பிரசங்கி 5:1-20

  • பயபக்தியோடு கடவுளை வணங்கு (1-7)

  • அதிகாரிகளை உயர் அதிகாரிகள் கவனிக்கிறார்கள் (8, 9)

  • சொத்து வீணானது (10-20)

    • பண ஆசை பிடித்தவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள் (10)

    • வேலை செய்கிறவன் நிம்மதியாகத் தூங்குகிறான் (12)

5  உண்மைக் கடவுளின் ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் கவனமாக நடந்துகொள்.+ முட்டாள்கள் பலி செலுத்துவதுபோல் பலி செலுத்தப் போவதைவிட,+ காதுகொடுத்துக் கேட்பதற்காகப்+ போவது நல்லது. ஏனென்றால், முட்டாள்கள் தாங்கள் செய்வது தவறு என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.  உண்மைக் கடவுளுக்கு முன்னால் அவசரப்பட்டு எதையும் பேசிவிடாதே, உள்ளம் பதறி எதையாவது சொல்லிவிடாதே.+ ஏனென்றால், உண்மைக் கடவுள் பரலோகத்தில் இருக்கிறார். ஆனால், நீ பூமியில் இருக்கிறாய். அதனால், அளவாகப் பேசு.+  ஏகப்பட்ட யோசனைகளால்* கனவு வரும்.+ ஏகப்பட்ட வார்த்தைகளால் முட்டாள்தனமான பேச்சு வரும்.+  நீ கடவுளிடம் எதையாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்றத் தாமதிக்காதே.+ ஏனென்றால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாத முட்டாள்களைக் கடவுளுக்குப் பிடிக்காது.+ நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று.+  நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாமல் இருப்பதைவிட நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே மேல்.+  உன் வாயினால் பாவம் செய்யாதபடி பார்த்துக்கொள்.+ தெரியாமல் சொல்லிவிட்டதாகத்+ தேவதூதர் முன்னால் சொல்லாதே. நீ சொன்னதைக் கேட்டு உண்மைக் கடவுள் ஏன் கோபப்பட்டு, உன் கைகளின் வேலையை அழிக்க வேண்டும்?+  ஏகப்பட்ட விஷயங்களை யோசிப்பதால் கனவுகள் வருவதுபோல்,+ ஏகப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதால் வீணான விளைவுகள்தான் ஏற்படும். அதனால், உண்மைக் கடவுளுக்குப் பயப்படு.+  ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் நீதி நியாயம் புரட்டப்படுவதையும் எங்கேயாவது பார்த்தால் அதிர்ச்சி அடையாதே.+ அப்படிச் செய்கிற அதிகாரியை அவருடைய உயர் அதிகாரி கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர்கள் இரண்டு பேருக்கு மேலேயும் உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள்.  நிலத்தின் விளைச்சலில் கிடைக்கிற லாபத்தை அவர்கள் எல்லாரும் பங்குபோட்டுக்கொள்கிறார்கள். வயலின் விளைச்சலால்தான் ராஜாவும்கூட சாப்பிடுகிறார்.+ 10  வெள்ளியை நேசிக்கிறவன் எவ்வளவு வெள்ளி கிடைத்தாலும் திருப்தியடைய மாட்டான். சொத்துகளை விரும்புகிறவன் எவ்வளவு வருமானம் வந்தாலும் திருப்தியடைய மாட்டான்.+ இதுவும் வீண்தான்.+ 11  சொத்துகள்* சேரச் சேர அதை அனுபவிக்கிற ஆட்களும் அதிகமாகிறார்கள்.+ அந்தச் சொத்துகளைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர அதன் சொந்தக்காரருக்கு வேறென்ன பிரயோஜனம் இருக்கிறது?+ 12  வேலை செய்கிறவன் கொஞ்சம் சாப்பிட்டாலும் சரி, நிறைய சாப்பிட்டாலும் சரி, நிம்மதியாகத் தூங்குவான். ஆனால், ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்திருப்பவன் தூங்க முடியாமல் தவிப்பான். 13  சூரியனுக்குக் கீழே நடக்கிற ஒரு பெரிய கொடுமையைப் பார்த்தேன். சொத்துகளைக் குவித்து வைக்கிறவனுக்கு அந்தச் சொத்துகளாலேயே கேடு உண்டாகிறது. 14  தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அந்தச் சொத்துகளெல்லாம் பறிபோய்விடுகிறது. அவனுக்குப் பிள்ளை பிறக்கும்போது அந்தப் பிள்ளைக்குக் கொடுக்க எந்தச் சொத்தும் இருப்பதில்லை.+ 15  ஒருவன் தாயின் வயிற்றிலிருந்து வரும்போது நிர்வாணமாக வருவது போலவே, போகும்போதும் நிர்வாணமாகத்தான் போகிறான்.+ பாடுபட்டுச் சம்பாதித்த எதையும் அவனால் கொண்டுபோக முடியாது.+ 16  இதுவும் சோகத்திலும் சோகம்தான். அவன் எப்படி வந்தானோ அப்படியே போவான். அதனால், காற்றைப் பிடிக்க ஓடி ஓடி உழைப்பதில் என்ன லாபம்?+ 17  அதோடு, ஒவ்வொரு நாளும் அவன் இருட்டில்தான் சாப்பிடுகிறான்; விரக்தியோடும் வியாதியோடும் எரிச்சலோடும்தான் சாப்பிடுகிறான்.+ 18  மனுஷன் எதைச் செய்வது நல்லது என்றும் தகுந்தது என்றும் நான் புரிந்துகொண்டேன்: சாப்பிட்டு, குடித்து, சூரியனுக்குக் கீழே உண்மைக் கடவுள் கொடுத்திருக்கிற குறுகிய வாழ்நாளில் தன் உழைப்புக்கெல்லாம் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும்.+ இதுதான் அவனுக்குக் கிடைக்கும் பலன்.+ 19  அதுமட்டுமல்ல, உண்மைக் கடவுள் ஒருவனுக்குச் சொத்துப்பத்துகளையும்+ அவற்றை அனுபவிக்கிற திறனையும் கொடுக்கும்போது, அதைத் தனக்குக் கிடைக்கும் பலனாக அவன் நினைக்க வேண்டும்; தன் கடின உழைப்பைக் குறித்து சந்தோஷப்பட வேண்டும். இது கடவுள் தரும் பரிசு.+ 20  அவனுடைய வாழ்நாள் காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதைக்கூட அவன் கவனிப்பதில்லை.* ஏனென்றால், உண்மைக் கடவுள் அவனுடைய உள்ளத்தை அந்தளவு சந்தோஷத்தால் நிரப்புகிறார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கவலைகளால்.”
வே.வா., “நல்ல பொருள்கள்.”
வே.வா., “நினைப்பதில்லை.”