சங்கீதம் 94:1-23

  • பழிவாங்கும்படி கடவுளிடம் செய்யப்படும் ஜெபம்

    • ‘இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொல்லாதவர்கள் இருப்பார்கள்?’ (3)

    • கடவுள் திருத்தும்போது சந்தோஷம் கிடைக்கிறது (12)

    • கடவுள் தன்னுடைய மக்களைக் கைவிட மாட்டார் (14)

    • “சட்டத்தின் பெயரில் பிரச்சினை உண்டாக்குகிறார்கள்” (20)

94  பழிவாங்குகிற கடவுளாகிய யெகோவாவே,+பழிவாங்குகிற கடவுளே, உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்!   பூமியின் நீதிபதியே, எழுந்து வாருங்கள்.+ ஆணவம்பிடித்த ஆட்களுக்குச் சரியான பதிலடி கொடுங்கள்.+   இன்னும் எவ்வளவு காலத்துக்கு, யெகோவாவே,இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொல்லாதவர்கள் ஆட்டம் போடுவார்கள்?+   அவர்கள் ஏதேதோ பிதற்றுகிறார்கள், ஆணவமாகப் பேசுகிறார்கள்.தவறு செய்கிற எல்லாரும் தங்களைப் பற்றிப் பெருமையடிக்கிறார்கள்.   யெகோவாவே, அவர்கள் உங்களுடைய மக்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.+உங்களுடைய சொத்தாகிய ஜனங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள்.   விதவைகளையும் வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களையும் கொலை செய்கிறார்கள்.அப்பா இல்லாத பிள்ளைகளைச் சாகடிக்கிறார்கள்.   “இதையெல்லாம் ‘யா’* பார்க்க மாட்டார்.+இதையெல்லாம் யாக்கோபின் கடவுள் கண்டுகொள்ள மாட்டார்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+   புத்தியில்லாதவர்களே, இதைப் புரிந்துகொள்ளுங்கள்.அறிவில்லாதவர்களே, எப்போதுதான் விவேகமாக* நடந்துகொள்வீர்கள்?+   காதை உண்டாக்கியவரால் கேட்க முடியாதா? கண்ணை உண்டாக்கியவரால் பார்க்க முடியாதா?+ 10  தேசங்களையே கண்டித்துத் திருத்துகிறவரால் உங்களைக் கண்டிக்க முடியாதா?+ மக்களுக்கு அறிவைப் புகட்டுபவர் அவர்தானே!+ 11  மனிதர்களுடைய யோசனைகளெல்லாம் யெகோவாவுக்குத் தெரியும்.அவை வெறும் மூச்சுக்காற்றுதான் என்பது அவருக்குத் தெரியும்.+ 12  “யா”வே,* நீங்கள் யாரைத் திருத்துகிறீர்களோ அவர் சந்தோஷமானவர்.+யாருக்கு உங்களுடைய சட்டத்தைக் கற்றுக்கொடுக்கிறீர்களோ அவர் சந்தோஷமானவர்.+ 13  கஷ்ட காலத்திலும் நீங்கள் அவருக்கு நிம்மதி கொடுப்பீர்கள்.பொல்லாதவர்களுக்குக் குழி தோண்டப்படும்வரை அவருக்கு நிம்மதி கொடுப்பீர்கள்.+ 14  யெகோவா தன்னுடைய மக்களைக் கைவிட மாட்டார்.+தன்னுடைய சொத்தை ஒதுக்கித்தள்ள மாட்டார்.+ 15  மறுபடியும் நீதியான தீர்ப்பு கொடுக்கப்படும்.நேர்மை நெஞ்சமுள்ள எல்லாரும் அதன்படி நடப்பார்கள். 16  யார் எனக்காகப் பொல்லாதவர்களை எதிர்த்து நடவடிக்கை எடுப்பார்கள்? யார் எனக்காக அக்கிரமக்காரர்களை எதிர்த்து நிற்பார்கள்? 17  யெகோவா மட்டும் எனக்குத் துணையாக இருந்திருக்காவிட்டால்,நான் சீக்கிரத்திலேயே செத்துப்போயிருப்பேன்.+ 18  “என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பு என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டது.+ 19  கவலைகள் என்னைத் திணறடித்தபோது,*நீங்கள் எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்.+ 20  ஊழல் செய்கிற அதிகாரிகள்* உங்களோடு சேர முடியுமா?அவர்கள் சட்டத்தின் பெயரில் பிரச்சினை உண்டாக்குகிறார்கள்.+ 21  நீதிமானைப் பயங்கரமாகத் தாக்குகிறார்கள்.+நிரபராதிக்கு மரணத் தீர்ப்பு கொடுக்கிறார்கள்.+ 22  ஆனால், யெகோவா எனக்குப் பாதுகாப்பான* அடைக்கலமாக இருப்பார்.என் கடவுள் எனக்குத் தஞ்சம் தருகிற கற்பாறையாக இருப்பார்.+ 23  அவர்களுடைய அக்கிரமத்தையெல்லாம் அவர்கள் தலையிலேயே விழ வைப்பார்.+ அவர்களுடைய கெட்ட எண்ணத்தை வைத்தே அவர்களை ஒழித்துக்கட்டுவார். நம் கடவுளான யெகோவா அவர்களை ஒழித்துக்கட்டுவார்.+

அடிக்குறிப்புகள்

“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “எனக்குள் பெருகியபோது.”
வே.வா., “ஆட்சியாளர்கள்; நீதிபதிகள்.”
வே.வா., “உயர்ந்த.”