சங்கீதம் 105:1-45

  • யெகோவா தன் மக்களிடம் உண்மையோடு நடந்துகொள்கிறார்

    • யெகோவா தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறார் (8-10)

    • “நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல் கை வைக்காதீர்கள்” (15)

    • அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பைக் கடவுள் பயன்படுத்துகிறார் (17-22)

    • எகிப்தில் கடவுள் அற்புதங்களைச் செய்கிறார் (23-36)

    • எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் புறப்படுகிறார்கள் (37-39)

    • ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கடவுள் நினைத்துப் பார்க்கிறார் (42)

105  யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+   அவருக்காகப் பாடல் பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.*அவருடைய அதிசயமான செயல்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசியுங்கள்.*+   அவருடைய பரிசுத்த பெயரைப் பற்றிப் பெருமையாகப் பேசுங்கள்.+ யெகோவாவை நாடுகிறவர்களின் இதயம் சந்தோஷத்தில் துள்ளட்டும்.+   யெகோவாவைத் தேடுங்கள்,+ அவரிடம் பலம் கேட்டு வேண்டுங்கள். எப்போதும் அவருடைய முகத்தையே* நாடுங்கள்.   அவருடைய ஊழியரான ஆபிரகாமின் சந்ததியே,+யாக்கோபின் வம்சமே, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமே,+   அவர் செய்த அதிசயமான செயல்களையும் அற்புதங்களையும்அவர் கொடுத்த நீதித்தீர்ப்புகளையும் நினைத்துப் பாருங்கள்.+   அவர்தான் நம் கடவுளாகிய யெகோவா.+ அவருடைய நீதித்தீர்ப்புகள் பூமி முழுவதும் கொடுக்கப்படுகின்றன.+   அவர் தன்னுடைய ஒப்பந்தத்தை என்றென்றும் நினைத்துப் பார்க்கிறார்.+ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்குத் தந்த வாக்குறுதியை நினைத்துப் பார்க்கிறார்.+   ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தத்தையும்,+ஈசாக்குக்குக் கொடுத்த உறுதிமொழியையும்+ நினைத்துப் பார்க்கிறார். 10  அதை யாக்கோபுக்கு ஓர் ஆணையாகவும்,இஸ்ரவேலுக்கு ஒரு நிரந்தர ஒப்பந்தமாகவும் கொடுத்து உறுதிப்படுத்தினார். 11  அப்போது, “கானான் தேசத்தைஉனக்குச் சொத்தாகத் தருவேன்”+ என்று சொன்னார். 12  அந்தச் சமயத்தில் அவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்.+கொஞ்சத்திலும் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்.அந்தத் தேசத்தில் அவர்கள் அன்னியர்களாக இருந்தார்கள்.+ 13  தேசம் தேசமாக அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.ராஜ்யம் ராஜ்யமாகச் சுற்றித் திரிந்தார்கள்.+ 14  அவர்களை அடக்கி ஒடுக்க எந்த மனிதனையும் கடவுள் அனுமதிக்கவில்லை.+ஆனால், அவர்களுக்காக ராஜாக்களையே கண்டித்து,+ 15  “நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல்* கை வைக்காதீர்கள்.என் தீர்க்கதரிசிகளுக்கு எந்தக் கெடுதலும் செய்யாதீர்கள்”+ என்று சொன்னார். 16  தேசத்தில் அவர் பஞ்சத்தைக் கொண்டுவந்தார்.+உணவுப் பொருள்கள் கிடைக்காதபடி செய்தார்.* 17  தன்னுடைய மக்களுக்கு முன்னால் ஒரு மனிதரை அனுப்பி வைத்தார்.அவர்தான் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு.+ 18  அவருடைய கால்களில் விலங்கு போடப்பட்டது.+அவருடைய கழுத்தில் இரும்புச் சங்கிலி மாட்டப்பட்டது. 19  யெகோவா தந்த வாக்குறுதி நிறைவேறும்வரை,+அவருடைய வார்த்தைதான் யோசேப்பைப் புடமிட்டது. 20  யோசேப்பை விடுதலை செய்ய ராஜா ஆள் அனுப்பினார்.+மக்களின் தலைவர் அவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். 21  அவரைத் தன் அரண்மனைக்கு அதிகாரியாக்கினார்.தன்னுடைய எல்லா சொத்துக்கும் அதிபதியாக நியமித்தார்.+ 22  தன்னுடைய எல்லா அமைச்சர்களின் மேலும் அவருக்கு முழு அதிகாரம் கொடுத்தார்.தன்னுடைய பெரியோர்களுக்கு ஞானத்தைப் போதிக்க வைத்தார்.+ 23  பின்பு, இஸ்ரவேல் எகிப்துக்கு வந்தார்.+யாக்கோபு ஓர் அன்னியராக காமின் தேசத்தில் வாழ்ந்தார். 24  கடவுள் தன்னுடைய மக்களை ஏராளமாகப் பெருக வைத்தார்.+அவர்களுடைய எதிரிகளைவிட பலமுள்ளவர்களாக ஆக்கினார்.+ 25  பின்பு, அந்த ஆட்கள் மனம் மாறி தன்னுடைய மக்களைப் பகைப்பதற்கும்,தன்னுடைய ஊழியர்களுக்கு எதிராகச் சதி செய்வதற்கும் விட்டுவிட்டார்.+ 26  அதன்பின், தன்னுடைய ஊழியரான மோசேயையும்,+தான் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.+ 27  அவர்கள் எகிப்தியர்களின் முன்னால் அவருடைய அடையாளங்களைச் செய்தார்கள்.காமின் தேசத்தில் அவருடைய அற்புதங்களைச் செய்தார்கள்.+ 28  அவர் இருளை அனுப்பினார், தேசமும் இருண்டுபோனது.+அவர்கள் அவருடைய வார்த்தையை மீறவில்லை. 29  கடவுள் அந்தத் தேசத்தின் தண்ணீரையெல்லாம் இரத்தமாக மாற்றினார்.அதன் மீன்களையெல்லாம் சாகடித்தார்.+ 30  தேசம் முழுவதும் தவளைகள் குவிந்தன.+ராஜாவின் அறைகளிலும் புகுந்தன. 31  கொடிய ஈக்களும்* கொசுக்களும்,அவர்களுடைய எல்லா பகுதிகளிலும் படையெடுக்கும்படி அவர் கட்டளை கொடுத்தார்.+ 32  மழைக்குப் பதிலாக ஆலங்கட்டிகள்* விழும்படி செய்தார்.தேசத்தை மின்னல்* தாக்கும்படி செய்தார்.+ 33  அங்கிருந்த திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் அழித்தார்.எல்லா மரங்களையும் முறித்துப்போட்டார். 34  வெட்டுக்கிளிகளைப் படையெடுத்து வரச் சொன்னார்.இளம் வெட்டுக்கிளிகளைக் கணக்குவழக்கில்லாமல் வரச் சொன்னார்.+ 35  தேசத்திலிருந்த எல்லா செடிகொடிகளையும் அவை விழுங்கின.நிலத்தின் விளைச்சலைத் தின்றுதீர்த்தன. 36  பின்பு, அவர் அந்தத் தேசத்திலிருந்த முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் சாகடித்தார்.+அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார். 37  தன்னுடைய மக்களைத் தங்கத்தோடும் வெள்ளியோடும் புறப்பட வைத்தார்.+அவர்களில் ஒருவர்கூட பலவீனமாக இருக்கவில்லை. 38  இஸ்ரவேலர்களை நினைத்து எகிப்தியர்கள் பயந்து நடுங்கியதால்,+அவர்கள் புறப்பட்டபோது மிகவும் சந்தோஷப்பட்டார்கள். 39  கடவுள் மேகத்தை ஒரு திரைபோல் விரித்து இஸ்ரவேலர்களைப் பாதுகாத்தார்.+ ராத்திரியில் நெருப்பை அனுப்பி வெளிச்சம் தந்தார்.+ 40  அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வர வைத்தார்.+வானத்திலிருந்து உணவு தந்து அவர்களைத் திருப்திப்படுத்தினார்.+ 41  கற்பாறையைப் பிளந்து தண்ணீரைப் பாய்ந்தோட வைத்தார்.+அது பாலைவனத்தில் ஆறாய் ஓடியது.+ 42  அவர் தன்னுடைய ஊழியரான ஆபிரகாமுக்குக் கொடுத்த பரிசுத்தமான வாக்குறுதியை நினைத்துப் பார்த்தார்.+ 43  அதனால், தன்னுடைய மக்களை மிகுந்த சந்தோஷத்தோடு புறப்பட வைத்தார்.+தான் தேர்ந்தெடுத்த ஜனங்களைச் சந்தோஷ ஆரவாரத்தோடு புறப்பட வைத்தார். 44  மற்ற ஜனங்களின் தேசங்களை அவர்களுக்குக் கொடுத்தார்.+மற்ற தேசத்தாருடைய உழைப்பின் பலனை அவர்கள் அனுபவிக்கும்படி செய்தார்.+ 45  தன்னுடைய கட்டளைகளையும் சட்டங்களையும்அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்+ என்பதற்காகவே அப்படிச் செய்தார். “யா”வைப் புகழுங்கள்!*

அடிக்குறிப்புகள்

வே.வா., “இசை இசைத்திடுங்கள்.”
அல்லது, “அறிவியுங்கள்.”
வே.வா., “சன்னிதியையே.”
வே.வா., “அபிஷேகம் செய்தவர்கள்மேல்.”
நே.மொ., “ரொட்டிக் கோல்களை முறித்துப்போட்டார்.” இவை ஒருவேளை ரொட்டிகளை மாட்டி வைக்கப் பயன்படுத்தப்பட்ட கோல்களாக இருந்திருக்கலாம்.
இவை ஒருவகையான கடிக்கும் ஈக்கள்.
அதாவது, “பனிக்கட்டிகள்.”
வே.வா., “தீ ஜுவாலைகள்.”
வே.வா., “அவர்களுடைய ஆண்மையின் முதல் பலன்களை.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.