கலாத்தியருக்குக் கடிதம் 6:1-18

  • ஒருவர் சுமைகளை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள் (1-10)

    • ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான் (7, 8)

  • விருத்தசேதனம் முக்கியமல்ல (11-16)

    • புதிய படைப்பு (15)

  • முடிவுரை (17, 18)

6  சகோதரர்களே, ஒருவன் தவறான பாதையில் தெரியாமல் அடியெடுத்து வைத்தாலும்கூட, ஆன்மீகத் தகுதிகளையுடைய நீங்கள் அப்படிப்பட்டவனைச் சாந்தமாகச்+ சரிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேசமயத்தில், நீங்களும் எந்தத் தவறும் செய்துவிடாதபடி+ கவனமாக இருங்கள்.+  எப்போதும் ஒருவர் சுமைகளை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள்.+ இப்படிச் செய்யும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.+  ஒருவன் முக்கியமானவனாக இல்லாமலிருந்தும் தன்னை முக்கியமானவனாக நினைத்துக்கொண்டால்,+ அவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.  ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும்.+ அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்.+  ஒவ்வொருவனும் அவனவன் பாரத்தை* சுமப்பான்.+  அதோடு, கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கிறவன்* அதைக் கற்றுக்கொடுக்கிறவரோடு* சேர்ந்து நன்மையான எல்லா காரியங்களிலும் பங்குகொள்ளட்டும்.+  ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க* முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.+  பாவத்துக்காக விதைக்கிறவன் தன் பாவத்தால் அழிவை அறுவடை செய்வான். கடவுளுடைய சக்திக்காக விதைக்கிறவன் கடவுளுடைய சக்தியால் முடிவில்லாத வாழ்வை அறுவடை செய்வான்.+  அதனால், நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும். நாம் சோர்ந்துபோகாமல்* இருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.+ 10  அதனால், காலம் சாதகமாக இருக்கும்போதே எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும், முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய வேண்டும். 11  என் கைப்பட எவ்வளவு பெரிய எழுத்துக்களில் உங்களுக்கு எழுதியிருக்கிறேன், பாருங்கள்! 12  நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள்தான் விருத்தசேதனம் செய்யச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவுக்காக* தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கே அப்படிச் செய்கிறார்கள். 13  விருத்தசேதனம் செய்துகொள்கிறவர்கள்கூட திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை.+ ஆனால், உங்களை விருத்தசேதனம் செய்ய வைத்துவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்ளத்தான் உங்களை விருத்தசேதனம் செய்யச் சொல்கிறார்கள். 14  நானோ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவுடைய சித்திரவதைக் கம்பத்தை* தவிர வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பேச மாட்டேன்.+ என்னைப் பொறுத்தவரை, அவரால் இந்த உலகம் மரக் கம்பத்தில் அறையப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தைப் பொறுத்தவரை, நானும் மரக் கம்பத்தில் அறையப்பட்டிருக்கிறேன். 15  விருத்தசேதனம் செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாததும் முக்கியமல்ல.+ புதிய படைப்பாக ஆவதுதான் முக்கியம்.+ 16  இந்த விதிமுறைப்படி சீராக நடக்கிறவர்களாகிய கடவுளுடைய இஸ்ரவேலர்கள்+ எல்லாருக்கும் சமாதானமும் இரக்கமும் கிடைக்கட்டும். 17  இனி யாரும் எனக்குப் பிரச்சினை உண்டாக்க வேண்டாம். ஏனென்றால், நான் இயேசுவின் அடிமை என்பதற்கு அடையாளமாக என்னுடைய உடலில் சூட்டுத் தழும்புகளைச் சுமந்துகொண்டிருக்கிறேன்.+ 18  சகோதரர்களே, நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற உங்கள்மேல் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருக்கட்டும். ஆமென்.*

அடிக்குறிப்புகள்

வே.வா., “பொறுப்பு என்ற பாரத்தை.”
வே.வா., “வாய்மொழியாகக் கற்றுக்கொள்கிறவன்.”
வே.வா., “வாய்மொழியாகக் கற்றுக்கொடுக்கிறவரோடு.”
வே.வா., “ஏளனம் செய்துவிட்டுத் தப்பிக்க.”
வே.வா., “விட்டுவிடாமல்.”
நே.மொ., “கிறிஸ்துவின் சித்திரவதைக் கம்பத்துக்காக.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”