சங்கீதம் 69:1-36

  • காப்பாற்றப்படுவதற்காகச் செய்யப்படும் ஜெபம்

    • “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிகிறது” (9)

    • “எனக்குச் சீக்கிரமாகப் பதில் சொல்லுங்கள்” (17)

    • “என் தாகத்துக்குக் காடியைத் தந்தார்கள்” (21)

இசைக் குழுவின் தலைவனுக்கு; “லில்லி மலர்கள்” என்ற இசையில்; தாவீதின் பாடல். 69  கடவுளே, வெள்ளம் என் கழுத்துவரை வந்துவிட்டது.*என்னைக் காப்பாற்றுங்கள்.+   புதைசேற்றுக்குள் நான் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன், நிற்பதற்குத் தரை இல்லை.+ ஆழமான தண்ணீரில் சிக்கித் தவிக்கிறேன்.வெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போகிறது.+   உதவிக்காகக் கத்திக் கத்திக் களைத்துப்போய்விட்டேன்.+என் தொண்டையே வறண்டுவிட்டது. என் கடவுளுக்காகக் காத்திருந்து காத்திருந்து என் கண்கள் பூத்துப்போய்விட்டன.+   காரணமில்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்,+என் தலைமுடியைவிட அதிகமாகிவிட்டார்கள். என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிற நயவஞ்சகமான எதிரிகள்,ஏராளமாகப் பெருகிவிட்டார்கள். திருடாததைக் கொடுக்கச் சொல்லி நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்.   கடவுளே, என்னுடைய முட்டாள்தனம் உங்களுக்கே தெரியும்.என் குற்றங்களும் உங்களுக்குத் தெரியாமல் இல்லை.   உன்னதப் பேரரசரே, பரலோகப் படைகளின் யெகோவாவே,உங்களை நம்பியிருக்கிறவர்களுக்கு என்னால் தலைகுனிவு வந்துவிடக் கூடாது. இஸ்ரவேலின் கடவுளே, உங்களைத் தேடுகிறவர்களுக்கு என்னால் அவமானம் வந்துவிடக் கூடாது.   உங்களுக்காகப் பழிப்பேச்சைச் சகிக்கிறேன்.+அவமானம் தாங்க முடியவில்லை.+   என் சகோதரர்களுக்கு நான் முன்பின் தெரியாதவனைப் போல ஆகிவிட்டேன்.என் தாயின் வயிற்றில் பிறந்தவர்களுக்கு அன்னியனைப் போல ஆகிவிட்டேன்.+   உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிகிறது.+உங்களைப் பழித்துப் பேசியவர்களின் பழிப்பேச்சுகளை நான் தாங்கிக்கொண்டேன்.+ 10  என்னைத் தாழ்த்திக்கொண்டு* விரதம் இருந்தபோது,பழித்துப் பேசப்பட்டேன். 11  நான் துக்கத் துணி போட்டுக்கொண்டபோது,அவர்களுக்குக் கேலிப்பொருளானேன். 12  நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.குடிகாரர்கள் என்னைப் பற்றிப் பாடுகிறார்கள். 13  ஆனால் யெகோவாவே, ஏற்ற நேரத்தில் என் ஜெபம் உங்களிடம் வந்துசேரட்டும்.+கடவுளே, உங்களுடைய அளவுகடந்த அன்பினால்* எனக்குப் பதில் கொடுங்கள். நீங்கள் நம்பகமான மீட்பர் என்பதைக் காட்டுங்கள்.+ 14  புதைசேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடுங்கள்.புதைந்துபோக என்னை விட்டுவிடாதீர்கள். என்னை வெறுக்கிறவர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்.ஆழமான தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிடுங்கள்.+ 15  பாய்ந்து வருகிற வெள்ளம் என்னை அடித்துக்கொண்டுபோக விட்டுவிடாதீர்கள்.+ஆழமான தண்ணீர் என்னை அமிழ்த்திவிட விட்டுவிடாதீர்கள்.சவக்குழி* என்னை மூடிவிட விட்டுவிடாதீர்கள்.+ 16  யெகோவாவே, எனக்குப் பதில் கொடுங்கள்; நீங்கள் காட்டும் மாறாத அன்பு அருமையானது.+ அளவுகடந்த இரக்கத்தோடு என்னை நோக்கிப் பாருங்கள்.+ 17  அடியேனிடமிருந்து உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளாதீர்கள்.+ எனக்குச் சீக்கிரமாகப் பதில் சொல்லுங்கள், நான் இக்கட்டில் தவிக்கிறேன்.+ 18  என் பக்கத்தில் வந்து என்னைக் காப்பாற்றுங்கள்.என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவியுங்கள். 19  எனக்கு ஏற்பட்ட அவமானமும், தலைகுனிவும், வெட்கக்கேடும்+ உங்களுக்கே தெரியும். என்னுடைய எதிரிகள் எல்லாரையும் நீங்கள் பார்க்கிறீர்கள். 20  பழிப்பேச்சைக் கேட்டுக் கேட்டு என் உள்ளம் உடைந்துவிட்டது, ஆறாத ரணமாகிவிட்டது.* யாராவது என்மேல் பரிதாபப்படுவார்களா என்று பார்த்தேன், யாருமே இல்லை.+யாராவது எனக்கு ஆறுதல் சொல்வார்களா என்று தேடினேன், ஒருவருமே இல்லை.+ 21  உணவுக்குப் பதிலாக எனக்கு விஷத்தை* கொடுத்தார்கள்.+என் தாகத்துக்குக் காடியைத் தந்தார்கள்.+ 22  அவர்களுடைய விருந்தே* அவர்களுக்குக் கண்ணியாக ஆகட்டும்.அவர்களுடைய செல்வச் செழிப்பே அவர்களுக்குப் பொறியாக ஆகட்டும்.+ 23  பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருண்டு போகட்டும்.அவர்களுடைய இடுப்புகள் எந்நேரமும் நடுநடுங்கட்டும். 24  உங்களுடைய கடும் கோபத்தை அவர்கள்மேல் கொட்டுங்கள்.உங்களுடைய கோபத் தீ அவர்களை விரட்டிப் பிடிக்கட்டும்.+ 25  அவர்களுடைய முகாம்கள் வெறிச்சோடிப் போகட்டும்.அவர்களுடைய கூடாரங்கள் ஆளில்லாமல் கிடக்கட்டும்.+ 26  ஏனென்றால், நீங்கள் தாக்கிய ஆளை அவர்கள் துரத்துகிறார்கள்.நீங்கள் காயப்படுத்திய ஆட்களின் வேதனைகளைப் பற்றி எப்போதும் பேசுகிறார்கள். 27  குற்றத்துக்குமேல் குற்றத்தை அவர்கள்மீது சுமத்துங்கள்.உங்களுடைய நீதியில் அவர்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்காமல் போகட்டும். 28  வாழ்வின்* புத்தகத்திலிருந்து அவர்களுடைய பெயர் துடைத்தழிக்கப்படட்டும்.+நீதிமான்களின் பட்டியலில் அவர்களுடைய பெயர் சேர்க்கப்படாமல் போகட்டும்.+ 29  நான் கஷ்டத்திலும் வேதனையிலும் தவிக்கிறேன்.+ கடவுளே, உங்களுடைய காப்பாற்றும் வல்லமை என்னைப் பாதுகாக்கட்டும். 30  கடவுளின் பெயரை நான் புகழ்ந்து பாடுவேன்.நன்றி சொல்லி அவரை மகிமைப்படுத்துவேன். 31  காளையைவிட இதைத்தான் யெகோவா அதிகமாக விரும்புவார்.கொம்புகளும் குளம்புகளும் உள்ள இளம் காளையைவிட இதைத்தான் விரும்புவார்.+ 32  தாழ்மையானவர்கள்* அதைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள். கடவுளைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இதயம் புத்துயிர் பெறட்டும். 33  ஏனென்றால், ஏழைகளுடைய ஜெபத்தை யெகோவா கேட்கிறார்.+சிறைபிடிக்கப்பட்ட தன்னுடைய மக்களை அலட்சியம் செய்ய மாட்டார்.+ 34  வானமும் பூமியும் அவரைப் புகழட்டும்.+கடல்களும் அவற்றில் நீந்துகிற எல்லா உயிர்களும் அவரைப் புகழட்டும். 35  ஏனென்றால், சீயோனைக் கடவுள் காப்பாற்றுவார்.+யூதாவின் நகரங்களைத் திரும்பக் கட்டுவார்.அவர்கள் அங்கே குடியிருந்து, அதை* சொந்தமாக்கிக்கொள்வார்கள். 36  அவருடைய ஊழியர்களின் வாரிசுகள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள்+ அதில் குடியிருப்பார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “வெள்ளத்தில் மூழ்கிவிடும் நிலையில் இருக்கிறேன்.”
அல்லது, “நான் அழுதுகொண்டு.”
வே.வா., “மாறாத அன்பினால்.”
வே.வா., “ஆழ்கிணறு.”
வே.வா., “நம்பிக்கையிழந்த நிலைக்குப் போய்விட்டேன்.”
வே.வா., “விஷச்செடியை.”
நே.மொ., “மேஜையே.”
வே.வா., “வாழ்கிறவர்களுக்கான.”
வே.வா., “சாந்தமானவர்கள்.”
அதாவது, “அந்தத் தேசத்தை.”