நியாயாதிபதிகள் 20:1-48

  • பென்யமீனியர்களுக்கு எதிரான போர் (1-48)

20  அதனால், தாண்முதல்+ பெயெர்-செபாவரை இருந்த இஸ்ரவேலர்களும் கீலேயாத் பிரதேசத்தில்+ இருந்த இஸ்ரவேலர்களும், மிஸ்பாவில் யெகோவாவுக்கு முன்னால் ஒருமனதாகக் கூடினார்கள்.+  ஜனங்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களும் கடவுளுடைய ஜனங்களின் சபையிலே அவரவர் இடத்தில் நின்றார்கள். அங்கே நான்கு லட்சம் காலாட்படையினர் வாளோடு நின்றார்கள்.+  இஸ்ரவேல் ஆண்கள் மிஸ்பாவரை வந்திருக்கிற செய்தியை பென்யமீனியர்கள் கேள்விப்பட்டார்கள். இஸ்ரவேல் ஆண்கள் அந்த லேவியனிடம், “சொல்லுங்கள், இந்தப் பயங்கரமான சம்பவம் எப்படி நடந்தது?”+ என்று கேட்டார்கள்.  கொல்லப்பட்ட பெண்ணின் கணவனாகிய அந்த லேவியன்+ அவர்களிடம், “ராத்திரி தங்குவதற்காக நான் என்னுடைய மறுமனைவியோடு பென்யமீனியர்களின் ஊரான கிபியாவுக்குப்+ போயிருந்தேன்.  கிபியா ஊர்க்காரர்கள்* ராத்திரியில் வெறியோடு வந்து, நான் தங்கியிருந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் என்னைக் கொல்லப் பார்த்தார்கள். கடைசியில், என் மறுமனைவியைப் பலாத்காரம் செய்தார்கள், அவள் செத்துப்போனாள்.+  நான் அவளுடைய உடலை எடுத்துக் கொண்டுபோய் அதைத் துண்டு துண்டாக வெட்டி இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் அனுப்பி வைத்தேன்.+ ஏனென்றால், அவர்கள் இஸ்ரவேலில் கேவலமான, கீழ்த்தரமான காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.  இப்போது, இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கலந்துபேசி ஒரு முடிவைச் சொல்லுங்கள்”+ என்றான்.  அப்போது ஜனங்கள் எல்லாரும் ஒருமனதாக, “நாம் யாருமே நம்முடைய கூடாரத்துக்கோ வீட்டுக்கோ திரும்பிப் போகக் கூடாது.  குலுக்கல் முறையில் வீரர்களைத் தேர்ந்தெடுத்து,+ பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கிபியா ஜனங்களுக்கு விரோதமாகப் போக வேண்டும். 10  இஸ்ரவேலில் கேவலமான காரியத்தைச் செய்திருக்கிற அந்த ஜனங்களைப் பழிவாங்கப் போகிற வீரர்களுக்காக உணவுப் பொருள்களை எடுத்துவர, இஸ்ரவேலிலுள்ள எல்லா கோத்திரங்களிலிருந்தும் 100 பேரில் 10 பேரையும், 1,000 பேரில் 100 பேரையும், 10,000 பேரில் 1,000 பேரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று சொன்னார்கள். 11  பின்பு, இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் அந்த நகரத்தைத் தாக்குவதற்குத் திரண்டு போனார்கள். 12  அதன்பின், இஸ்ரவேலின் மற்ற கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த எல்லாரிடமும் ஆள் அனுப்பி, “உங்கள் நடுவில் இப்பேர்ப்பட்ட அக்கிரமம் எப்படி நடக்கலாம்? 13  கிபியாவில் இருக்கிற போக்கிரிகளை+ இப்போது எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். நாங்கள் அவர்களைக் கொன்று, இஸ்ரவேலிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்”+ என்று சொன்னார்கள். ஆனால், அந்த பென்யமீனியர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய இஸ்ரவேலர்கள் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. 14  பின்பு அந்த பென்யமீனியர்கள் தங்களுடைய நகரங்களிலிருந்து திரண்டு வந்து, இஸ்ரவேல் வீரர்களோடு போர் செய்ய கிபியாவுக்குப் போனார்கள். 15  அன்றைக்கு பென்யமீனியர்களின் நகரங்களிலிருந்து வாளோடு ஒன்றுதிரண்டு வந்த வீரர்கள் மொத்தம் 26,000 பேர். இவர்களைத் தவிர, கிபியாவிலிருந்து வந்த திறமைசாலிகளான வீரர்கள் 700 பேர். 16  இந்தப் படையில், இடது கை பழக்கமுள்ள திறமைசாலியான வீரர்கள் 700 பேர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், குறி* தப்பாமல் கவண்கல் எறிவதில் கெட்டிக்காரர்கள். 17  பென்யமீன் கோத்திரத்தாரைத் தவிர, வாளோடு போன இஸ்ரவேல் வீரர்கள் மொத்தம் நான்கு லட்சம் பேர்.+ அவர்கள் ஒவ்வொருவரும் போர் செய்வதில் அனுபவசாலிகள். 18  கடவுளிடம் விசாரிப்பதற்காக+ இஸ்ரவேலர்கள் பெத்தேலுக்குப் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் யெகோவாவிடம், “பென்யமீனியர்களோடு போர் செய்ய யார் முதலில் போக வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “யூதா கோத்திரத்தார்தான் முதலில் போக வேண்டும்” என்று சொன்னார். 19  அதன்பின், இஸ்ரவேலர்கள் காலையில் எழுந்து கிபியாவுக்கு எதிராக முகாம்போட்டார்கள். 20  இஸ்ரவேல் வீரர்கள் பென்யமீனியர்களோடு போர் செய்வதற்காகப் புறப்பட்டுப் போய், கிபியாவுக்கு வெளியே அணிவகுத்து நின்றார்கள். 21  அதனால், பென்யமீனியர்கள் கிபியாவிலிருந்து வெளியே வந்து இஸ்ரவேல் வீரர்களில் 22,000 பேரை அன்றைக்கு வெட்டிச் சாய்த்தார்கள். 22  ஆனாலும், இஸ்ரவேல் வீரர்கள் முதல் நாளில் நின்ற இடத்திலேயே மறுபடியும் தைரியமாகப் போய் அணிவகுத்து நின்றார்கள். 23  இஸ்ரவேல் ஆண்கள் போய், சாயங்காலம்வரை யெகோவாவுக்கு முன்னால் அழுதுகொண்டே, “எங்களுடைய சகோதரர்களாகிய பென்யமீனியர்களுக்கு எதிராக நாங்கள் மறுபடியும் போருக்குப் போகலாமா?” என்று யெகோவாவிடம் கேட்டார்கள்.+ அதற்கு யெகோவா, “போங்கள்” என்று சொன்னார். 24  அதனால், இஸ்ரவேல் வீரர்கள் இரண்டாம் நாள் பென்யமீனியர்களைத் தாக்குவதற்கு நெருங்கிப்போனார்கள். 25  அன்றைக்கு பென்யமீனியர்கள் கிபியாவிலிருந்து வெளியே வந்து இஸ்ரவேல் வீரர்களில் இன்னும் 18,000 பேரை வெட்டிச் சாய்த்தார்கள்.+ கொல்லப்பட்ட எல்லாரும் வாளேந்திய வீரர்கள். 26  அப்போது, இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும் பெத்தேலுக்குப் போய் யெகோவாவின் முன்னால் உட்கார்ந்து அழுதார்கள்.+ அன்றைக்குச் சாயங்காலம்வரை விரதமிருந்து,+ யெகோவாவுக்குத் தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ செலுத்தினார்கள். 27  அதன்பின், இஸ்ரவேல் ஆண்கள் யெகோவாவிடம் விசாரித்தார்கள்.+ ஏனென்றால், அந்தக் காலத்தில் உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டி அங்கே இருந்தது. 28  ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ அதன் முன்னால் சேவை செய்துவந்தார். அப்போது இஸ்ரவேல் ஆண்கள் அவரிடம், “எங்களுடைய சகோதரர்களாகிய பென்யமீனியர்களோடு மறுபடியும் போருக்குப் போகலாமா அல்லது போரை விட்டுவிடலாமா?”+ என்று கேட்டார்கள். அதற்கு யெகோவா, “போங்கள், நாளைக்கு அவர்களை உங்கள் கையில் கொடுப்பேன்” என்று சொன்னார். 29  பின்பு, பதுங்கியிருந்து தாக்குவதற்காக+ இஸ்ரவேலர்கள் கிபியாவைச் சுற்றிலும் வீரர்களை நிறுத்தினார்கள். 30  இஸ்ரவேலர்கள் மூன்றாம் நாளும் பென்யமீனியர்களோடு போர் செய்யப் போனார்கள். மற்ற சமயங்களில் செய்தது போலவே இந்தத் தடவையும் கிபியாவுக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்.+ 31  எதிர்த்துப் போர் செய்வதற்காக பென்யமீனியர்கள் தங்களுடைய நகரத்தைவிட்டுத் தூரமாக வர வேண்டியதாகிவிட்டது.+ பென்யமீனியர்கள் மற்ற சமயங்களில் செய்தது போலவே, பெத்தேலுக்குப் போகிற நெடுஞ்சாலையிலும் கிபியாவிலிருந்து வருகிற நெடுஞ்சாலையிலும் இஸ்ரவேல் வீரர்களில் கிட்டத்தட்ட 30 பேரை வெட்டவெளியில் வெட்டிச் சாய்த்தார்கள்.+ 32  அதனால் அந்த பென்யமீனியர்கள், “முன்பு போலவே இப்போதும் இஸ்ரவேலர்கள் நம்மிடம் தோற்றுப்போகிறார்கள்”+ என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் இஸ்ரவேலர்கள், “நாம் பின்வாங்குவதுபோல் நடித்து அவர்களை நகரத்திலிருந்து நெடுஞ்சாலைகளுக்கு வர வைக்கலாம்” என்று பேசி வைத்திருந்தார்கள். 33  பின்பு, இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் தங்களுடைய இடங்களிலிருந்து எழுந்து பாகால்-தாமாரில் அணிவகுத்து நின்றார்கள். இதற்கிடையில், கிபியாவுக்கு வெளியே பதுங்கியிருந்த மற்ற இஸ்ரவேல் வீரர்கள் பாய்ந்து வந்தார்கள். 34  இஸ்ரவேலிலிருந்து திறமைசாலியான வீரர்கள் 10,000 பேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள். போர் தீவிரமடைந்தது. ஆனால், தங்களுக்கு அழிவு நெருங்கிவிட்ட விஷயம் பென்யமீனியர்களுக்குத் தெரியவில்லை. 35  இஸ்ரவேலர்களிடம் பென்யமீனியர்கள் தோற்றுப்போகும்படி யெகோவா செய்தார்.+ பென்யமீனியர்களில் 25,100 வீரர்களை இஸ்ரவேலர்கள் அன்றைக்கு வெட்டிப்போட்டார்கள். கொல்லப்பட்ட எல்லாரும் வாளேந்திய வீரர்கள்.+ 36  பதுங்கியிருந்த வீரர்கள் கிபியாவைக் கண்டிப்பாகத் தாக்குவார்கள்+ என்று தெரிந்துதான் இஸ்ரவேலர்கள் பின்வாங்குவதுபோல் நடித்தார்கள்.+ ஆனால் பென்யமீனியர்கள் அதைப் பார்த்தபோது, இஸ்ரவேலர்கள் தோற்றுவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டார்கள். 37  அப்போது, பதுங்கியிருந்த வீரர்கள் உடனடியாக கிபியாவை நோக்கிப் பாய்ந்தார்கள். அவர்கள் நகரமெங்கும் போய் எல்லாரையும் வாளால் வெட்டிக் கொன்றார்கள். 38  பதுங்கியிருக்கிற வீரர்கள் அடையாளத்துக்காக நகரத்திலிருந்து புகை எழும்பும்படி செய்ய வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் முன்னதாகவே பேசிவைத்திருந்தார்கள். 39  இஸ்ரவேலர்கள் பின்வாங்கி ஓடியபோது பென்யமீன் வீரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “முன்பு அவர்கள் நம்மிடம் தோற்றுப்போனது போலவே+ இப்போதும் நம்மிடம் கண்டிப்பாகப் தோற்றுப்போவார்கள்” என்று சொல்லி, அவர்களில் கிட்டத்தட்ட 30 பேரை வெட்டிச் சாய்க்க ஆரம்பித்தார்கள்.+ 40  ஆனால் இஸ்ரவேலர்கள் பேசி வைத்தபடியே, நகரத்திலிருந்து புகைமண்டலத்தை மேலே எழும்ப வைத்தார்கள். பென்யமீன் வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, வானத்தையே எட்டும் அளவுக்கு நகரத்திலிருந்து புகைமண்டலம் எழும்பிக்கொண்டிருந்தது. 41  அப்போது, ஓடிக்கொண்டிருந்த இஸ்ரவேல் வீரர்கள் அப்படியே திரும்பி, பென்யமீனியர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். பென்யமீன் வீரர்கள், தாங்கள் வசமாக மாட்டிக்கொண்டதைப் பார்த்துக் கதிகலங்கிப்போய், 42  இஸ்ரவேல் வீரர்களைவிட்டு வனாந்தரத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். ஆனால், இஸ்ரவேல் வீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள். நகரங்களிலிருந்து வந்த வீரர்களும் இவர்களோடு சேர்ந்துகொண்டு அவர்களை வெட்டிக் கொன்றார்கள். 43  இவர்கள் பென்யமீனியர்களை எல்லா பக்கத்திலும் சுற்றிவளைத்தார்கள். விடாமல் துரத்திக்கொண்டு போய், கிபியாவுக்கு எதிரில் கிழக்குப் பக்கத்திலே அவர்களை மிதித்துப்போட்டார்கள். 44  பென்யமீனைச் சேர்ந்த 18,000 மாவீரர்கள் கொல்லப்பட்டார்கள்.+ 45  மீதமுள்ள பென்யமீன் வீரர்கள் திரும்பி, வனாந்தரத்திலுள்ள ரிம்மோன் மலைப்பாறைக்கு+ ஓடினார்கள். அவர்களில் 5,000 பேரை இஸ்ரவேலர்கள் நெடுஞ்சாலைகளில் கொன்றுபோட்டார்கள். அதோடு, கீதோம்வரை துரத்திக்கொண்டே போய் இன்னும் 2,000 பேரை வெட்டி வீழ்த்தினார்கள். 46  அன்றைக்குக் கொல்லப்பட்ட பென்யமீனியர்கள் மொத்தம் 25,000 பேர். இவர்கள் எல்லாரும் வாளேந்திய மாவீரர்கள்.+ 47  ஆனால், 600 பேர் வனாந்தரத்திலுள்ள ரிம்மோன் மலைப்பாறைக்குத் தப்பியோடினார்கள். அங்கே நான்கு மாதங்கள் தங்கினார்கள். 48  இஸ்ரவேல் வீரர்கள் திரும்பி வந்து, பென்யமீனியர்களின் நகரங்களில் இருந்த எல்லா மனிதர்களையும் மிருகங்களையும் வெட்டிப்போட்டார்கள். வழியிலிருந்த நகரங்களையெல்லாம் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “கிபியாவின் நிலச் சொந்தக்காரர்கள்.”
நே.மொ., “ஒரு மயிரிழைகூட.”