சகரியா 2:1-13

  • தரிசனம் 3: அளவுநூலைக் கையில் பிடித்திருக்கிற ஒருவர் (1-13)

    • எருசலேம் அளக்கப்பட வேண்டும் (2)

    • யெகோவா ‘நெருப்பு மதில்போல் சூழ்ந்திருக்கிறார்’ (5)

    • கடவுளின் கண்மணியைத் தொடுகிறவன் (8)

    • பல தேசத்து ஜனங்கள் யெகோவாவிடம் வருவார்கள் (11)

2  நான் தலைநிமிர்ந்து பார்த்தபோது, அளவுநூலைக் கையில் பிடித்திருந்த ஒருவர் தெரிந்தார்.+  நான் அவரிடம், “நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “எருசலேமின் நீளத்தையும் அகலத்தையும் அளந்துபார்க்கப் போகிறேன்”+ என்றார்.  பின்பு, என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதர் புறப்பட்டுப் போனார். அப்போது, அவரைச் சந்திக்க வேறொரு தேவதூதர் வந்தார்.  இந்தத் தேவதூதர் அவரிடம், “நீ ஓடிப்போய் அந்த வாலிபனிடம் இப்படிச் சொல்: ‘“எருசலேமில் ஜனங்களும் ஆடுமாடுகளும் ஏராளமாகப் பெருகப்போவதால்,+ அது மதில்கள் இல்லாத ஊர்போல் இருக்கும்.  ஆனால், நான் ஒரு நெருப்பு மதில்போல் எருசலேமைச் சூழ்ந்திருப்பேன்.+ அது என் மகிமையால் நிறைந்திருக்கும்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”  “வாருங்கள்! வாருங்கள்! வட தேசத்திலிருந்து ஓடி வாருங்கள்”+ என்று யெகோவா சொல்கிறார். “ஏனென்றால், நான்கு திசைகளுக்கும் நான் உங்களைத் துரத்தியடித்தேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.  “சீயோன் ஜனங்களே, வாருங்கள்! பாபிலோன் நகரத்தில் குடியிருக்கிறவர்களே, அங்கிருந்து தப்பித்து வாருங்கள்!+  கடவுள் தன்னுடைய பெயருக்கு மகிமை சேர்த்த பின்பு, உங்களைச் சூறையாடிய தேசங்களிடம்+ என்னை அனுப்பினார். பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.+  இப்போது நான் அந்தத் தேசங்களுக்கு எதிராக என் கையை ஓங்குவேன். அவர்களுடைய அடிமைகளே அவர்களைச் சூறையாடுவார்கள்.’+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவாதான் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள். 10  சீயோன் மகளே, சந்தோஷத்தில் ஆரவாரம் செய்!+ நான் வந்து+ உன்னோடு தங்குவேன்”+ என்று யெகோவா சொல்கிறார். 11  “அந்த நாளில் பல தேசத்து ஜனங்கள் யெகோவாவாகிய என்னிடம் வருவார்கள்;+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள். சீயோன் ஜனங்களே, நான் உங்களோடு குடியிருப்பேன்” என்றும் அவர் சொல்கிறார். பரலோகப் படைகளின் யெகோவாதான் உங்களிடம் என்னை அனுப்பினார் என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 12  பரிசுத்தமான தேசத்தில் யெகோவா யூதாவைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வார். அவர் எருசலேமை மறுபடியும் தேர்ந்தெடுப்பார்.+ 13  மனிதர்களே, எல்லாரும் யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இருங்கள்! ஏனென்றால், அவர் தன்னுடைய பரிசுத்த இடத்திலிருந்து நடவடிக்கை எடுக்கிறார்.

அடிக்குறிப்புகள்