சங்கீதம் 35:1-28

  • எதிரிகளிடமிருந்து விடுவிக்கப்படுவதற்காகச் செய்யப்படும் ஜெபம்

    • எதிரிகள் விரட்டியடிக்கப்படுவார்கள் (5)

    • மக்கள் கூட்டத்தின் நடுவில் கடவுளைப் புகழ்தல் (18)

    • காரணமில்லாமல் வெறுக்கப்படுதல் (19)

தாவீதின் பாடல். 35  யெகோவாவே, எனக்கு எதிராக வழக்காடுகிறவர்களோடு வழக்காடுங்கள்.+எனக்கு எதிராகப் போர் செய்கிறவர்களோடு போர் செய்யுங்கள்.+   உங்களுடைய சிறிய கேடயத்தையும்* பெரிய கேடயத்தையும் எடுத்துக்கொண்டு,+எனக்கு உதவி செய்ய எழுந்து வாருங்கள்.+   என்னைத் துரத்துகிறவர்களைத்+ தாக்குவதற்காக உங்களுடைய ஈட்டியையும் கோடாலியையும் ஓங்குங்கள். “நான் உன்னை மீட்பேன்” என்று என்னிடம் சொல்லுங்கள்.+   என்னுடைய உயிரை வேட்டையாடுகிறவர்கள் அவமானப்பட்டுத் தலைகுனியட்டும்.+ என்னைத் தீர்த்துக்கட்ட சூழ்ச்சி செய்கிறவர்கள் வெட்கத்தில் பின்வாங்கட்டும்.   அவர்கள் காற்றில் பறந்துபோகிற பதரைப் போல ஆகட்டும்.யெகோவாவின் தூதர் அவர்களை விரட்டியடிக்கட்டும்.+   யெகோவாவின் தூதர் அவர்களைத் துரத்தும்போது,அவர்களுடைய பாதை இருண்டுபோகட்டும், சறுக்கலாகட்டும்.   ஏனென்றால், காரணமே இல்லாமல் என்னைப் பிடிக்க வலை விரித்திருக்கிறார்கள்.காரணமே இல்லாமல் எனக்குக் குழி தோண்டியிருக்கிறார்கள்.   அவர்களுக்குத் திடீரென்று அழிவு வரட்டும்.அவர்கள் விரித்த வலையிலேயே அவர்கள் சிக்கிக்கொள்ளட்டும்.அதில் விழுந்து அழிந்துபோகட்டும்.+   ஆனால், நான் யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவேன்.அவர் தரும் மீட்பினால் பூரிப்படைவேன். 10  என் எலும்புகளெல்லாம் அவரிடம், “யெகோவாவே, உங்களைப் போல யார் இருக்கிறார்கள்? பலசாலிகளிடமிருந்து ஆதரவற்றவர்களைக் காப்பாற்றுகிறவர் நீங்கள்தான்.+மோசடிக்காரர்களிடமிருந்து ஏழை எளியவர்களை விடுவிக்கிறவர் நீங்கள்தான்”+ என்று சொல்லும். 11  கெட்ட எண்ணம்பிடித்த சாட்சிகள் எனக்கு எதிராக எழும்புகிறார்கள்.+எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். 12  நான் நல்லது செய்திருந்தாலும் எனக்குக் கெட்டதுதான் செய்கிறார்கள்.+என்னைத் துக்கத்தில் தவிக்க வைக்கிறார்கள். 13  அவர்கள் வியாதியாகக் கிடந்தபோது, நான் துக்கத் துணி போட்டுக்கொண்டேன்.விரதமிருந்து என்னை வருத்திக்கொண்டேன்.அவர்களுக்காக நான் செய்த ஜெபத்துக்குப் பதில் கிடைக்காமல் போனபோது, 14  நண்பனை இழந்தவன்போல் துக்கப்பட்டேன்.கூடப்பிறந்தவனைப் பறிகொடுத்தவன்போல் நடமாடினேன். தாயை இழந்தவன்போல் துக்கத்தில் தலைகுனிந்தபடி இருந்தேன். 15  ஆனால் எனக்கு அடிசறுக்கியபோது, அவர்கள் ஒன்றுசேர்ந்து சிரித்தார்கள்.பதுங்கியிருந்து என்னைத் தாக்குவதற்காக ஒன்றுகூடினார்கள்.அமைதியாக இல்லாமல் என்னை நார் நாராகக் கிழித்தார்கள். 16  கடவுளுக்குப் பயப்படாதவர்கள் என்னைப் பார்த்துக் கேவலமாகப் பேசுகிறார்கள்.*கோபத்தில் பற்களை நறநறவென்று கடிக்கிறார்கள்.+ 17  யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்?+ அவர்களுடைய தாக்குதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+அந்த இளம் சிங்கங்களிடமிருந்து என் அருமையான உயிரைக் காப்பாற்றுங்கள்.+ 18  அப்போது, மாபெரும் சபையில் உங்களுக்கு நன்றி சொல்வேன்.+மக்கள் கூட்டத்தின் நடுவில் உங்களைப் புகழ்வேன். 19  காரணமில்லாமல் என்னை எதிர்க்கிறவர்கள் என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும்படி விட்டுவிடாதீர்கள்.காரணமில்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்+ கண் ஜாடை காட்டி என்னை ஏளனம் செய்ய விட்டுவிடாதீர்கள்.+ 20  அவர்கள் சமாதான வார்த்தைகளைப் பேசுவதில்லை.தேசத்தில் சமாதானமாக வாழ்கிறவர்களுக்கு எதிராகச் சதிதான் செய்கிறார்கள்.+ 21  என்மேல் குற்றம் சுமத்துவதற்குத் துடிக்கிறார்கள்.“ஆஹா! ஆஹா! நம் கண்களாலேயே பார்த்துவிட்டோம்!” என்று சொல்கிறார்கள். 22  யெகோவாவே, இதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள்! இனிமேலும் மவுனமாக இருக்காதீர்கள்.+ யெகோவாவே, தூரத்தில் இருக்காதீர்கள்.+ 23  எழுந்து வந்து, எனக்கு ஆதரவு கொடுங்கள்.யெகோவாவே, என் கடவுளே, எனக்காக வாதாடுங்கள். 24  என் கடவுளாகிய யெகோவாவே, உங்களுடைய நீதியின்படி எனக்குத் தீர்ப்பு கொடுங்கள்.+எதிரிகள் என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும்படி விட்டுவிடாதீர்கள். 25  அவர்கள் என்னைப் பார்த்து, “ஆஹா! நாம் ஆசைப்பட்டபடியே நடந்துவிட்டது!” என்றோ, “அவனை ஒழித்துக்கட்டிவிட்டோம்!” என்றோ ஒருபோதும் சொல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+ 26  என்னுடைய கஷ்டத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிற எல்லாரும் அவமானப்பட்டுத் தலைகுனியட்டும். என்னிடம் திமிராக நடந்துகொள்கிற எல்லாருமே வெட்கப்பட்டுக் கேவலப்பட்டுப் போகட்டும். 27  ஆனால், என்னுடைய நீதியை விரும்புகிறவர்கள் சந்தோஷ ஆரவாரம் செய்யட்டும்.“தன்னுடைய ஊழியன் சமாதானமாக வாழ்வதை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை சேரட்டும்!”+ என்று அவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். 28  நானும் உங்களுடைய நீதியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே* இருப்பேன்.+நாள் முழுவதும் உங்களைப் புகழ்ந்துகொண்டே இருப்பேன்.+

அடிக்குறிப்புகள்

பொதுவாக, வில்வீரர்கள் இவற்றை வைத்திருப்பார்கள்.
அல்லது, “கடவுளுக்குப் பயப்படாதவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காகக் கேவலமாய்ப் பேசுகிறார்கள்.”
வே.வா., “தியானித்துக்கொண்டே.”