பிலிப்பியருக்குக் கடிதம் 4:1-23

  • ஒற்றுமை, சந்தோஷம், சரியான சிந்தனைகள் (1-9)

    • எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் (6, 7)

  • பிலிப்பியர்கள் கொடுத்த பரிசுப்பொருள்களுக்கு நன்றி சொல்கிறார் (10-20)

  • முடிவான வாழ்த்துக்கள் (21-23)

4  அதனால், என் அன்புக் கண்மணிகளே, என் பிரியமான சகோதரர்களே, என் சந்தோஷம் நீங்களே, என் கிரீடமும் நீங்களே.+ நான் சொன்னபடி நம் எஜமானுடைய சீஷர்களாக உறுதியாய் நில்லுங்கள்.+  நம் எஜமானுடைய சேவையில் ஒரே மனதோடு இருக்க வேண்டும்+ என்று எயோதியாளையும் சிந்திகேயாளையும் உற்சாகப்படுத்துகிறேன்.  உண்மையான என் சக ஊழியனே, இந்தப் பெண்களுக்குத் தொடர்ந்து உதவி செய்யும்படி உன்னையும் கேட்டுக்கொள்கிறேன். கிலேமெந்தைப் போலவும் என்னுடைய சக வேலையாட்களாகிய மற்றவர்களைப் போலவும் அவர்கள் என்னுடன் தோளோடு தோள் சேர்ந்து நல்ல செய்தியை அறிவிப்பதில் கடினமாக உழைத்திருக்கிறார்கள்; அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில்+ இருக்கின்றன.  நம் எஜமானுடைய சேவையில் எப்போதும் சந்தோஷமாக இருங்கள். மறுபடியும் சொல்கிறேன், சந்தோஷமாக இருங்கள்!+  நீங்கள் நியாயமானவர்கள்*+ என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும். நம் எஜமான் பக்கத்திலேயே இருக்கிறார்.  நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்;+ உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்.+  அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்+ உங்கள் இதயத்தையும்+ மனதையும்* கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்.  கடைசியாக, சகோதரர்களே, உண்மையானவை எவையோ, அதிமுக்கியமானவை எவையோ, நீதியானவை எவையோ, சுத்தமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, மெச்சத்தக்கவை எவையோ, ஒழுக்கமானவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்.*+  நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவற்றையும் ஏற்றுக்கொண்டவற்றையும் கேட்டவற்றையும் பார்த்தவற்றையும் தொடர்ந்து செய்யுங்கள்;+ அப்போது, சமாதானத்தின் கடவுள் உங்களோடு இருப்பார். 10  இத்தனை நாட்களுக்குப் பின்பு நீங்கள் மறுபடியும் என்னைப் பற்றி நினைத்துப் பார்த்ததை+ அறிந்து நம் எஜமானுடைய ஊழியனாகிய நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். என்மேல் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தாலும் அதைக் காட்டுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை. 11  எனக்கு ஏதோ தேவைப்படுவதால் இப்படிச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால், எந்தச் சூழ்நிலையிலும் நான் மனநிறைவோடு* இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன்.+ 12  குறைவான பொருள்களை வைத்தும் எனக்கு வாழத் தெரியும்,+ ஏராளமான பொருள்களை வைத்தும் எனக்கு வாழத் தெரியும். வயிறார சாப்பிடும்போதும் சரி, பட்டினி கிடக்கும்போதும் சரி, நிறைவாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, எந்தச் சூழ்நிலையிலும் எல்லாவற்றிலும் திருப்தியோடு இருப்பதற்கான ரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன். 13  என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.+ 14  ஆனாலும், நான் உபத்திரவப்பட்டபோது நீங்கள் எனக்கு உதவி செய்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன். 15  சொல்லப்போனால், பிலிப்பியர்களே, நல்ல செய்தியை நீங்கள் முதன்முதலில் கேள்விப்பட்ட சமயத்திலும், மக்கெதோனியாவைவிட்டு நான் புறப்பட்ட சமயத்திலும், உங்களைத் தவிர வேறெந்தச் சபையும் எனக்கு உதவி செய்யவோ என்னிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ளவோ இல்லை;+ இது உங்களுக்கே தெரியும். 16  நான் தெசலோனிக்கேயில் இருந்த சமயத்திலும்கூட, எனக்குத் தேவையானதை ஒரு தடவை மட்டுமல்ல, இரண்டு தடவை நீங்கள் அனுப்பினீர்கள். 17  நீங்கள் கொடுக்கும் பரிசுப்பொருள்களைப் பெற்றுக்கொள்ளத் துடிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம், உங்களுடைய கணக்கில் இருக்கிற தொகையை இன்னும் அதிகமாக்குகிற ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றுதான் துடிக்கிறேன். 18  தேவையான எல்லாமே என்னிடம் இருக்கிறது, தேவைக்கு அதிகமாகவும் இருக்கிறது. நீங்கள் எப்பாப்பிரோதீத்துவின்+ மூலம் அனுப்பியதைப் பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்திருக்கிறேன். கடவுளுக்கு அவை நறுமணம் வீசுகிற காணிக்கையாகவும்,+ அவர் பிரியத்தோடு ஏற்றுக்கொள்கிற பலியாகவும் இருக்கின்றன. 19  மகா ஐசுவரியமுள்ள என் கடவுள் உங்களுடைய குறைவையெல்லாம்* கிறிஸ்து இயேசுவின் மூலம் நிறைவாக்குவார்.+ 20  நம்முடைய கடவுளும் தகப்பனுமாக இருக்கிறவருக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.* 21  கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாயிருக்கிற பரிசுத்தவான்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். என்னோடு இருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். 22  பரிசுத்தவான்கள் எல்லாரும், விசேஷமாக ரோம அரசனுடைய* வீட்டாரும்,+ உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். 23  நல்ல மனப்பான்மையைக் காட்டுகிற உங்கள்மேல் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “வளைந்துகொடுப்பவர்கள்.”
வே.வா., “யோசிக்கும் திறமையையும்; யோசனைகளையும்.”
வே.வா., “ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருங்கள்; தியானித்துக்கொண்டிருங்கள்.”
வே.வா., “திருப்தியோடு.”
வே.வா., “தேவைகளையெல்லாம்.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
நே.மொ., “சீஸருடைய.” சொல் பட்டியலைப் பாருங்கள்.