சகரியா 10:1-12

  • மழைக்காக யெகோவாவிடம் கேளுங்கள், பொய் தெய்வங்களிடம் கேட்காதீர்கள் (1, 2)

  • யெகோவா தன்னுடைய ஜனங்களை ஒன்றுசேர்ப்பார் (3-12)

    • யூதா வம்சத்தாரிடமிருந்து மிக முக்கியமானவர் வருகிறார் (3, 4)

10  “வசந்த கால மழைக்காக யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். மழைமேகத்தை உருவாக்குபவர் யெகோவாதான்.மழை தருபவர் அவர்தான்.+எல்லாருடைய வயலிலும் விளைச்சலைக் கொடுப்பவர் அவர்தான்.   குலதெய்வங்கள்* பொய்* பேசுகின்றன.குறிசொல்கிறவர்கள் போலி தரிசனத்தைப் பார்க்கிறார்கள்.ஒன்றுக்கும் உதவாத கனவுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். வீண் வார்த்தைகளால் ஆறுதல் சொல்கிறார்கள். அதனால், ஜனங்கள் ஆடுகளைப் போல அலைந்து திரிவார்கள். மேய்ப்பன் இல்லாமல் தவிப்பார்கள்.   மேய்ப்பர்கள்மேல் நான் பயங்கர கோபமாக இருக்கிறேன்.அடக்கி ஒடுக்கும் தலைவர்களைத் தண்டிப்பேன்.பரலோகப் படைகளின் யெகோவா, தன் மந்தையான யூதா ஜனங்களிடம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.+அவர்களைக் கம்பீரமான போர்க் குதிரையைப் போல ஆக்கியிருக்கிறார்.   அவரிடமிருந்து மிக முக்கியமானவர் வருகிறார்.அவரிடமிருந்து துணை அதிபர் வருகிறார்.அவரிடமிருந்து போர் வில் வருகிறது.அவரிடமிருந்தே எல்லா கண்காணிகளும்* ஒன்றாக வருகிறார்கள்.   போர் செய்யும் வீரர்களைப் போல,தெருக்களில் உள்ள சேற்றை அவர்கள் மிதிப்பார்கள். யெகோவா அவர்களுக்குப் பக்கத் துணையாக இருப்பதால் அவர்கள் போர் செய்வார்கள்.+குதிரைமேல் வருகிறவர்கள் அவமானம் அடைவார்கள்.+   நான் யூதா ஜனங்களை உயர்ந்த இடத்தில் வைப்பேன்.யோசேப்பின் வம்சத்தாரைக் காப்பாற்றுவேன்.+ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்.+அவர்களைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவேன்.முன்பு அவர்களை ஒதுக்கியிருந்தேன்; ஆனால், அந்த அடையாளமே தெரியாதளவுக்கு அவர்களை ஆசீர்வதிப்பேன்.+அவர்களுடைய கடவுளாகிய யெகோவா நானே. அவர்களுக்கு நான் பதில் சொல்வேன்.   எப்பிராயீமைச் சேர்ந்தவர்கள் மாவீரர்கள்போல் ஆவார்கள்.திராட்சமது குடித்ததுபோல் சந்தோஷமாக இருப்பார்கள்.+ அவர்களுடைய மகன்களும் அதைப் பார்த்து சந்தோஷம் அடைவார்கள்.யெகோவாவை நினைத்து உள்ளம் பூரித்துப்போவார்கள்.+   ‘நான்* அவர்களை ஒன்றாகக் கூடிவரச் செய்வேன்.அவர்களை விடுவிப்பேன்;+ அவர்கள் பெருகுவார்கள்.தொடர்ந்து பெருகிக்கொண்டே இருப்பார்கள்.   அவர்களை எல்லா இடங்களிலும் விதைகள்போல் வாரி இறைப்பேன்.ஆனாலும், தூர தேசங்களிலிருந்து அவர்கள் என்னை நினைத்துப் பார்ப்பார்கள்.அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் புத்துயிர் பெற்று திரும்பி வருவார்கள். 10  எகிப்திலிருந்து அவர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.அசீரியாவிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்.+கீலேயாத்துக்கும் லீபனோனுக்கும் அவர்களைக் கொண்டுவருவேன்.+அவர்களுக்கு இடமே போதாது.+ 11  நான் கடலைப் பிளந்து அதைக் கடந்து போவேன்.அதன் அலைகளை அடிப்பேன்.+நைல் நதியை வற்றச் செய்வேன். அசீரியாவின் கர்வத்தை அடக்குவேன்.எகிப்தின் கொடுங்கோல் ஆட்சியை நீக்குவேன்.+ 12  யெகோவாவாகிய என்னால் அவர்கள் மேன்மை அடைவார்கள்.+அவர்கள் என்னுடைய பெயருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் வாழ்வார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “குலதெய்வச் சிலைகள்.”
வே.வா., “மாய வார்த்தைகளை.”
வே.வா., “வேலை வாங்குகிற எல்லாரும்.”
நே.மொ., “நான் விசில் அடித்து.”