சகரியா 1:1-21
-
யெகோவாவிடம் திரும்பி வருவதற்கான அழைப்பு (1-6)
-
‘என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்’ (3)
-
-
தரிசனம் 1: குழிநாவல் மரங்களுக்கு இடையில் குதிரைவீரர்கள் (7-17)
-
“யெகோவாவாகிய நான் மறுபடியும் சீயோனை ஆறுதல்படுத்துவேன்” (17)
-
-
தரிசனம் 2: நான்கு கொம்புகளும் நான்கு கைத்தொழிலாளிகளும் (18-21)
1 தரியு ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், எட்டாம் மாதம்+ அது. அப்போது, இத்தோவின் பேரனும் பெரகியாவின் மகனுமாகிய சகரியா* தீர்க்கதரிசிக்கு+ யெகோவாவிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது:
2 “யெகோவாவாகிய நான் உங்கள் தகப்பன்கள்மேல் பயங்கர கோபமாயிருந்தேன்.+
3 நீ ஜனங்களிடம் போய், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “‘என்னிடம் திரும்பி வாருங்கள்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். ‘அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்”’ என்று சொல்.
4 ‘உங்கள் தகப்பன்களைப் போல இருக்காதீர்கள். அன்றைக்கு இருந்த தீர்க்கதரிசிகள் அவர்களிடம், “‘தயவுசெய்து உங்களுடைய மோசமான வழிகளையும் மோசமான செயல்களையும் விட்டுவிட்டு என்னிடம் திரும்புங்கள்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்” என்றார்கள்.’
‘ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை, என் வார்த்தையை மதிக்கவும் இல்லை’+ என்று யெகோவா சொல்கிறார்.
5 ‘இப்போது உங்கள் தகப்பன்களோ அந்தத் தீர்க்கதரிசிகளோ உயிரோடு இல்லை.
6 ஆனாலும், நான் கொடுத்த கட்டளைகளையும் சட்டங்களையும் மீறினால் என்ன நடக்கும் என்று என்னுடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளின் மூலம் நான் எச்சரித்தபடியே உங்கள் தகப்பன்களுக்கு நடந்ததுதானே?+ அதனால், அவர்கள் என்னிடம் திரும்பி வந்தார்கள். ‘நாங்கள் கெட்ட வழியில் போனோம், மோசமான காரியங்களைச் செய்தோம்; அதனால் பரலோகப் படைகளின் யெகோவா, தான் சொன்னபடியே எங்களைத் தண்டித்தார்’+ என்றார்கள்.”
7 தரியு ஆட்சி செய்த இரண்டாம் வருஷம்,+ 11-ஆம் மாதமாகிய சேபாத்* மாதம், 24-ஆம் தேதி, இத்தோவின் பேரனும் பெரகியாவின் மகனுமாகிய சகரியா தீர்க்கதரிசிக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது.
8 அதைப் பற்றி சகரியா சொன்னது இதுதான்: “நான் ராத்திரியில் ஒரு தரிசனத்தைப் பார்த்தேன். அதில், சிவப்புக் குதிரையின் மேல் ஒருவர் சவாரி செய்துகொண்டிருந்தார். அவர் பள்ளத்தாக்கில் இருந்த குழிநாவல் மரங்களுக்கு இடையில் வந்து நின்றார். அவருக்குப் பின்னால் சிவப்புநிறக் குதிரைகளும் பழுப்புநிறக் குதிரைகளும் வெள்ளைநிறக் குதிரைகளும் நின்றுகொண்டிருந்தன.”
9 உடனே நான், என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதரிடம், “என் எஜமானே, இந்தக் குதிரைகள்மேல் இருப்பவர்கள் யார்?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “இவர்கள் யாரென்று உனக்குக் காட்டுகிறேன்” என்றார்.
10 பின்பு, குழிநாவல் மரங்களுக்கு இடையில் நின்றுகொண்டிருந்தவர், “பூமி முழுவதும் சுற்றி வருவதற்காக யெகோவா அனுப்பியவர்கள்தான் இவர்கள்” என்றார்.
11 அப்போது குதிரைகள்மேல் இருந்தவர்கள், குழிநாவல் மரங்களுக்கு இடையில் நின்றுகொண்டிருந்த யெகோவாவின் தூதரிடம், “நாங்கள் பூமியைச் சுற்றி வந்தோம்; பூமி முழுவதும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது”+ என்று சொன்னார்கள்.
12 உடனே யெகோவாவின் தூதர், “பரலோகப் படைகளின் யெகோவாவே, எருசலேமின் மேலும் யூதா நகரங்களின் மேலும் இந்த 70 வருஷங்களாக நீங்கள் பயங்கர கோபத்தோடு இருந்தீர்கள்.+ இனியும் எத்தனை நாளைக்குத்தான் இரக்கம் காட்டாமல் இருப்பீர்கள்?”+ என்றார்.
13 அதற்கு யெகோவா, என்னோடு பேசிக்கொண்டிருந்த அந்தத் தேவதூதருக்கு அன்பாகவும் ஆறுதலாகவும் பதில் சொன்னார்.
14 பின்பு, என்னோடு பேசிக்கொண்டிருந்த அந்தத் தேவதூதர் என்னிடம், “நீ இதைச் சத்தமாக அறிவிப்பு செய்: ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், “எருசலேமுக்கும் சீயோனுக்கும் உதவி செய்ய நான் மிகுந்த வைராக்கியமாக இருக்கிறேன்.+
15 ஆனால், அலட்சியமாக இருக்கும் தேசங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறேன்.+ ஏனென்றால், நான் கொஞ்சமாகத் தண்டிக்க நினைத்த+ என்னுடைய ஜனங்களை அவர்கள் ரொம்பவே கொடுமைப்படுத்தினார்கள்.”’+
16 அதனால், யெகோவா சொல்வது இதுதான்: ‘“நான் எருசலேமுக்கு மறுபடியும் இரக்கம் காட்டுவேன்,+ என்னுடைய ஆலயம் அங்கே மறுபடியும் எழுப்பப்படும்.+ எருசலேம் அளவுநூலால் அளக்கப்பட்டு மீண்டும் கட்டப்படும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.’
17 ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய நகரங்கள் மறுபடியும் நல்ல காரியங்களால் நிரம்பி வழியும்; யெகோவாவாகிய நான் மறுபடியும் சீயோனை ஆறுதல்படுத்துவேன்,+ எருசலேமைத் திரும்பவும் தேர்ந்தெடுப்பேன்”’+ என்று இன்னும் ஒரு தடவை சத்தமாக அறிவிப்பு செய்” என்றார்.
18 பின்பு நான் தலைநிமிர்ந்து பார்த்தபோது, நான்கு கொம்புகள் தெரிந்தன.+
19 என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதரிடம், “இதெல்லாம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இந்தக் கொம்புகள் யூதாவையும்+ இஸ்ரவேலையும்+ எருசலேமையும்+ சிதறடித்த கொம்புகள்” என்று சொன்னார்.
20 பின்பு, யெகோவா எனக்கு நான்கு கைத்தொழிலாளிகளைக் காட்டினார்.
21 அப்போது நான், “இவர்கள் என்ன செய்வதற்காக வருகிறார்கள்?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “யூதாவுக்கு எதிராகத் தங்கள் கொம்புகளை உயர்த்திய தேசங்களின் கொம்புகளைப் பயமுறுத்தவும் வீழ்த்தவும் வருகிறார்கள்; அந்தக் கொம்புகள், யூதாவில் யாருமே தலைநிமிர முடியாதபடி எல்லாரையும் சிதறடித்த கொம்புகள்” என்றார்.