சங்கீதம் 106:1-48

  • இஸ்ரவேலர்கள் நன்றி காட்டவில்லை

    • கடவுள் செய்தவற்றைச் சீக்கிரத்தில் மறந்துவிட்டார்கள் (13)

    • கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் காளையின் உருவத்துக்குக் கொடுத்தார்கள் (19, 20)

    • கடவுளுடைய வாக்குறுதியில் அவர்கள் துளிகூட விசுவாசம் வைக்கவில்லை (24)

    • பாகாலை வணங்க ஆரம்பித்தார்கள் (28)

    • பிள்ளைகளைப் பேய்களுக்குப் பலி கொடுத்தார்கள் (37)

106  “யா”வைப் புகழுங்கள்!* யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.+அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+   யெகோவாவின் வல்லமையான செயல்களை யாரால் முழுமையாக அறிவிக்க முடியும்?அவருடைய அருமையான* செயல்கள் எல்லாவற்றையும் யாரால் அறிவிக்க முடியும்?+   நியாயமாக நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.எப்போதும் சரியானதைச் செய்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+   யெகோவாவே, உங்கள் மக்களுக்குக் கருணை காட்டும்போது என்னை நினைத்துப் பாருங்கள்.+ என்னைக் கவனித்துக்கொள்ளுங்கள், எனக்கு மீட்பு கொடுங்கள்.   அப்போதுதான், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு+ நீங்கள் தருகிற நன்மைகளை நானும் அனுபவிக்க முடியும்.உங்களுடைய தேசத்தாரோடு சேர்ந்து நானும் சந்தோஷப்பட முடியும்.உங்களுக்குச் சொத்துபோல் இருக்கிற ஜனங்களோடு சேர்ந்து பெருமையோடு உங்களைப் புகழ* முடியும்.   எங்கள் முன்னோர்களைப் போலவே நாங்களும் பாவம் செய்துவிட்டோம்.+நாங்கள் தவறு செய்துவிட்டோம், அக்கிரமம் செய்துவிட்டோம்.+   எகிப்தில் நீங்கள் செய்த அற்புதங்களை எங்களுடைய முன்னோர்கள் உணரவில்லை. நீங்கள் காட்டிய அளவுகடந்த அன்பை* நினைத்துப் பார்க்கவில்லை.அதற்குப் பதிலாக, செங்கடலின் ஓரத்தில் உங்களுக்கு எதிராகப் பேசினார்கள்.+   ஆனால், கடவுள் தன்னுடைய பெயரை மனதில் வைத்து அவர்களைக் காப்பாற்றினார்.+தன்னுடைய வல்லமையைக் காட்டுவதற்காக அவர்களைக் காப்பாற்றினார்.+   அவர் செங்கடலை அதட்டினார், அது காய்ந்துபோனது.பாலைவனத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போவதுபோல்,ஆழமான கடல் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்.+ 10  எதிரிகளின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.+விரோதிகளின் பிடியிலிருந்து விடுவித்தார்.+ 11  எதிரிகளைத் தண்ணீர் மூழ்கடித்தது.அவர்களில் ஒருவன்கூட தப்பிக்கவில்லை.+ 12  அப்போது, கடவுளுடைய ஜனங்கள் அவருடைய வாக்குறுதியில் நம்பிக்கை வைத்தார்கள்.+அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+ 13  ஆனால், அவர் செய்ததையெல்லாம் சீக்கிரத்தில் மறந்துவிட்டார்கள்.+அவருடைய அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. 14  வனாந்தரத்தில் தங்களுடைய சுயநல ஆசைகளுக்கு இடம்கொடுத்தார்கள்.+பாலைவனத்தில் கடவுளைச் சோதித்தார்கள்.+ 15  அவர்கள் கேட்டதைக் கடவுள் கொடுத்தார்.ஆனால் கடைசியில், உடலை உருக்கும் வியாதியால் அவர்களைத் தாக்கினார்.+ 16  முகாமில் அவர்கள் மோசேயைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள்.யெகோவாவுக்குப் பரிசுத்தமானவராக இருந்த+ ஆரோனைப் பார்த்தும் பொறாமைப்பட்டார்கள்.+ 17  அதனால், பூமி பிளந்து தாத்தானை விழுங்கியது.அபிராமுடன் கூடியிருந்த எல்லாரையும் புதைத்துவிட்டது.+ 18  அந்தக் கூட்டத்தின் நடுவே நெருப்பு பற்றியெரிந்தது.பொல்லாதவர்களைத் தீ ஜுவாலை சுட்டுப்பொசுக்கியது.+ 19  அவர்கள் ஓரேபில் கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்கள்.அந்த உலோகச் சிலை முன்னால் தலைவணங்கினார்கள்.+ 20  அவர்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை,வெறும் புல்லைத் தின்கிற காளையின் உருவத்துக்குக் கொடுத்தார்கள்.+ 21  தங்கள் மீட்பரான கடவுளை மறந்துவிட்டார்கள்.+எகிப்திலே மாபெரும் செயல்களையும்,+ 22  காமின் தேசத்திலே அதிசயங்களையும்,+செங்கடலிலே பிரமிப்பூட்டும் செயல்களையும் செய்தவரை மறந்துவிட்டார்கள்.+ 23  அவர்களை அழிப்பதற்குக் கடவுள் கட்டளை கொடுக்க இருந்தார்.ஆனால், அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரிடம் கெஞ்சினார்.ஆக்ரோஷத்தில் அவர்களை அழித்துவிட வேண்டாமென்று கெஞ்சினார்.+ 24  அருமையான தேசத்தை அந்த ஜனங்கள் அற்பமாக நினைத்தார்கள்.+கடவுளுடைய வாக்குறுதியில் அவர்கள் துளிகூட விசுவாசம் வைக்கவில்லை.+ 25  தங்கள் கூடாரங்களில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+யெகோவாவின் பேச்சை அவர்கள் கேட்கவில்லை.+ 26  அதனால், வனாந்தரத்தில் அவர்களைச் சாகடிக்கப்போவதாகஅவர் ஆணையிட்டுச் சொன்னார்.+ 27  அவர்களுடைய வம்சத்தாரை மற்ற ஜனங்கள்முன் வீழ்த்தப்போவதாகவும்,எல்லா தேசங்களுக்கும் அவர்களைச் சிதறடிக்கப்போவதாகவும் சொன்னார்.+ 28  அவர்கள் பாகால் பேயோரை வணங்க ஆரம்பித்தார்கள்.+செத்தவர்களுக்கு* படைக்கப்பட்டதைச் சாப்பிட்டார்கள். 29  கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்து அவரைக் கோபப்படுத்தினார்கள்.+அதனால், கொள்ளைநோய் அவர்கள் நடுவே பரவியது.+ 30  ஆனால், பினெகாஸ் எழுந்துபோய் நடவடிக்கை எடுத்தபோது,அந்தக் கொள்ளைநோய் ஓய்ந்தது.+ 31  அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.என்றென்றைக்கும், எல்லா தலைமுறைகளுக்கும், அவர் அப்படியே கருதப்படுவார்.+ 32  மேரிபாவின்* தண்ணீருக்குப் பக்கத்தில் அவர்கள் கடவுளைக் கோபப்படுத்தினார்கள்.அவர்களால் மோசேக்குப் பயங்கர பிரச்சினை வந்தது.+ 33  அந்த மக்கள் அவருக்கு எரிச்சலூட்டினார்கள்.அதனால், அவர் ஆத்திரப்பட்டுப் பேசிவிட்டார்.+ 34  மற்ற தேசத்து மக்களை அழிக்கும்படி யெகோவா கட்டளை கொடுத்திருந்தும்,+இஸ்ரவேலர்கள் அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்கள்.+ 35  அதற்குப் பதிலாக, அவர்களோடு நெருக்கமாகப் பழகினார்கள்.+அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள்.*+ 36  அவர்களுடைய சிலைகளை வணங்கினார்கள்.+அவை இஸ்ரவேலர்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிட்டன.+ 37  அவர்கள் தங்களுடைய மகன்களையும் மகள்களையும்பேய்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ 38  சொந்த மகன்களையும் மகள்களையுமேகானானியர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ஒரு பாவமும் அறியாதவர்களின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டே இருந்தார்கள்.+இப்படி, தேசத்தையே தீட்டுப்படுத்தினார்கள். 39  அவர்கள் தங்களுடைய செயல்களால் அசுத்தமானார்கள்.தங்களுடைய செயல்களால் கடவுளுக்குத் துரோகம் செய்தார்கள்.+ 40  அதனால், யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் பற்றியெரிந்தது.அவருடைய சொத்து போன்ற ஜனங்களை அவர் வெறுக்க ஆரம்பித்தார். 41  அவர்களைத் திரும்பத் திரும்ப மற்ற தேசத்து மக்களின் கையில் கொடுத்தார்.+அவர்களை வெறுத்தவர்கள் அவர்களை ஆளுவதற்கு விட்டுவிட்டார்.+ 42  விரோதிகள் அவர்களை அடக்கி ஒடுக்கினார்கள்.எதிரிகள் அவர்களை ஆட்டிப்படைத்தார்கள். 43  நிறைய தடவை கடவுள் அவர்களைக் காப்பாற்றினார்.+ஆனாலும், அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல், அவருடைய பேச்சை மீறினார்கள்.+குற்றம் செய்ததால் அவர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.+ 44  ஆனால், அவர்கள் பட்ட வேதனையைக் கடவுள் பார்த்தார்.+உதவிக்காக அவர்கள் கதறியதை அவர் கேட்டார்.+ 45  அவர்களுக்காகத் தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்த்தார்.அவர்கள்மேல் அளவுகடந்த அன்பு* வைத்திருந்ததால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.*+ 46  அவர்களைச் சிறைபிடித்துக்கொண்டு போன ஆட்கள்,அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படும்படி செய்தார்.+ 47  எங்கள் கடவுளாகிய யெகோவாவே, எங்களைக் காப்பாற்றுங்கள்.+மற்ற தேசங்களிலிருந்து எங்களைக் கூட்டிச்சேருங்கள்.+அப்போது, உங்களுடைய பரிசுத்தமான பெயருக்கு நன்றி சொல்வோம்.சந்தோஷம் பொங்க உங்களைப் புகழ்வோம்.+ 48  இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்!என்றென்றும் அவருக்குப் புகழ் சேரட்டும்!+ மக்கள் எல்லாரும் “ஆமென்!”* என்று சொல்லட்டும். “யா”வைப் புகழுங்கள்!*

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “புகழத்தக்க.”
வே.வா., “உங்களைப் பற்றிப் பேச.”
வே.வா., “மாறாத அன்பை.”
இது உயிரற்ற தெய்வங்களையும் குறிக்கலாம்.
அர்த்தம், “தகராறு செய்தல்.”
வே.வா., “கற்றுக்கொண்டார்கள்.”
வே.வா., “வருத்தப்பட்டார்.”
வே.வா., “மாறாத அன்பு.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்!”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.