சகரியா 6:1-15

  • தரிசனம் 8: நான்கு ரதங்கள் (1-8)

  • தளிர் என்ற பெயருடையவர் ராஜாவாகவும் குருவாகவும் சேவை செய்வார் (9-15)

6  பின்பு நான் மறுபடியும் தலைநிமிர்ந்து பார்த்தேன். அப்போது, செம்பினாலான இரண்டு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு ரதங்கள் வந்துகொண்டிருந்தன.  முதலாம் ரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் ரதத்தில் கறுப்புக் குதிரைகளும்+ பூட்டப்பட்டிருந்தன.  மூன்றாம் ரதத்தில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் ரதத்தில் புள்ளிகள் உள்ள கலப்புநிறக் குதிரைகளும்+ பூட்டப்பட்டிருந்தன.  என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதரிடம், “என் எஜமானே, இவையெல்லாம் என்ன?” என்று கேட்டேன்.  அதற்கு அந்தத் தேவதூதர், “முழு பூமிக்கும் எஜமானாக இருக்கிறவரிடமிருந்து கட்டளை பெற்றுக்கொண்டு பரலோகத்திலிருந்து புறப்படுகிற+ நான்கு ஜீவன்களே*+ இவை.  கறுப்புக் குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் வட தேசத்துக்குப் போகிறது.+ வெள்ளைக் குதிரைகள் மேற்கிலுள்ள தேசத்துக்கு* போகின்றன. புள்ளிகள் உள்ள குதிரைகள் தென் தேசத்துக்குப் போகின்றன.  அந்தக் கலப்புநிறக் குதிரைகள் பூமியில் சுற்றித்திரியத் துடித்தன” என்று சொன்னார். பின்பு அவர் அந்தக் குதிரைகளிடம், “போய் பூமியில் சுற்றித்திரியுங்கள்” என்று சொன்னார். உடனே அவை பூமியில் சுற்றித்திரிய ஆரம்பித்தன.  அதன்பின் அவர் என்னைக் கூப்பிட்டு, “அங்கே பார், வட தேசத்துக்குப் போன குதிரைகள் அந்தத் தேசத்தின் மேல் யெகோவாவுக்கு இருந்த கோபத்தைத் தணித்துவிட்டன” என்று சொன்னார்.  மறுபடியும் எனக்கு யெகோவாவிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது: 10  “சிறையிருப்பிலுள்ள ஜனங்களிடமிருந்து எல்தாயும் தொபையாவும் யெதாயாவும் கொண்டுவரும் நன்கொடையில் கொஞ்சத்தை நீ வாங்கிக்கொள். பாபிலோனிலிருந்து வரும் இவர்களோடு சேர்ந்து அன்றைக்கே செப்பனியாவின் மகன் யோசியாவின் வீட்டுக்குப் போ. 11  பின்பு, வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்து ஒரு கிரீடம் செய்து, தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமான யோசுவாவின் தலையில் வை.+ 12  பின்பு அவரிடம்,‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, தளிர் என்ற பெயருடைய ஒருவர் இருக்கிறார்.+ அவர் தன்னுடைய இடத்திலிருந்து துளிர்ப்பார். அவர் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்.+ 13  யெகோவாவின் ஆலயத்தைக் கட்டப்போவது அவர்தான், மேன்மை அடையப்போவதும் அவர்தான். அவர் தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டு ராஜாவாகவும் குருவாகவும் சேவை செய்வார்.+ அந்த இரண்டு பொறுப்புகளையும் ஒருங்கிணைந்து* செய்வார். 14  ஏலேம், தொபையா, யெதாயா+ ஆகியவர்களின் நினைவாகவும் செப்பனியாவின் மகன் ஏணுடைய நினைவாகவும் இந்த மகா கிரீடம் யெகோவாவின் ஆலயத்தில் இருக்கும். 15  பலர் தூர இடங்களிலிருந்து வந்து யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்கள்.” அப்போது, பரலோகப் படைகளின் யெகோவாவே என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் கடவுளான யெகோவா சொல்வதைக் கேட்டு நடந்தால் அதைத் தெரிந்துகொள்வீர்கள்’* என்று சொல்” என்றார்.

அடிக்குறிப்புகள்

தேவதூதர்கள் கொண்ட நான்கு படைகளைக் குறிக்கலாம்.
வே.வா., “கடல் தாண்டி.”
வே.வா., “சமாதானம் உண்டாகும்படி.”
வே.வா., “அது நிறைவேறும்.”