சங்கீதம் 109:1-31

  • வேதனையில் இருக்கிறவரின் ஜெபம்

    • ‘அவனுடைய பொறுப்பை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்’ (8)

    • கடவுள் ஏழையின் பக்கத்தில் நிற்கிறார் (31)

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். 109  நான் போற்றிப் புகழும் கடவுளே,+ மவுனமாக இருக்காதீர்கள்.   பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறார்கள்.+   என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்கள் என்மேல் வெறுப்பைக் கொட்டுகிறார்கள்.காரணமே இல்லாமல் என்னைத் தாக்குகிறார்கள்.+   நான் அன்பு காட்டியதற்குக் கைமாறாக என்னை எதிர்க்கிறார்கள்.+ஆனால், நான் ஜெபம் செய்துகொண்டே இருக்கிறேன்.   நான் நல்லது செய்ததற்குக் கைமாறாக எனக்குக் கெடுதல் செய்கிறார்கள்.+என் அன்புக்குக் கைமாறாக வெறுப்பைக் காட்டுகிறார்கள்.+   அவனை அக்கிரமக்காரனின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படுத்துங்கள்.அவனை எதிர்க்கிறவன்* அவனுடைய வலது பக்கத்தில் நிற்கட்டும்.   குற்றவாளி என்ற தீர்ப்பை அவன் பெறட்டும்.அவன் செய்கிற ஜெபம்கூட பாவமென்று கருதப்படட்டும்.+   அவனுடைய வாழ்நாட்கள் குறைந்துபோகட்டும்.+அவனுடைய கண்காணிக்கும் பொறுப்பை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்.+   அவனுடைய பிள்ளைகள் அப்பா இல்லாமல் தவிக்கட்டும்.அவனுடைய மனைவி விதவையாகட்டும். 10  அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்.பாழாக்கப்பட்ட தங்கள் வீடுகளைவிட்டுப் போய் உணவு தேடட்டும். 11  அவனுக்குக் கடன் கொடுத்தவன் அவனிடமிருக்கிற எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்ளட்டும்.முன்பின் தெரியாதவர்கள் அவனுடைய சொத்துகளைக் கொள்ளையடிக்கட்டும். 12  ஒருவனும் அவனுக்கு அன்பு* காட்டாமல் இருக்கட்டும்.அப்பா இல்லாத அவனுடைய பிள்ளைகளுக்கு யாரும் கருணை காட்டாமல் இருக்கட்டும். 13  அவனுடைய சந்ததி அழிந்துபோகட்டும்.+ஒரே தலைமுறைக்குள் அவர்களுடைய பெயர் சுவடு தெரியாமல் அழிந்துபோகட்டும். 14  அவனுடைய முன்னோர்கள் செய்த குற்றங்களை யெகோவா நினைத்துப் பார்க்கட்டும்.+அவனுடைய தாயின் பாவம் துடைத்தழிக்கப்படாமல் இருக்கட்டும். 15  அவர்கள் செய்ததையெல்லாம் யெகோவா எப்போதும் நினைத்துப் பார்க்கட்டும்.அவர்களைப் பற்றிய நினைவை இந்த உலகத்திலிருந்து அடியோடு அழித்துப்போடட்டும்.+ 16  ஏனென்றால், அவன் அன்பு* காட்ட நினைக்கவில்லை.+அதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்டவர்களையும் ஏழைகளையும்உள்ளம் உடைந்தவர்களையும் சாகடிப்பதற்காக+ அவர்களைத் துரத்திக்கொண்டே இருந்தான்.+ 17  மற்றவர்களைச் சபிக்க அவன் துடித்தான், அதனால் அவனுக்குச் சாபம்தான் வந்தது.மற்றவர்களை ஆசீர்வதிக்க அவன் விரும்பவில்லை, அதனால் அவனுக்கு எந்த ஆசீர்வாதமும் கிடைக்கவில்லை. 18  சாபங்களை உடைபோல் உடுத்தியிருந்தான். அந்தச் சாபங்கள் தண்ணீர்போல் அவனுக்குள் ஊற்றப்பட்டன.எண்ணெய்போல் அவனுடைய எலும்புகளுக்குள் ஊற்றப்பட்டன. 19  அவை அவனுடைய உடலைப் போர்த்தியிருக்கும் உடை போலவும்,+அவன் எப்போதுமே கட்டியிருக்கும் இடுப்புவார் போலவும் ஆகட்டும். 20  என்னை எதிர்க்கிறவனுக்கு யெகோவா தருகிற கூலி இதுதான்.+என்னைப் பற்றி மோசமாகப் பேசுகிறவனுக்குக் கிடைக்கிற பலன் இதுதான். 21  ஆனால், உன்னதப் பேரரசரான யெகோவாவே,உங்களுடைய பெயரை மனதில் வைத்து எனக்கு உதவி செய்யுங்கள்.+ உங்களுடைய மாறாத அன்பு அருமையானது, அதனால் என்னைக் காப்பாற்றுங்கள்.+ 22  நான் ஆதரவற்ற ஒரு ஏழை.+என் இதயம் ரணமாகியிருக்கிறது.+ 23  மாலைநேர நிழல் போல நான் மறைந்துபோகிறேன்.வெட்டுக்கிளி போலக் காற்றில் அடித்துக்கொண்டு போகப்படுகிறேன். 24  சாப்பிடாமல் கிடந்ததால் என் முழங்கால்கள் தள்ளாடுகின்றன.நான் மெலிந்துவிட்டேன், நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே போகிறேன். 25  அவர்களுடைய பழிப்பேச்சுக்கு ஆளாகிவிட்டேன்.+ அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாகத் தலையை ஆட்டுகிறார்கள்.+ 26  என் கடவுளாகிய யெகோவாவே, எனக்கு உதவி செய்யுங்கள்.உங்களுடைய மாறாத அன்பினால் என்னைக் காப்பாற்றுங்கள். 27  யெகோவாவே, இது உங்கள் செயல் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.நீங்கள்தான் இதைச் செய்தீர்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளட்டும். 28  அவர்கள் சபித்தாலும், நீங்கள் ஆசீர்வதியுங்கள். அவர்கள் எனக்கு எதிராகக் கிளம்பும்போது அவர்களை அவமானப்பட வையுங்கள்.ஆனால், உங்கள் ஊழியனைச் சந்தோஷப்பட வையுங்கள். 29  என்னை எதிர்க்கிறவர்களுக்கு அவமானம் மேலாடைபோல் ஆகட்டும்.வெட்கம் அவர்களுக்கு மேலங்கிபோல் ஆகட்டும்.+ 30  வாய் ஓயாமல் நான் யெகோவாவைப் புகழ்வேன்.பல பேருக்கு முன்னால் அவரைப் புகழ்வேன்.+ 31  ஏனென்றால், ஏழையின் வலது பக்கத்தில் அவர் நிற்பார்.அவன்மேல் குற்றம் சுமத்துகிறவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றுவார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவன்மேல் குற்றம் சுமத்துகிறவன்.”
வே.வா., “மாறாத அன்பு.”
வே.வா., “மாறாத அன்பு.”