நீதிமொழிகள் 29:1-27

  • பிள்ளையை இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அவமானம்தான் வரும் (15)

  • வழிநடத்துதல் இல்லாவிட்டால் மக்கள் மனம்போன போக்கில் போவார்கள் (18)

  • கோபக்காரன் சண்டையைக் கிளப்புகிறான் (22)

  • மனத்தாழ்மையால் மகிமை (23)

  • மனித பயம் ஒரு கண்ணி (25)

29  பல தடவை கண்டித்த பிறகும் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவன்,+திடீரென்று நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+   நீதிமான்கள் பெருகும்போது ஜனங்கள் சந்தோஷப்படுவார்கள்.ஆனால், அக்கிரமக்காரன் ஆட்சி செய்யும்போது மக்கள் வேதனையில் குமுறுவார்கள்.+   ஞானத்தை விரும்புகிறவன் தன்னுடைய அப்பாவின் மனதைச் சந்தோஷப்படுத்துகிறான்.+ஆனால், விபச்சாரிகளிடம் போகிறவன் தன் சொத்தை வீணடிக்கிறான்.+   அரசன் நியாயமாக நடந்தால் தேசம் நிலைநிற்கும்.+ஆனால், லஞ்சம் வாங்க விரும்புகிறவனால் அது சீரழியும்.   அடுத்தவனைப் போலியாகப் புகழ்கிறவன்அவனுடைய கால்களுக்கு வலை விரிக்கிறான்.+   கெட்டவன் செய்கிற குற்றமே அவனுக்குக் கண்ணியாகிவிடுகிறது.+ஆனால், நீதிமான் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கிறான்.+   ஏழைகளின் சட்டப்பூர்வ உரிமைகள்மேல் நீதிமான் அக்கறை காட்டுகிறான்.+ஆனால், பொல்லாதவன் அப்படிப்பட்ட அக்கறையைக் காட்டுவதே இல்லை.+   பெருமையடிக்கிறவர்கள் கோபத் தீயை ஊருக்குள் கிளறிவிடுகிறார்கள்.+ஆனால், ஞானமாக நடக்கிறவர்கள் அதைத் தணிக்கிறார்கள்.+   ஞானமுள்ளவன் முட்டாளோடு வழக்காடுவது வீண்.முட்டாளின் கூச்சலையும் கிண்டலையும்தான் அவன் கேட்க வேண்டியிருக்கும்.+ 10  இரத்தவெறி பிடித்தவர்கள் அப்பாவிகளை* வெறுக்கிறார்கள்.+நேர்மையானவர்களின் உயிரைப் பறிக்க அவர்கள் வழி தேடுகிறார்கள்.* 11  முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான்.+ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.+ 12  ஆட்சி செய்கிறவன் பொய்யான விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்டால்,அவனுடைய ஊழியர்கள் எல்லாரும் பொல்லாதவர்களாக இருப்பார்கள்.*+ 13  ஏழைக்கும் அடக்கி ஒடுக்குகிறவனுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது. அவர்கள் இரண்டு பேருடைய கண்களுக்கும் யெகோவாதான் வெளிச்சம் கொடுக்கிறார்.* 14  ஒரு ராஜா ஏழைகளுக்கு நீதி வழங்கினால்,+அவருடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ 15  பிரம்பும்* கண்டிப்பும் ஞானத்தைப் புகட்டும்.+ஆனால், பிள்ளையை அவனுடைய இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அம்மாவுக்கு அவமானம்தான் வரும். 16  பொல்லாதவர்கள் பெருகினால் குற்றங்களும் பெருகும்.ஆனால், அவர்களுடைய வீழ்ச்சியை நீதிமான்கள் பார்ப்பார்கள்.+ 17  உன் மகனைக் கண்டித்து வளர்த்தால் உனக்கு நிம்மதி கிடைக்கும்.அவனால் அளவில்லாத சந்தோஷமும் கிடைக்கும்.+ 18  கடவுளுடைய வழிநடத்துதல்* இல்லாவிட்டால் மக்கள் மனம்போன போக்கில் போவார்கள்.+ஆனால், கடவுளுடைய சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+ 19  வெறும் வார்த்தைகளால் வேலைக்காரன் திருந்த மாட்டான்.அவற்றைப் புரிந்துகொண்டாலும் அவன் கீழ்ப்படிய மாட்டான்.+ 20  அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுகிறவனைப் பார்த்திருக்கிறாயா?+ அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.+ 21  வேலைக்காரனுக்குச் சின்ன வயதிலிருந்தே செல்லம் கொடுத்துவந்தால்,பிற்பாடு நன்றிகெட்டவனாக ஆகிவிடுவான். 22  கோபக்காரன்* சண்டையைக் கிளப்புகிறான்.+ஆவேசப்படுகிறவன்* நிறைய குற்றங்களைச் செய்துவிடுகிறான்.+ 23  மனிதனுடைய தலைக்கனம் அவனைத் தாழ்த்தும்.+ஆனால், மனத்தாழ்மை மகிமையைத் தேடித்தரும்.+ 24  திருடனுடைய கூட்டாளி தன்னையே வெறுக்கிறான். குற்றத்தைத் தெரிவிக்க வேண்டுமென்ற அறிவிப்பைக் கேட்டும், அவன் தெரிவிக்காமல் இருந்துவிடுகிறான்.+ 25  மனிதனைப் பார்த்து நடுங்குகிறவன் கண்ணியில் மாட்டிக்கொள்கிறான்.+ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் பாதுகாக்கப்படுவான்.+ 26  அரசனைச் சந்தித்து நீதி கேட்க* நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள்.ஆனால், யெகோவாதான் ஒருவனுக்கு நியாயம் வழங்குகிறார்.+ 27  அநியாயம் செய்கிறவனை நீதிமான் அருவருக்கிறான்.+ஆனால், நேர்மையாக நடக்கிறவனைப் பொல்லாதவன் அருவருக்கிறான்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “குற்றமற்றவர்களை.”
அல்லது, “நேர்மையானவர்களோ தங்களுடைய உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.”
வே.வா., “ஆகிவிடுவார்கள்.”
அதாவது, “யெகோவா அவர்களுக்கு உயிர் கொடுக்கிறார்.”
வே.வா., “புத்திமதியும்; தண்டனையும்.”
வே.வா., “தரிசனம்; வெளிப்படுத்துதல்.”
வே.வா., “ஆவேசப்படும் சுபாவமுள்ளவன்.”
வே.வா., “கோபப்படும் சுபாவமுள்ளவன்.”
அல்லது, “அரசனின் தயவைப் பெற.”