சங்கீதம் 31:1-24

  • யெகோவாவிடம் அடைக்கலம் புகுதல்

    • “என் உயிரை உங்களுடைய கையில் ஒப்படைக்கிறேன்” (5)

    • ‘யெகோவா, சத்தியத்தின் கடவுள்’ (5)

    • கடவுள் தரும் ஏராளமான நன்மைகள் (19)

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். 31  யெகோவாவே, உங்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்.+ நான் அவமானப்படுவதற்கு ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.+ நீங்கள் நீதியானவர் என்பதால் என்னைக் காப்பாற்றுங்கள்.+   என் வேண்டுதலைக் காதுகொடுத்து* கேளுங்கள். என்னைக் காப்பாற்ற சீக்கிரமாக வாருங்கள்.+ மலைக்கோட்டை போல எனக்கு அடைக்கலம் கொடுங்கள்.மதில் சூழ்ந்த நகரம் போல எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+   நீங்கள் எனக்கு மாபெரும் கற்பாறையாகவும் கோட்டையாகவும் இருக்கிறீர்கள்.+உங்கள் பெயருக்காக+ நீங்கள் எனக்கு வழிகாட்டுவீர்கள், என்னை நடத்திச் செல்வீர்கள்.+   எதிரிகள் தந்திரமாக விரித்த வலையிலிருந்து என்னை விடுவிப்பீர்கள்.+ஏனென்றால், நீங்கள்தான் என் கோட்டை.+   என் உயிரை உங்களுடைய கையில் ஒப்படைக்கிறேன்.+ யெகோவாவே, சத்தியத்தின்* கடவுளே,+ நீங்கள் என்னை விடுவித்திருக்கிறீர்கள்.   நான் யெகோவாவையே நம்பியிருக்கிறேன்.ஒன்றுக்கும் உதவாத வீணான சிலைகளை வணங்குகிற ஆட்களை வெறுக்கிறேன்.   நீங்கள் காட்டும் மாறாத அன்பினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.நான் படுகிற கஷ்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.+என் அடிமனதிலுள்ள வேதனையை அறிந்திருக்கிறீர்கள்.   என்னை எதிரியிடம் ஒப்படைக்காமல்,பாதுகாப்பான* இடத்தில் நிற்க வைத்திருக்கிறீர்கள்.   யெகோவாவே, நான் தவியாய்த் தவிக்கிறேன், எனக்குக் கருணை காட்டுங்கள். கடுமையான வேதனையில் என் கண்கள் சோர்ந்துவிட்டன,+ என்னுடைய முழு உடலுமே தளர்ந்துவிட்டது.+ 10  என் வாழ்நாள் துக்கத்தில்தான் கழிகிறது.+என் ஆயுள்காலம் மனக் குமுறலில்தான் கடந்துபோகிறது.+ நான் செய்த பாவத்தால் என் சக்தி கரைந்துபோகிறது.என் எலும்புகள் பலவீனமாகின்றன.+ 11  எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+ பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+ 12  நான் ஏதோ செத்துவிட்டது போல என்னை அடியோடு மறந்துவிட்டார்கள்.நான் உடைந்த ஜாடிபோல் ஆகிவிட்டேன். 13  என்னைப் பற்றி நிறைய வதந்திகளைக் கேள்விப்படுகிறேன்.எங்கே திரும்பினாலும் திகிலாக இருக்கிறது.+ எதிரிகள் எனக்கு எதிராக ஒன்றுதிரண்டு, என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார்கள்.+ 14  ஆனால் யெகோவாவே, நான் உங்களை நம்பியிருக்கிறேன்.+ “நீங்கள்தான் என் கடவுள்” என்று சொல்கிறேன்.+ 15  என் வாழ்நாள் உங்கள் கையில் இருக்கிறது. என்னை எதிர்க்கிற ஆட்களிடமிருந்தும் துன்புறுத்துகிற ஆட்களிடமிருந்தும் காப்பாற்றுங்கள்.+ 16  உங்களுடைய ஊழியன்மேல் உங்கள் முகத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள்.+ உங்களுடைய மாறாத அன்பினால் என்னைக் காப்பாற்றுங்கள். 17  யெகோவாவே, உங்களைக் கூப்பிடுகிறேன்; நான் வெட்கப்பட்டுப்போவதற்கு விடாதீர்கள்.+ ஆனால், பொல்லாதவர்கள் வெட்கப்பட்டுப்போகட்டும்.+கல்லறையில் அவர்கள் அமைதியாகக் கிடக்கட்டும்.+ 18  பொய் பேசுகிற வாய் ஊமையாகட்டும்.+நீதிமானுக்கு எதிராக ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும்அவமரியாதையோடும் பேசுகிற உதடுகள் திறக்காமல் போகட்டும். 19  நீங்கள் தரும் நன்மைகள் எவ்வளவு ஏராளம்!+ உங்களுக்குப் பயந்து நடப்பவர்களுக்காக அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள்.+உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்காக எல்லார் முன்னாலும் அவற்றைப் பொழிந்திருக்கிறீர்கள்.+ 20  மனிதர்களுடைய சதித்திட்டங்களில் சிக்காதபடி,அவர்களை உங்களுடைய சன்னிதியின் மறைவில் நீங்கள் ஒளித்து வைப்பீர்கள்.+அபாண்டமாகத் தாக்கிப் பேசுகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக,அவர்களை உங்களுடைய கூடாரத்தில் மறைத்து வைப்பீர்கள்.+ 21  சுற்றிவளைக்கப்பட்ட நகரத்திலே,+யெகோவா மாறாத அன்பை எனக்கு அற்புதமான விதத்தில் காட்டினார்.+அதனால் அவருக்குப் புகழ் சேரட்டும். 22  பதற்றத்தில் நான், “உங்கள்முன் இல்லாதபடி ஒழிந்துபோய்விடுவேனே” என்று சொன்னேன்.+ ஆனால், உதவிக்காக நான் கதறியதை நீங்கள் கேட்டீர்கள்.+ 23  யெகோவாவுக்கு உண்மையாக* இருக்கிறவர்களே,+ அவரை நேசியுங்கள்! உண்மையாக இருக்கிறவர்களை யெகோவா பாதுகாக்கிறார்.+ஆனால், ஆணவமாக நடக்கிறவர்களைக் கடுமையாகத் தண்டிக்கிறார்.+ 24  யெகோவாவுக்காகக் காத்திருக்கிறவர்களே,+தைரியமாக இருங்கள், நெஞ்சத்தில் உறுதியோடு இருங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “குனிந்து.”
வே.வா., “உண்மையுள்ள.”
வே.வா., “விசாலமான.”
வே.வா., “பற்றுமாறாமல்.”