கலாத்தியருக்குக் கடிதம் 5:1-26

  • கிறிஸ்தவ சுதந்திரம் (1-15)

  • கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பது (16-26)

    • பாவ இயல்புக்குரிய செயல்கள் (19-21)

    • கடவுளுடைய சக்தியால் வருகிற குணங்கள் (22, 23)

5  இப்படிச் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் கிறிஸ்து நம்மை விடுதலை செய்தார். அதனால் உறுதியாக நிலைத்திருங்கள்;+ மறுபடியும் அடிமைத்தனம் என்ற நுகத்தடியின்கீழ் போய்விடாதீர்கள்.+  பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது.+  மறுபடியும் சொல்கிறேன், விருத்தசேதனம் செய்துகொள்கிற ஒவ்வொருவனும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.+  திருச்சட்டத்தால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முயற்சி செய்கிற நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்திருக்கிறீர்கள்.+ அவருடைய அளவற்ற கருணையிலிருந்து விலகியிருக்கிறீர்கள்.  ஆனால் நாங்கள், கடவுளுடைய சக்தியாலும் எங்களுடைய விசுவாசத்தாலும் நீதிமான்களாவோம் என்று எதிர்பார்த்து ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம்.  கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருப்பவர்களைப் பொறுத்ததில், விருத்தசேதனம் செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாமல் இருப்பதும் முக்கியமல்ல.+ அன்பினால் விசுவாசத்தைக் காட்டுவதுதான் முக்கியம்.  சத்திய பாதையில் நீங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருந்தீர்களே.+ அப்படியிருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைத் தடுத்தது யார்?  விருத்தசேதனம் செய்துகொள்ள உங்களைத் தூண்டியது யார்? உங்களை அழைத்த கடவுள் அல்ல.  புளிப்புள்ள சிறிதளவு மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும்.+ 10  நம் எஜமானோடு ஒன்றுபட்டிருக்கிற நீங்கள்+ என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். உங்கள் மத்தியில் பிரச்சினை உண்டாக்குகிறவன்+ யாராக இருந்தாலும் சரி, அவனுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைக்கும். 11  சகோதரர்களே, விருத்தசேதனம் செய்யச் சொல்லி நான் இன்னமும் பிரசங்கிக்கிறேன் என்றால், ஏன் இன்னமும் துன்புறுத்தப்படுகிறேன்? நான் அப்படிப் பிரசங்கித்தால், சித்திரவதைக் கம்பத்தை*+ பற்றிய செய்தி யாரையும் கோபப்படுத்தாதே. 12  விருத்தசேதனம் என்ற பெயரில் உங்களைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறவர்கள் தங்களுடைய உறுப்பைத் துண்டித்துக்கொள்ளட்டும்.* 13  சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சுதந்திரத்தைப் பாவ ஆசைகளை நிறைவேற்றுவதற்குச் சாக்காகப் பயன்படுத்தாதீர்கள்.+ அதற்குப் பதிலாக, அன்பினால் ஒருவருக்கொருவர் அடிமைகளாக வேலை செய்யுங்கள்.+ 14  ஏனென்றால், “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்” என்ற ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவேறுகிறது.*+ 15  நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்துக் குதறிக்கொண்டே இருந்தால்+ ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்,+ எச்சரிக்கை! 16  நான் சொல்வது இதுதான்: கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடந்துகொண்டிருங்கள்,+ அப்போது எந்தவொரு பாவ ஆசையையும் நிறைவேற்ற மாட்டீர்கள்.+ 17  பாவ ஆசை கடவுளுடைய சக்திக்கு விரோதமானது. கடவுளுடைய சக்தியோ பாவ ஆசைக்கு விரோதமானது. இவை ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதால் நீங்கள் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்ய முடிவதில்லை.+ 18  அதோடு, கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடந்தால், நீங்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லை என்று அர்த்தம். 19  பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு,*+ அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை,*+ 20  சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு,*+ பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21  மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி,+ குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும்.+ இதுபோன்ற காரியங்களைச் செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள்+ என்று உங்களை ஏற்கெனவே எச்சரித்தது போல இப்போதும் எச்சரிக்கிறேன். 22  ஆனால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்* அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம்,+ விசுவாசம், 23  சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.+ இப்படிப்பட்டவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை. 24  கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் தங்கள் உடலை அதன் மோகங்களோடும் ஆசைகளோடும் சேர்த்து மரக் கம்பத்தில் ஆணியடித்துவிட்டார்கள்.+ 25  கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நாம் வாழ்ந்துகொண்டிருந்தால், அது காட்டுகிற வழியிலேயே தொடர்ந்து சீராக நடப்போமாக.+ 26  அதுமட்டுமல்ல, வறட்டு கௌரவம் பார்க்காமலும்,+ ஒருவருக்கொருவர் போட்டி போடாமலும்,+ ஒருவர்மேல் ஒருவர் வயிற்றெரிச்சல் படாமலும் இருப்போமாக.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அண்ணகர்களாக ஆகட்டும்.” இப்படிச் செய்வதன் மூலம், எந்தச் சட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்களோ அந்தச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் தகுதியில்லாதவர்களாக ஆகிவிடுவார்கள்.
வே.வா., “சக மனிதர்மேலும்.”
அல்லது, “அடங்கியிருக்கிறது.”
வே.வா., “பில்லிசூனியம்; போதைப்பொருளைப் பயன்படுத்துவது.”
நே.மொ., “கடவுளுடைய அரசாங்கத்தை ஆஸ்தியாகப் பெற.”
நே.மொ., “கடவுளுடைய சக்தியின் கனி.”