சங்கீதம் 46:1-11
இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின் மகன்களுடைய+ பாடல். அல்மோத்* பாணி.
46 கடவுள்தான் நம் அடைக்கலம், நம் பலம்.+இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பவர் அவர்தான்.+
2 அதனால், நாம் எதற்கும் பயப்பட மாட்டோம்.பூமி குலுங்கினாலும்,மலைகள் பெயர்ந்து ஆழ்கடலில் விழுந்தாலும்,+
3 அதன் தண்ணீர் சீறிப் பொங்கினாலும்,+அதன் கொந்தளிப்பால் மலைகள் கிடுகிடுவென ஆடினாலும்,
நாம் பயப்பட மாட்டோம். (சேலா)
4 ஓர் ஆறு இருக்கிறது; அதன் கிளைகள் கடவுளுடைய நகரத்துக்குச் சந்தோஷம் தருகின்றன.+உன்னதமான கடவுளுடைய மகத்தான பரிசுத்த கூடாரத்துக்கு மகிழ்ச்சி தருகின்றன.
5 அந்த நகரத்தில் கடவுள் இருக்கிறார்,+ அதனால் அதை வீழ்த்தவே முடியாது.
விடியற்காலையில் கடவுள் அதன் உதவிக்கு வருவார்.+
6 தேசங்கள் கொந்தளித்தன, ராஜ்யங்கள் கவிழ்க்கப்பட்டன.அவர் முழங்கினார், பூமி உருகியது.+
7 பரலோகப் படைகளின் யெகோவா நம்மோடு இருக்கிறார்.+யாக்கோபின் கடவுள் நமக்குப் பாதுகாப்பான* அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)
8 யெகோவாவின் செயல்களை வந்து பாருங்கள்.இந்தப் பூமியில் அவர் செய்திருக்கிற பிரமிப்பான காரியங்களைப் பாருங்கள்.
9 அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.+
வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார்.போர் ரதங்களை* நெருப்பில் சுட்டெரிக்கிறார்.
10 “சரணடைந்துவிடுங்கள்,
நானே கடவுள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.தேசங்களின் மத்தியில் நான் உயர்ந்திருப்பேன்.+
பூமியில் உயர்ந்திருப்பேன்.”+
11 பரலோகப் படைகளின் யெகோவா நம்மோடு இருக்கிறார்.+யாக்கோபின் கடவுள் நமக்குப் பாதுகாப்பான அடைக்கலமாக இருக்கிறார்.+ (சேலா)