செப்பனியா 3:1-20
3 கலகக்கார நகரமே, தீட்டுப்பட்ட நகரமே, அடக்கி ஒடுக்குகிற நகரமே, உனக்குக் கேடுதான் வரும்!+
2 நீ எதையும் காதில் வாங்கவில்லை,+ கண்டிக்கப்பட்டும் திருந்தவில்லை.+
யெகோவாமேல் நம்பிக்கை வைக்கவில்லை;+ உன் கடவுளிடம் நெருங்கி வரவில்லை.+
3 உன்னுடைய அதிபதிகள் கர்ஜிக்கிற சிங்கங்கள்.+
உன்னுடைய நீதிபதிகள் ராத்திரியில் நடமாடும் ஓநாய்கள்.ஒரு எலும்பைக்கூட மிச்சம் வைக்காமல் விடியும்வரை சாப்பிடுகிற ஓநாய்கள்.
4 உன் தீர்க்கதரிசிகள் திமிர் பிடித்தவர்கள், துரோகிகள்.+
உன் குருமார்கள் பரிசுத்தமானதைக் கெடுப்பவர்கள்;+சட்டத்தை மீறுகிறவர்கள்.+
5 ஆனால், உன் நடுவே இருக்கிற யெகோவா நீதியுள்ளவர்,+ எந்தத் தவறும் செய்யாதவர்.
அவர் ஒவ்வொரு நாள் காலையிலும் தன்னுடைய நீதித்தீர்ப்புகளைச் சொல்கிறார்.+பொழுது எப்படித் தவறாமல் விடிகிறதோ அப்படியே அவரும் தவறாமல் தீர்ப்புகளைச் சொல்கிறார்.
ஆனால், அநீதிமானுக்குச் சூடுசுரணையே இல்லை.+
6 “நான் தேசங்களை அழித்தேன்; அவற்றின் மூலைக்கோபுரங்கள் வெறுமையாகிவிட்டன.
வீதிகளைப் பாழாக்கினேன்; அவை வெறிச்சோடிப் போய்விட்டன.
நகரங்களை நாசமாக்கினேன்; அவை ஆளே இல்லாத இடங்களாகிவிட்டன.+
7 நீ குடியிருக்கும் இடம் அழியக் கூடாதென்று நினைத்தேன்.
அதனால், ‘நீ எனக்குப் பயப்பட வேண்டும், என் புத்திமதியைக் கேட்டுத் திருந்த வேண்டும்’+ என்று சொன்னேன்.ஆனால், நீ அக்கிரமத்துக்குமேல் அக்கிரமம் செய்வதிலேயே குறியாக இருந்தாய்.+
நீ செய்த எல்லாவற்றுக்கும் தண்டனை கொடுக்காமல் விட மாட்டேன்.
8 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் எல்லாவற்றையும் சூறையாடுவதற்காக* வரப்போகும் நாள்வரைஎனக்காகப் பொறுமையோடு காத்திரு.+தேசங்களையும் ராஜ்யங்களையும் ஒன்றுகூட்டி,என் ஆக்ரோஷத்தையும் கடும் கோபத்தையும் அவர்கள்மேல் கொட்டுவதற்கு நான் முடிவு செய்திருக்கிறேன்.*+என் வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும்.+
9 நான் ஜனங்களின் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாற்றுவேன்.அப்போது, எல்லாரும் யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வார்கள்.தோளோடு தோள் சேர்ந்து அவருக்குச் சேவை செய்வார்கள்.’*+
10 என் ஜனங்கள் எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பாலிருந்து என்னிடம் வேண்டுவார்கள்.துரத்தியடிக்கப்பட்ட என் ஜனங்கள் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவருவார்கள்.+
11 எனக்கு எதிராகக் குற்றங்கள் செய்த நகரமே!அந்தக் குற்றங்களுக்காக அந்த நாளில் நீ அவமானம் அடைய மாட்டாய்.+ஏனென்றால், பெருமை பேசித் திரிந்தவர்களை உன் நடுவிலிருந்து நீக்கிவிடுவேன்.என் பரிசுத்த மலையில் இனி ஒருபோதும் நீ அகம்பாவமாக நடக்க மாட்டாய்.+
12 தாழ்மையான, பணிவான ஜனங்களை மட்டும் உன் நடுவே வாழ வைப்பேன்.+அவர்கள் யெகோவாவின் பெயரில் தஞ்சம் அடைவார்கள்.
13 இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்கள்+ எந்த அநியாயமும் செய்ய மாட்டார்கள்.+அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்; அவர்களுடைய பேச்சில் சூதுவாது இருக்காது.அவர்கள் நன்றாகச் சாப்பிட்டு, நிம்மதியாகத் தூங்குவார்கள்; யாரும் அவர்களைப் பயமுறுத்த மாட்டார்கள்.”+
14 சீயோன் மகளே, சந்தோஷமாகப் பாடு!
இஸ்ரவேலே, வெற்றி முழக்கம் செய்!+
எருசலேம் மகளே, இதயம் பொங்க சந்தோஷப்படு!+
15 உனக்கு எதிரான தீர்ப்புகளை யெகோவா ரத்து செய்தார்.+
விரோதிகளை உன்னைவிட்டு விலக்கினார்.+
இஸ்ரவேலின் ராஜாவான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+
ஆபத்தை நினைத்து இனி நீ பயப்பட மாட்டாய்.+
16 அந்த நாளில் எருசலேமிடம் இப்படிச் சொல்லப்படும்:
“சீயோனே, பயப்படாதே.+
மனம் தளர்ந்துவிடாதே.*
17 உன் கடவுளான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+
சக்திபடைத்த அவர் உன்னைக் காப்பாற்றுவார்.
உன்னை நினைத்துப் பூரித்துப்போவார்.+
உன்மேல் கொள்ளை அன்பு காட்டுவார்.*
உன்னை நினைத்து சந்தோஷமாக முழங்குவார்.
18 உன் பண்டிகைகளுக்கு வர முடியாததை நினைத்துத் துக்கப்படுகிறவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+அவர்கள் வெட்கக்கேடான நிலையில் இருந்ததால்தான் உன் பண்டிகைகளுக்கு வர முடியாமல்போனது.+
19 உன்னைக் கொடுமைப்படுத்துகிற எல்லாரையும் அந்த நாளில் தண்டிப்பேன்.+நொண்டி நொண்டி நடப்பவர்களைக் காப்பாற்றுவேன்.+சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன்.+
அவர்களுக்குப் பேரும் புகழும் கிடைக்கும்படி செய்வேன்.தலைகுனிந்து நின்ற இடங்களில் அவர்களைத் தலைநிமிர்ந்து நிற்க வைப்பேன்.
20 அப்போது, உன் ஜனங்களை நான் கூட்டிக்கொண்டு வருவேன்.அவர்களை ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பேன்.
சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை உன் கண்ணெதிரே கூட்டிக்கொண்டு வருவேன்.பூமியின் எல்லா தேசங்களிலும் உனக்குப் பேரும் புகழும் கிடைக்கும்படி செய்வேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.+
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “நான் ஒரு சாட்சியாக.”
^ வே.வா., “கொட்டுவதே என் நீதித்தீர்ப்பு.”
^ வே.வா., “ஒற்றுமையாக அவரை வணங்குவார்கள்.”
^ நே.மொ., “கைகளைத் தளரவிடாதே.”
^ வே.வா., “உன்மேல் அன்பு காட்டுவதில் மனநிறைவு அடைவார்.”