சகரியா 12:1-14

  • யூதாவையும் எருசலேமையும் யெகோவா பாதுகாப்பார் (1-9)

    • எருசலேம், “ஒரு பாறாங்கல்” (3)

  • குத்தப்பட்டவருக்காக ஜனங்கள் அழுது புலம்புகிறார்கள் (10-14)

12  ஓர் அறிவிப்பு: யெகோவா வானத்தை விரித்தவர்.+பூமிக்கு அஸ்திவாரம் போட்டவர்.+மனிதனுக்கு உயிர் கொடுத்தவர்.அவர் சொல்வது என்னவென்றால், “இஸ்ரவேலுக்கு யெகோவா சொல்லும் செய்தி இதுதான்.  நான் எருசலேமை ஒரு மது கிண்ணத்தைப் போலாக்குவேன்; சுற்றியிருக்கும் எல்லா ஜனங்களையும் அது தள்ளாட வைக்கும். யூதாவும் எருசலேமும் எதிரிகளால் சுற்றிவளைக்கப்படும்.+  அந்த நாளில், எருசலேம் நகரம் எல்லா ஜனங்களுக்கும் ஒரு பாறாங்கல்லைப் போல இருக்கும்படி செய்வேன். அதைத் தூக்குகிறவர்கள் கண்டிப்பாகப் படுகாயம் அடைவார்கள்.+ எல்லா தேசங்களும் எருசலேமுக்கு எதிராகத் திரண்டுவரும்.”+  யெகோவா சொல்வது இதுதான்: “அந்த நாளில், நான் எல்லா குதிரைகளையும் மிரள வைப்பேன். அவற்றின் மேல் சவாரி செய்பவர்களைப் பைத்தியமாக்குவேன். யூதா ஜனங்களின் மேல் என் கண்களைப் பதியவைப்பேன். ஆனால், மற்ற ஜனங்களின் குதிரைகளையெல்லாம் குருடாக்குவேன்.  யூதாவின் கோத்திரத் தலைவர்கள், ‘நமக்கு எருசலேம் ஜனங்கள்தான் பலம்; ஏனென்றால், அவர்களுடைய கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா அவர்களோடு இருக்கிறார்’+ என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொள்வார்கள்.  அவர்கள் அந்த நாளில், மரங்களைக் கொளுத்துகிற காட்டுத் தீ போலவும், வைக்கோல் கட்டுகளைப் பற்ற வைக்கிற தீப்பந்தம் போலவும் ஆகும்படி செய்வேன்.+ வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் அவர்கள் சாம்பலாக்கிவிடுவார்கள்.+ எருசலேம் ஜனங்கள் தங்களுடைய சொந்த ஊரான எருசலேமிலேயே மறுபடியும் குடியேறுவார்கள்.+  முதலில் யூதாவின் கூடாரங்களை யெகோவா பாதுகாப்பார். அப்போது யூதா, தாவீதின் வம்சத்தாரையும் எருசலேம் ஜனங்களையும் போலவே அழகாகும்.*  அந்த நாளில், எருசலேம் ஜனங்களை யெகோவா மதில்போல் பாதுகாப்பார்.+ அந்த நாளில், தடுமாறி விழுபவன்* தாவீதைப் போல ஆவான். தாவீதின் வம்சத்தார் கடவுளைப் போல, அதாவது அவர்கள்முன் போகிற யெகோவாவின் தூதரைப்+ போல ஆவார்கள்.  அந்த நாளில், எருசலேமுக்கு எதிராக வரும் எல்லா தேசங்களையும் நான் நிச்சயம் அழித்துவிடுவேன்.+ 10  கருணை மற்றும் மன்றாடுதலின் சக்தியை நான் தாவீதின் வம்சத்தார்மேலும் எருசலேம் ஜனங்கள்மேலும் பொழிவேன். அப்போது அவர்கள், யாரைக் குத்தினார்களோ அவரைப் பார்ப்பார்கள்.+ ஒரே மகனுக்காக அழுது புலம்புவது போல அவருக்காக அழுது புலம்புவார்கள். மூத்த மகனை இழந்து துக்கப்படுவது போல அவருக்காகத் துக்கப்படுவார்கள். 11  அந்த நாளில், மெகிதோ சமவெளியிலுள்ள ஆதாத்ரிம்மோனில் கேட்ட ஒப்பாரிச் சத்தத்தைப் போல+ எருசலேமில் பயங்கரமான ஒப்பாரிச் சத்தம் கேட்கும். 12  தேசத்திலுள்ள ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியாக ஒப்பாரி வைக்கும். தாவீதின் குடும்பத்தார் தனியாகவும், அவருடைய குடும்பத்துப் பெண்கள் தனியாகவும், நாத்தான்+ குடும்பத்தார் தனியாகவும், அவருடைய குடும்பத்துப் பெண்கள் தனியாகவும், 13  லேவி குடும்பத்தார்+ தனியாகவும், அவருடைய குடும்பத்துப் பெண்கள் தனியாகவும், சீமேயி குடும்பத்தார்+ தனியாகவும், அவருடைய குடும்பத்துப் பெண்கள் தனியாகவும், 14  மீதியிருக்கிற குடும்பங்கள் தனித்தனியாகவும், அந்தக் குடும்பங்களின் பெண்கள் தனித்தனியாகவும் ஒப்பாரி வைப்பார்கள்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “மேன்மை அடையும்.”
வே.வா., “ரொம்பவும் பலவீனமானவன்.”