சகரியா 4:1-14
4 என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதர் திரும்ப வந்து, தூங்கும் ஒருவரை எழுப்புவது போல என்னை எழுப்பினார்.
2 பின்பு என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு நான், “முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குத்துவிளக்கைப்+ பார்க்கிறேன். அதன்மேல் ஒரு கிண்ணம் இருக்கிறது. அதோடு, ஏழு குழாய்கள் கொண்ட ஏழு அகல் விளக்குகள்+ இருக்கின்றன.
3 அந்தக் கிண்ணத்துக்கு வலது பக்கத்தில் ஒரு ஒலிவ மரம், இடது பக்கத்தில் ஒரு ஒலிவ மரம் என இரண்டு மரங்கள் இருக்கின்றன”+ என்று சொன்னேன்.
4 பின்பு நான் அந்தத் தேவதூதரிடம், “என் எஜமானே, இவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன்.
5 அதற்கு அவர், “இவற்றின் அர்த்தம் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
அதற்கு நான், “தெரியாது, என் எஜமானே!” என்றேன்.
6 அப்போது அவர், “செருபாபேலுக்கு யெகோவா சொல்லும் செய்தி இதுதான்: ‘“படை பலத்தாலும் அல்ல, மனித சக்தியாலும் அல்ல,+ என்னுடைய சக்தியால்தான் எல்லாமே நடக்கும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
7 மாபெரும் மலையே, செருபாபேலுக்கு+ முன்னால் நீ தரைமட்டமாவாய்.+ ஆலயத்தின் மேல்கல்லை அவர் கொண்டுவருவார். எல்லாரும் அதைப் பார்த்து, “எவ்வளவு அழகாக இருக்கிறது! எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று சத்தமாகச் சொல்வார்கள்’ என்றார்.”
8 மறுபடியும் யெகோவாவிடமிருந்து எனக்கு இந்தச் செய்தி கிடைத்தது:
9 “செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டன,+ அந்தக் கைகளே இதைக் கட்டி முடிக்கும்.+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
10 சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட வேலையை ஏன் அற்பமாக நினைக்க வேண்டும்?+ செருபாபேலின் கையில் இருக்கும் தூக்குநூலை* பார்த்து ஜனங்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். ஏழு கண்களும் அதைப் பார்க்கும்; அவை, பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற யெகோவாவின் கண்கள்.”+
11 பின்பு நான், “குத்துவிளக்குக்கு வலது பக்கத்தில் ஒரு ஒலிவ மரமும் இடது பக்கத்தில் ஒரு ஒலிவ மரமும் இருக்கிறதே,+ இவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன்.
12 அதன்பின் இரண்டாவது தடவை நான் அவரிடம், “இரண்டு தங்கக் குழாய்கள் வழியாகத் தங்க நிற எண்ணெயை ஊற்றுகிற இந்த இரண்டு ஒலிவ மரக் கிளைகளுக்கு* என்ன அர்த்தம்?” என்று கேட்டேன்.
13 அதற்கு அந்தத் தேவதூதர், “இவற்றின் அர்த்தம் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
அப்போது நான், “தெரியாது, என் எஜமானே!” என்றேன்.
14 அதற்கு அவர், “இவை, அபிஷேகம் செய்யப்பட்ட இரண்டு பேரைக் குறிக்கின்றன; அவர்கள் முழு பூமிக்கும் எஜமானாக இருக்கிறவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர்கள்”+ என்றார்.