பிரசங்கி 6:1-12

  • சொத்து இருந்தும் அனுபவிக்காமல் இருப்பது (1-6)

  • இப்போது இருப்பதை அனுபவி (7-12)

6  இன்னொரு சோகமான காரியத்தையும் சூரியனுக்குக் கீழே பார்த்தேன். இது மனுஷர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக நடக்கிறது:  உண்மைக் கடவுள் ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துசுகத்தையும் பேர்புகழையும் கொடுக்கிறார். அவன் ஆசைப்பட்டதெல்லாம் அவனுக்குக் கிடைக்கிறது. ஆனால், அதையெல்லாம் அவன் அனுபவிக்க முடியாதபடி உண்மைக் கடவுள் செய்துவிடுகிறார். யாரோ ஒருவன்தான் அதையெல்லாம் அனுபவிக்கிறான். இதுவும் வீண்தான், கொடுமையிலும் கொடுமைதான்!  ஒரு மனுஷன் நூறு பிள்ளைகளைப் பெற்று, நீண்ட காலம் வாழ்ந்து, முதுமை அடைந்தாலும், கல்லறைக்குப் போவதற்கு முன்பு தன் சொத்துகளை அவன் திருப்தியாக அனுபவிப்பதில்லை. செத்துப் பிறக்கும் குழந்தையே அவனைவிட மேல் என்றுதான் சொல்வேன்.+  அந்தக் குழந்தை வீணாகப் பிறக்கிறது, இருட்டோடு இருட்டாக மறைந்துபோகிறது, பெயர் இல்லாமலேயே புதைந்துபோகிறது.  அது சூரியனைப் பார்ப்பதும் இல்லை, எதைப் பற்றியும் தெரிந்துகொள்வதும் இல்லை. ஆனாலும், அந்த மனுஷனைவிட அது எவ்வளவோ மேல்.+  ஒருவன் இரண்டாயிரம் வருஷம் வாழ்ந்தும் எதையுமே அனுபவிக்கவில்லை என்றால் என்ன லாபம்? எல்லாரும் ஒரே இடத்துக்குத்தானே போகிறார்கள்?+  மனுஷன் பாடுபட்டு வேலை செய்வதெல்லாம் வயிற்றை நிரப்புவதற்காகத்தான்.+ ஆனால், அவனுடைய ஆசைகள் நிறைவேறுவதே இல்லை.  முட்டாளாக இருப்பதைவிட ஞானியாக இருப்பதில் என்ன நன்மை?+ வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்று ஏழைக்குத் தெரிந்திருந்தும் என்ன பிரயோஜனம்?  ஆசைப்பட்டதை அடைவதற்காக அலைந்து திரிவதைவிட கண் முன்னால் இருப்பதை அனுபவிப்பது நல்லது. இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான். 10  உலகத்தில் இருக்கிற எல்லாவற்றுக்கும் ஏற்கெனவே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மனுஷன் எப்படிப்பட்டவன் என்பதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னைவிட சக்தியுள்ள ஒருவரிடம் அவனால் வாக்குவாதம் செய்ய* முடியாது. 11  எந்தளவுக்கு வார்த்தைகள்* கூடுகிறதோ அந்தளவுக்கு அவை வீணானவை. அவற்றால் மனுஷனுக்கு என்ன நன்மை? 12  மனுஷனின் வாழ்நாள் வீணானது, நிழல்போல் சீக்கிரம் மறைந்துவிடுகிறது.+ அந்தக் குறுகிய காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தால் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் இறந்த பிறகு சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என்று அவனுக்கு யாரால் சொல்ல முடியும்?

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவனால் தன் தரப்பில் வாதாட.”
அல்லது, “பொருள்கள்.”