் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.+உளுத்துப்போகாத மரமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறான்.
விழாமல் நிற்கிற ஒரு சிலையைச் செதுக்குவதற்காகதிறமையான கைத்தொழிலாளியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான்.+
21 உங்களுக்குத் தெரியாதா?
நீங்கள் கேள்விப்பட்டது கிடையாதா?
ஆரம்பத்திலிருந்தே யாரும் உங்களுக்குச் சொன்னதில்லையா?
பூமி உண்டான சமயத்திலிருந்தே தெளிவாகத் தெரிவதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா?+
22 உருண்டையான* பூமிக்கு மேலே கடவுள் குடியிருக்கிறார்.+பூமியில் வாழ்கிற மனுஷர்கள் அவருக்கு முன்னால் வெட்டுக்கிளிகள்போல் இருக்கிறார்கள்.
லேசான வலைத்துணியை விரிப்பதுபோல் அவர் வானத்தை விரிக்கிறார்.குடியிருப்பதற்கான கூடாரம்போல் அதை அமைக்கிறார்.+
23 உயர் அதிகாரிகளின் அதிகாரத்தை அவர் பறிக்கிறார்.நீதிபதிகளை* ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆக்குகிறார்.
24 அவர்கள் நடப்படுவதற்குள்ளே,விதைக்கப்படுவதற்குள்ளே,வேரூன்றுவதற்குள்ளே,அவர்கள்மேல் ஊதுகிறார்; அவர்கள் பட்டுப்போகிறார்கள்.பதரைப் போல் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.+
25 “என்னை யாரோடு ஒப்பிடுவீர்கள், யாருக்குச் சமமாக்குவீர்கள்?” என்று பரிசுத்தமானவர் கேட்கிறார்.
26 “வானத்தை அண்ணாந்து பாருங்கள்.
அங்கே இருக்கும் நட்சத்திரங்களைப் படைத்தது யார்?+
அவற்றை ஒவ்வொன்றாக எண்ணி ஒரு படைபோல் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற கடவுள்தான் அவர்.அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்.+
அவருடைய அபாரமான ஆற்றலினாலும் பிரமிக்க வைக்கிற பலத்தினாலும்,+அவற்றில் ஒன்றுகூட குறையாமல் இருக்கிறது.
27 யாக்கோபே, இஸ்ரவேலே,‘என் வழியை யெகோவா பார்ப்பதில்லை,அவர் எனக்கு நியாயம் செய்வதில்லை’ என்று ஏன் சொல்கிறாய்?+
28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா?
பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார்.+
அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.+
அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.*+
29 சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்.தெம்பு இல்லாதவர்களுக்கு எல்லா பலமும் கொடுக்கிறார்.+
30 சிறுவர்கள் சோர்வடைந்து களைத்துப்போகலாம்,வாலிபர்களும் தடுமாறி விழலாம்,
31 ஆனால், யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள்.
கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாகப் பறப்பார்கள்.+
ஓடினாலும் களைத்துப்போக மாட்டார்கள்.நடந்தாலும் சோர்ந்துபோக மாட்டார்கள்.”+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “இதயத்துக்கு இதமாக.”
^ வே.வா., “இரண்டு மடங்காக.”
^ வே.வா., “சரிசெய்யுங்கள்.”
^ வே.வா., “மாறாத அன்பு.”
^ வே.வா., “மேய்ப்பார்.”
^ அதாவது, “குட்டிகளுக்குப் பாலூட்டுகிற.”
^ வே.வா., “மென்மையாக.”
^ அல்லது, “புரிந்துகொண்டவன்.”
^ வே.வா., “உண்மையான புரிந்துகொள்ளுதலின் வழியை அவருக்குக் காட்டுபவன்.”
^ வே.வா., “வட்டமான.”
^ வே.வா., “ஆட்சியாளர்களை.”
^ வே.வா., “அவருடைய புரிந்துகொள்ளும் திறன் நம் அறிவுக்கு எட்டாதது.”