பிரசங்கி 1:1-18

  • எல்லாமே வீண்! (1-11)

    • பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது (4)

    • தொடர்ந்து நடக்கிற இயற்கைச் சுழற்சிகள் (5-7)

    • சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமே இல்லை (9)

  • மனுஷனின் ஞானம் குறைவுபட்டது (12-18)

    • காற்றைப் பிடிக்க ஓடுவது (14)

1  தாவீதின் மகனும் எருசலேமின் ராஜாவுமான+ பிரசங்கியின்*+ வார்த்தைகள்.   “வீணிலும் வீண்! வீணிலும் வீண்!எல்லாமே வீண்!”+ என்று பிரசங்கி சொல்கிறார்.   சூரியனுக்குக் கீழே* மனுஷன் எவ்வளவுதான் பாடுபட்டு வேலை செய்தாலும்,எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் என்ன பிரயோஜனம்?+   ஒரு தலைமுறை போகிறது, இன்னொரு தலைமுறை வருகிறது.ஆனால், பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது.+   சூரியன் உதிக்கிறது, பின்பு மறைகிறது.தான் புறப்பட்ட இடத்துக்கே அது வேகமாகப் போய் மறுபடியும் உதிக்கிறது.+   காற்று தெற்கே வீசுகிறது, மறுபடியும் சுற்றிவந்து வடக்கே வீசுகிறது.சுற்றிச் சுற்றி வீசிக்கொண்டே இருக்கிறது, அது நிற்பதே இல்லை.   எல்லா ஆறுகளும்* கடலில் போய்க் கலந்தாலும், கடல் நிரம்பி வழிவதில்லை.+ உற்பத்தியான இடத்துக்கே ஆறுகள் போகின்றன, அங்கிருந்து மறுபடியும் ஓடிவருகின்றன.+   எல்லாமே சலிப்பைத்தான் தருகின்றன.அவற்றையெல்லாம் யாராலும் விளக்க முடியாது. எவ்வளவுதான் பார்த்தாலும் கண்கள் திருப்தி அடைவதில்லை.எவ்வளவுதான் கேட்டாலும் காதுகள் திருப்தி அடைவதில்லை.   இதுவரை இருந்ததுதான் இனிமேலும் இருக்கும்.இதுவரை செய்யப்பட்டதுதான் இனிமேலும் செய்யப்படும்.சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமே இல்லை.+ 10  “இதோ பாருங்கள், இது புதியது!” என்று சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா? எல்லாமே காலம்காலமாக இருப்பதுதான்.நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே இருப்பதுதான். 11  முற்காலத்தில் வாழ்ந்தவர்களை யாரும் ஞாபகம் வைப்பதில்லை.பிற்காலத்தில் வருகிறவர்களையும் யாரும் ஞாபகம் வைக்கப்போவதில்லை.அவர்களுக்குப் பின்பு வரப்போகிறவர்களும் அவர்களை ஞாபகம் வைக்கப்போவதில்லை.+ 12  பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலர்களின் ராஜாவாக இருந்திருக்கிறேன்.+ 13  வானத்தின் கீழே செய்யப்படுகிற எல்லா காரியங்களையும் ஞானமாக+ ஆராய்ந்து பார்ப்பதற்கு நான் முடிவு செய்தேன்.+ மனுஷர்கள் மும்முரமாய்ச் செய்வதற்காகக் கடவுள் கொடுத்திருக்கிற விரக்தியான வேலைகளை நான் ஆராய்ந்து பார்த்தேன். 14  சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற எல்லாவற்றையும் பார்த்தேன்.எல்லாமே வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.+ 15  கோணலாக இருப்பதை நேராக்க முடியாது.இல்லாத ஒன்றை எண்ணி வைக்க முடியாது. 16  “இதுவரை எருசலேமில் வாழ்ந்த எவரையும்விட நான் அதிகமான ஞானத்தைச் சம்பாதித்துவிட்டேன்.+ என் இதயத்தில் ஞானமும் அறிவும் நிரம்பி வழிகிறது”+ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். 17  எது ஞானம், எது பைத்தியக்காரத்தனம், எது முட்டாள்தனம் என்பதைத் தெரிந்துகொள்ள கவனம் செலுத்தினேன்.+ இதுவும் காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான். 18  ஞானம் அதிகமானால் விரக்தியும் அதிகமாகும்.அறிவு பெருகினால் வேதனையும் பெருகும்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “ஒன்றுகூட்டுகிறவரின்; ஒன்றுதிரட்டுகிறவரின்.”
இந்த வார்த்தைகள் பிரசங்கி புத்தகத்தில் 29 தடவை வருகின்றன.
வே.வா., “குளிர்கால நீரோடைகளும்; பருவகால நீரோடைகளும்.”