சகரியா 13:1-9

  • சிலைகளும் பொய்த் தீர்க்கதரிசிகளும் ஒழிக்கப்படுகிறார்கள் (1-6)

    • பொய்த் தீர்க்கதரிசிகள் வெட்கப்பட்டுப்போவார்கள் (4-6)

  • மேய்ப்பன் தாக்கப்படுவான் (7-9)

    • மூன்றாவது பங்கு புடமிடப்படும் (9)

13  “அந்த நாளில், தாவீதின் வம்சத்தாரிடமும் எருசலேம் ஜனங்களிடமும் உள்ள பாவத்தையும் தீட்டையும் நீக்குவதற்காக ஒரு கிணறு வெட்டப்படும்.”+  பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “அந்த நாளில் தெய்வச் சிலைகளின் பெயர்கள்கூட தேசத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்.+ அவற்றை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காதபடி செய்துவிடுவேன். தேசத்தில் இருக்கிற தீர்க்கதரிசிகளையும் தீய* சக்தியையும் ஒழித்துக்கட்டுவேன்.+  அதன் பிறகும் ஒருவன் தீர்க்கதரிசனம் சொன்னால், அவனுடைய அப்பாவும் அம்மாவும், ‘யெகோவாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு பொய் பேசியதால் இனி நீ உயிரோடு இருக்க மாட்டாய்’ என்று சொல்வார்கள். அவன் தீர்க்கதரிசனம் சொன்னதால், அவனுடைய அப்பாவும் அம்மாவுமே அவனைக் குத்திக் கொல்வார்கள்.+  அந்த நாளில், தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரும் தாங்கள் சொன்ன தரிசனத்தால் வெட்கமடைவார்கள். அவர்கள் ரோமத்தாலான அங்கியை* போட்டுக்கொண்டு+ மற்றவர்களை ஏமாற்ற மாட்டார்கள்.  அவர்கள், ‘நான் ஒரு தீர்க்கதரிசி இல்லை. வயலில் வேலை செய்கிறவன். சிறுவனாக இருந்தபோது ஒருவர் என்னை அடிமையாக விலைக்கு வாங்கிவிட்டார்’ என்று சொல்வார்கள்.  ‘உன் உடம்பில்* ஏன் இத்தனை காயங்கள்?’ என்று ஒருவன் கேட்டால், ‘என்னுடைய நண்பர்களின்* வீட்டில் இருந்தபோது ஏற்பட்டது’ என்று சொல்வார்கள்.”   பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்:“வாளே, என் மேய்ப்பனைத்+ தாக்குவதற்காக எழும்பு! என் நண்பனை வீழ்த்துவதற்காகப் புறப்படு! மேய்ப்பனை வெட்டு,+ ஆடுகள் சிதறி ஓடட்டும்.+அற்பமானவர்களுக்கு எதிராக நான் என் கையை ஓங்குவேன்.”   யெகோவா சொல்வது இதுதான்:“எல்லா தேசத்திலும், மூன்றில் இரண்டு பங்கு ஆட்கள் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.ஒரு பங்கு ஆட்கள் விட்டுவைக்கப்படுவார்கள்.   அந்த ஒரு பங்கு ஆட்களையும்வெள்ளியைப் புடமிடுவது போல நெருப்பில் புடமிடுவேன்.தங்கத்தைச் சோதித்துப் பார்ப்பது போலச் சோதித்துப் பார்ப்பேன்.+ அவர்கள் என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள்.அவர்களுக்கு நான் பதில் கொடுப்பேன். ‘இவர்கள் என்னுடைய ஜனங்கள்’+ என்று நான் சொல்வேன். ‘யெகோவா எங்களுடைய கடவுள்’ என்று அவர்கள் சொல்வார்கள்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “அசுத்தமான.”
அதாவது, “தீர்க்கதரிசியின் அங்கியை.”
நே.மொ., “உன் கைகளுக்கு இடையில்.” அதாவது, “மார்பில் அல்லது முதுகில்.”
வே.வா., “என்னை நேசிப்பவர்களின்.”