சங்கீதம் 22:1-31

  • முதலில் வேதனைப்படுகிறார், பின்பு புகழ்கிறார்

    • “என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?” (1)

    • “என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்” (18)

    • சபை நடுவில் கடவுளைப் புகழ்தல் (22, 25)

    • பூமியிலுள்ள எல்லாரும் கடவுளை வணங்குவார்கள் (27)

இசைக் குழுவின் தலைவனுக்கு; “விடியற்கால பெண் மான்” இசையில்;* தாவீதின் சங்கீதம். 22  என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?+ ஏன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்கிறீர்கள்?நான் வேதனையில் கதறுவதை ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?+   என் கடவுளே, பகலில் உங்களைக் கூப்பிடுகிறேன்,ராத்திரியிலும் உங்களிடம் கெஞ்சுகிறேன்,நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.+   நீங்கள் பரிசுத்தமானவர்,+இஸ்ரவேலின் துதிகளால் சூழப்பட்டிருப்பவர்.*   எங்களுடைய முன்னோர்கள் உங்களையே நம்பியிருந்தார்கள்.+அவர்கள் உங்களை நம்பியதால் நீங்கள் அவர்களைக் காப்பாற்றி வந்தீர்கள்.+   உதவிக்காக உங்களிடம் கெஞ்சினார்கள், நீங்களும் அவர்களைக் காப்பாற்றினீர்கள்.உங்கள்மேல் நம்பிக்கை வைத்தார்கள், அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.*+   ஆனால் நான் அவமதிக்கப்படுகிறேன், கேவலப்படுத்தப்படுகிறேன்.ஜனங்கள் என்னை ஒரு புழுபோல் பார்க்கிறார்கள், மனிதனாகவே மதிப்பதில்லை.+   என்னைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்கிறார்கள்.+என்னைக் கிண்டல் செய்து, ஏளனமாகத் தலையை ஆட்டுகிறார்கள்.+   “யெகோவாவை நம்பியிருந்தானே, அவர் வந்து இவனைக் காப்பாற்றட்டும்! உண்மையிலேயே இவன்மேல் பிரியமாக இருந்தால் இவனைக் காப்பாற்றட்டும்!” என்று சொல்கிறார்கள்.+   என் தாயின் வயிற்றிலிருந்து என்னை வெளியே கொண்டுவந்தவர் நீங்கள்தான்.+என் தாய் எனக்குப் பாலூட்டிய காலத்தில் என்னைப் பாதுகாத்தவரும் நீங்கள்தான். 10  பிறந்ததிலிருந்தே நான் உங்களுடைய கவனிப்பில்தான் இருந்து வருகிறேன்.என் தாயின் கர்ப்பத்திலிருந்த சமயத்திலிருந்தே நீங்கள்தான் என் கடவுள். 11  ஆபத்து நெருங்கி வருகிறது, என்னைவிட்டுத் தூரமாகப் போய்விடாதீர்கள்.+உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை.+ 12  இளம் காளைகள் பல என்னைச் சுற்றி நிற்கின்றன.+பாசானின் கொழுத்த காளைகள் என்னைச் சுற்றிவளைக்கின்றன.+ 13  கர்ஜிக்கிற சிங்கம் இரையைக் கடித்துக் குதறுவது போல,+எதிரிகள் என்னைக் கடித்துக் குதற வாயைத் திறக்கிறார்கள்.+ 14  நான் தண்ணீர்போல் ஊற்றப்படுகிறேன்.என் எலும்புகள் பிசகிவிட்டன. என் இதயம் மெழுகுபோல் ஆகிவிட்டது.+அது எனக்குள் உருகி ஓடுகிறது.+ 15  என்னுடைய சக்தியெல்லாம் போய்விட்டது, உடைந்துபோன ஓடுபோல் ஆகிவிட்டேன்.+என் நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது.+நீங்கள் என்னைச் சவக்குழிக்குள் இறங்க வைக்கிறீர்கள்.+ 16  நாய்களைப் போல எதிரிகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.+அக்கிரமக்காரர்களின் கும்பலைப் போல என்னைச் சுற்றிவளைக்கிறார்கள்.+சிங்கத்தைப் போல என் கைகளையும் பாதங்களையும் தாக்குகிறார்கள்.+ 17  என்னுடைய எலும்புகளையெல்லாம் என்னால் எண்ண முடிகிறது.+ அவர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 18  என்னுடைய அங்கிகளைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்,என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்.+ 19  யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாகவே இருந்துவிடாதீர்கள்.+ நீங்கள்தான் என்னுடைய பலம்; சீக்கிரமாக வந்து எனக்கு உதவி செய்யுங்கள்.+ 20  வாளுக்குப் பலியாகாதபடி என்னைக் காப்பாற்றுங்கள்.நாய்களின் பிடியிலிருந்து* என்னுடைய அருமையான உயிரைக் காப்பாற்றுங்கள்.+ 21  சிங்கத்தின் வாயிலிருந்தும்,+காட்டு எருதுகளின் கொம்புகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்.எனக்குப் பதில் கொடுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள். 22  என்னுடைய சகோதரர்களுக்கு உங்களுடைய பெயரை அறிவிப்பேன்.+சபை நடுவில் உங்களைப் புகழ்வேன்.+ 23  யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைப் புகழுங்கள்! யாக்கோபின் சந்ததியைச் சேர்ந்தவர்களே, அவரை மகிமைப்படுத்துங்கள்!+ இஸ்ரவேல் சந்ததியில் வந்தவர்களே, பயபக்தியோடு அவர் முன்னால் நில்லுங்கள். 24  அடக்கி ஒடுக்கப்படுகிறவனின் கஷ்டத்தை அவர் அற்பமாக நினைக்கவும் இல்லை, அலட்சியப்படுத்தவும் இல்லை.+அவனிடமிருந்து தன்னுடைய முகத்தை அவர் மறைத்துக்கொள்ளவும் இல்லை.+ உதவி கேட்டு அவன் கதறியதை அவர் கேட்டார்.+ 25  பெரிய சபையில் நான் உங்களைப் புகழ்வேன்.+உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு முன்னால் என் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவேன். 26  தாழ்மையானவர்கள்* சாப்பிட்டு, திருப்தியாக இருப்பார்கள்.+யெகோவாவைத் தேடுகிறவர்கள் அவரைப் புகழ்வார்கள்.+ அவர்கள் என்றென்றும் வாழ்க்கையை அனுபவித்து மகிழட்டும்.* 27  பூமியெங்கும் இருக்கிறவர்கள் யெகோவாவை நினைத்துப் பார்த்து அவரிடம் திரும்புவார்கள். பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உங்கள் முன்னால் தலைவணங்கும்.+ 28  ஏனென்றால், யெகோவாதான் ராஜா.+எல்லா ஜனங்களையும் ஆளுகிறவர் அவர்தான். 29  பூமியிலுள்ள செல்வச்சீமான்கள்* நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, அவர் முன்னால் தலைவணங்குவார்கள்.மண்ணுக்குள் போகிறவர்கள் அவர் முன்னால் மண்டிபோடுவார்கள்.அவர்களில் ஒருவரால்கூட தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. 30  அவர்களுடைய வம்சத்தில் வருகிறவர்கள் அவருக்குச் சேவை செய்வார்கள்.வருங்காலச் சந்ததிக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும். 31  அவர்கள் வந்து கடவுளுடைய நீதியைப் பற்றிச் சொல்வார்கள். அவர் செய்த காரியங்களைப் பற்றி வருங்காலத் தலைமுறைக்குத் தெரிவிப்பார்கள்.

அடிக்குறிப்புகள்

ஒருவேளை, ஒரு ராகமாகவோ இசைப் பாணியாகவோ இருந்திருக்கலாம்.
வே.வா., “துதிகளுக்கு நடுவே வீற்றிருப்பவர்.”
வே.வா., “அவர்கள் வெட்கப்பட்டுப்போகவில்லை.”
நே.மொ., “கையிலிருந்து.”
வே.வா., “சாந்தமானவர்கள்.”
நே.மொ., “உங்கள் இதயம் என்றென்றும் வாழட்டும்.”
நே.மொ., “கொழுத்துப்போனவர்கள்.”