தானியேல் 1:1-21

  • பாபிலோனியர்களால் எருசலேம் சுற்றிவளைக்கப்படுகிறது (1, 2)

  • சிறைபிடிக்கப்பட்ட அரச குடும்பத்து இளைஞர்களுக்கு விசேஷப் பயிற்சி (3-5)

  • நான்கு எபிரெயர்களுக்கு விசுவாசப் பரீட்சை (6-21)

1  யூதாவின் ராஜா யோயாக்கீம்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதைச் சுற்றிவளைத்தான்.+  உண்மைக் கடவுளான யெகோவா, யூதாவின் ராஜா யோயாக்கீமை நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுத்துவிட்டார்.+ அதோடு, ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை அவன் எடுத்துக்கொண்டு போவதற்கும் விட்டுவிட்டார். அவன் அந்தப் பாத்திரங்களை சினேயார்*+ தேசத்திலிருந்த தன் தெய்வத்தின் கோயிலுக்கு எடுத்துக்கொண்டு போய், அதன் பொக்கிஷ அறையில் வைத்தான்.+  பின்பு இஸ்ரவேல் ஜனங்களிலும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும், உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும் சிலரைக் கொண்டுவரும்படி+ அரண்மனையின் முக்கிய அதிகாரியான அஸ்பேனாசுக்கு ராஜா உத்தரவு போட்டான்.  அவர்கள் எந்தக் குறையும் இல்லாத இளைஞர்களாக,* பார்ப்பதற்கு அழகானவர்களாக, ஞானமும் அறிவும் பகுத்தறிவும் உள்ளவர்களாக,+ அரண்மனையில் சேவை செய்வதற்கான திறமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னான். கல்தேயர்களின் மொழியில் பேசவும் எழுதவும் அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்றும் சொன்னான்.  அதோடு, தான் சாப்பிடுகிற அதே உணவையும் தான் குடிக்கிற அதே திராட்சமதுவையும் அவர்களுக்குத் தினமும் கொடுக்கும்படி கட்டளை கொடுத்தான். மூன்று வருஷங்கள் பயிற்சி* கொடுத்த பின்பு அரண்மனையில் அவர்களுக்குப் பொறுப்புகளைத் தர வேண்டும் என்றும் சொன்னான்.  அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தானியேல்,*+ அனனியா,* மீஷாவேல்,* அசரியா*+ ஆகிய நான்கு பேரும் இருந்தார்கள்.  அரண்மனையின் தலைமை அதிகாரி அவர்களுக்குப் புதிய பெயர்களை* வைத்தான். தானியேலுக்கு பெல்தெஷாத்சார்+ என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ+ என்றும் பெயர் வைத்தான்.  ராஜாவுடைய உணவினாலும் திராட்சமதுவினாலும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று தானியேல் தன் இதயத்தில் தீர்மானமாக இருந்தார். அதனால், அவற்றைச் சாப்பிட்டுத் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமல் இருக்க தலைமை அதிகாரியிடம் அனுமதி கேட்டார்.  தானியேலுக்குக் கருணையும் இரக்கமும் காட்டும்படி தலைமை அதிகாரியின் மனதை உண்மைக் கடவுள் தூண்டினார்.+ 10  தானியேலிடம் அந்தத் தலைமை அதிகாரி, “என் எஜமானாகிய ராஜாவை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. அவர்தான் உங்களுக்கு இந்த உணவையும் திராட்சமதுவையும் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். உங்கள் வயதிலுள்ள மற்ற இளைஞர்களுக்கு* பக்கத்தில் நீங்கள் நோஞ்சான்போல் தெரிந்தால் அவர் என் தலையை வெட்டிவிடுவாரே” என்றான். 11  அதனால் தானியேல், தன்னையும் அனனியாவையும் மீஷாவேலையும் அசரியாவையும் கவனித்துக்கொள்வதற்கு அந்த அதிகாரி நியமித்திருந்த பாதுகாவலனிடம் போய், 12  “தயவுசெய்து பத்து நாட்களுக்கு உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு வெறும் காய்கறிகளையும்* தண்ணீரையும் மட்டும் கொடுத்துப் பாருங்கள். 13  பத்து நாட்கள் கழித்து, ராஜாவுடைய உணவைச் சாப்பிடும் இளைஞர்களின்* தோற்றத்தோடு எங்கள் தோற்றத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். பின்பு, உங்கள் ஊழியர்களின் விஷயத்தில் என்ன செய்யலாமென்று முடிவெடுங்கள்” என்றார். 14  அந்தப் பாதுகாவலன் அதற்குச் சம்மதித்து, பத்து நாட்களுக்கு அவர்கள் கேட்ட உணவையே கொடுத்தான். 15  பத்து நாட்கள் கழித்து அவன் பார்த்தபோது, ராஜாவுடைய உணவைச் சாப்பிட்ட எல்லா இளைஞர்களையும்விட* இவர்கள் களையாகவும் ஆரோக்கியமாகவும்* இருந்தார்கள். 16  அதனால், அந்தப் பாதுகாவலன் அவர்களுக்கு ராஜாவுடைய உணவையும் திராட்சமதுவையும் கொடுப்பதற்குப் பதிலாக வெறும் காய்கறிகளை* கொடுத்துவந்தான். 17  எல்லா விதமான எழுத்துக்களிலும் உண்மைக் கடவுள் அந்த நான்கு இளைஞர்களுக்கு* ஞானத்தையும் அறிவையும் ஆழமான புரிந்துகொள்ளுதலையும் தந்தார். விசேஷமாக தானியேலுக்கு, எல்லா விதமான தரிசனங்களையும் கனவுகளையும் புரிந்துகொள்கிற திறனைக் கொடுத்தார்.+ 18  அந்த இளைஞர்கள் நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் போக வேண்டிய நாள் வந்தபோது,+ தலைமை அதிகாரி அவர்களைக் கூட்டிக்கொண்டு போனான். 19  அவர்களிடம் ராஜா பேசிப் பார்த்தபோது, தானியேலும் அனனியாவும் மீஷாவேலும் அசரியாவும்+ மற்ற எல்லா இளைஞர்களையும்விட சிறந்தவர்களாக இருந்ததைக் கண்டான். அதனால், அரண்மனையில் சேவை செய்ய அவர்களை நியமித்தான். 20  ஞானமும் புத்தியும்* தேவைப்படுகிற எந்தவொரு விஷயத்தைப் பற்றி ராஜா கேட்டபோதும் அவர்கள் சிறப்பாகப் பதில் சொன்னார்கள். தன்னுடைய சாம்ராஜ்யத்திலிருந்த மந்திரவாதிகள், மாயவித்தைக்காரர்கள்+ எல்லாரையும்விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாக இருந்ததை ராஜா தெரிந்துகொண்டான். 21  கோரேஸ் ராஜா ஆட்சி செய்த முதலாம் வருஷம்வரை தானியேல் அங்கே இருந்தார்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “பாபிலோனியா.”
நே.மொ., “பிள்ளைகளாக.”
அல்லது, “சத்துள்ள உணவு.”
அர்த்தம், “கடவுளே என் நீதிபதி.”
அர்த்தம், “யெகோவா கருணை காட்டியிருக்கிறார்.”
ஒருவேளை இதன் அர்த்தம், “கடவுளைப் போன்றவர் யார்?”
அர்த்தம், “யெகோவா உதவியிருக்கிறார்.”
அதாவது, “பாபிலோனியப் பெயர்களை.”
நே.மொ., “பிள்ளைகளுக்கு.”
வே.வா., “சைவ உணவையும்.”
நே.மொ., “பிள்ளைகளின்.”
நே.மொ., “பிள்ளைகளையும்விட.”
நே.மொ., “புஷ்டியாகவும்.”
வே.வா., “சைவ உணவை.”
நே.மொ., “பிள்ளைகளுக்கு.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலும்.”