தீத்துவுக்குக் கடிதம் 1:1-16

  • வாழ்த்துக்கள் (1-4)

  • கிரேத்தாவில் மூப்பர்களை தீத்து நியமிக்க வேண்டும் (5-9)

  • கலகக்காரர்களைக் கண்டிக்க வேண்டும் (10-16)

1  கடவுளுடைய அடிமையும் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமாகிய பவுல், உண்மையான மகனாகவும் சக விசுவாசியாகவும் இருக்கிற தீத்துவுக்கு எழுதுவது: பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உனக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.  என்னுடைய விசுவாசம் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விசுவாசத்துக்கும், சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவுக்கும் இசைவாக இருக்கிறது; அந்தச் சத்தியம், கடவுள்பக்திக்கு இசைவாக இருக்கிறது;  பொய் சொல்ல முடியாத கடவுள்+ பல காலத்துக்கு முன்பே வாக்குறுதி தந்த முடிவில்லாத வாழ்வு என்ற நம்பிக்கையின்+ அடிப்படையில் இது இருக்கிறது.  நம் மீட்பரான கடவுளுடைய கட்டளையின்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசங்க வேலையின்+ மூலம் சரியான நேரத்தில் அவருடைய வார்த்தை அவரால் வெளிப்படுத்தப்பட்டது.  தவறுகளை* சரிசெய்வதற்காகவும், என் அறிவுரையின்படி ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிப்பதற்காகவும் நான் உன்னை கிரேத்தா தீவில் விட்டுவந்தேன்.  அப்படி நியமிக்கப்படுகிறவர் குற்றம்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும், ஒரே மனைவியை உடையவராக இருக்க வேண்டும்; அவருடைய பிள்ளைகள் விசுவாசிகளாகவும், மோசமானவர்கள் என்றோ அடங்காதவர்கள் என்றோ பெயர் எடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.+  கண்காணியாக இருப்பவர் கடவுளால் நியமிக்கப்பட்ட நிர்வாகி என்பதால், அவர் குற்றம்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும்; தன்னுடைய இஷ்டப்படி நடக்கிறவராகவோ,+ முன்கோபக்காரராகவோ,+ குடிகாரராகவோ, மூர்க்கமானவராகவோ,* அநியாய லாபம் சம்பாதிக்க அலைகிறவராகவோ இருக்கக் கூடாது.  அதற்குப் பதிலாக, உபசரிக்கும் குணமுள்ளவராக,+ நல்ல காரியங்களை விரும்புகிறவராக, தெளிந்த புத்தியுள்ளவராக,*+ நீதியுள்ளவராக, உண்மையுள்ளவராக,*+ சுயக்கட்டுப்பாடுள்ளவராக+ இருக்க வேண்டும்.  அதோடு, கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தும்போது சத்திய* வார்த்தையை உறுதியோடு பிடித்துக்கொண்டிருக்கிறவராகவும்+ இருக்க வேண்டும். அப்போதுதான், பயனுள்ள* போதனைகளின்+ மூலம் மற்றவர்களை உற்சாகப்படுத்த* முடியும், அந்தப் போதனைகளுக்கு முரணாகப் பேசுகிறவர்களைக் கண்டிக்கவும்+ அவரால் முடியும். 10  நிறைய ஆட்கள், குறிப்பாக விருத்தசேதன வழக்கத்தைக் கடைப்பிடிக்கிற ஆட்கள்,+ கலகக்காரர்களாகவும் வீண்பேச்சுப் பேசுகிறவர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கிறார்கள். 11  இப்படிப்பட்ட ஆட்களுடைய வாயை அடைக்க வேண்டும்; இவர்கள் அநியாய லாபம் சம்பாதிப்பதற்காக, கற்றுக்கொடுக்கக் கூடாத விஷயங்களைக் கற்றுக்கொடுத்து எல்லா குடும்பங்களையும் சீரழித்து வருகிறார்கள். 12  “கிரேத்தர்கள் எப்போதும் பொய் சொல்கிறவர்கள், கொடிய மிருகங்கள், வேலைவெட்டியில்லாத பெருந்தீனிக்காரர்கள்” என்று அவர்களில் ஒருவராகிய அவர்களுடைய தீர்க்கதரிசியே சொல்லியிருக்கிறார். 13  அவர் சொன்னது உண்மைதான். அதனால், அவர்களைக் கடுமையாகக் கண்டித்துக்கொண்டிரு. அப்போது, விசுவாசத்தில் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். 14  அதோடு, யூத கட்டுக்கதைகளுக்கும் சத்தியத்தைவிட்டு விலகுகிற ஆட்களுடைய கட்டளைகளுக்கும் அவர்கள் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள். 15  சுத்தமானவர்களுக்கு எல்லாமே சுத்தமாக இருக்கிறது.+ ஆனால், கறைபட்டவர்களுக்கும் விசுவாசம் இல்லாதவர்களுக்கும் எதுவுமே சுத்தமாக இருக்காது; அவர்களுடைய மனமும் சரி, மனசாட்சியும் சரி, இரண்டுமே கறைபட்டதாக இருக்கின்றன.+ 16  கடவுளைப் பற்றித் தங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் வெளிப்படையாகச் சொன்னாலும், தங்கள் செயல்களால் அவரை ஒதுக்கித்தள்ளிவிடுகிறார்கள்;+ ஏனென்றால், அவர்கள் அருவருப்பானவர்கள், கீழ்ப்படியாதவர்கள், எந்தவொரு நல்ல செயலைச் செய்வதற்கும் தகுதியில்லாதவர்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “குறைகளை.”
வே.வா., “மற்றவர்களை அடிக்கிறவராகவோ.”
வே.வா., “பற்றுமாறாதவராக.”
வே.வா., “சரியாக முடிவெடுக்கிற திறமையுள்ளவராக; விவேகமுள்ளவராக.”
வே.வா., “நம்பகமான.”
வே.வா., “ஆரோக்கியமான.”
வே.வா., “மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல.”