மல்கியா 2:1-17

  • குருமார்கள் ஜனங்களுக்குக் கற்றுத் தருவதில்லை (1-9)

    • குருமார்கள் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும் (7)

  • ஜனங்கள் நியாயமில்லாமல் விவாகரத்து செய்கிறார்கள் (10-17)

    • “‘விவாகரத்தை நான் வெறுக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்” (16)

2  “குருமார்களே, உங்களுக்குக் கொடுக்கப்படும் கட்டளையைக் கேளுங்கள்.+  நீங்கள் என் பேச்சைக் கேட்க வேண்டும். என் பெயரை மகிமைப்படுத்த கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள்மேல் சாபத்தைக் கொண்டுவருவேன்.+ உங்களுடைய ஆசீர்வாதங்களைச் சாபமாக மாற்றுவேன்.+ சொல்லப்போனால், நீங்கள் என் வார்த்தைகளை மதிக்காமல் இருப்பதால் உங்கள் ஆசீர்வாதங்களை ஏற்கெனவே சாபமாக மாற்றிவிட்டேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.  “உங்கள் பாவத்துக்குத் தண்டனையாக, நீங்கள் விதைத்த விதையைப் பாழாக்குவேன்.+ உங்களுடைய பண்டிகைக் கால பலிகளின் சாணத்தை* உங்கள் முகத்திலேயே வீசியடிப்பேன். நீங்களும் சாணத்தோடு சேர்த்து* தூக்கிவீசப்படுவீர்கள்.  லேவியோடு நான் செய்த ஒப்பந்தம் நிலைக்க வேண்டும்+ என்பதற்காகத்தான் இந்தக் கட்டளையை உங்களுக்குக் கொடுத்தேன் என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.  “நான் அவனோடு செய்த ஒப்பந்தம் அவனுக்கு வாழ்வையும் சமாதானத்தையும் தந்தது, என்மேல் பயபக்தியை ஏற்படுத்தியது. அவன் எனக்குப் பயந்து நடந்தான், என் பெயருக்கு மதிப்பு மரியாதை காட்டினான்.  உண்மையான சட்டத்தை* அவன் போதித்தான்.+ அவன் பேச்சில் எந்த அநியாயமும் இருக்கவில்லை. சமாதானத்தோடும் நேர்மையோடும் என்னுடன் நடந்தான்.+ நிறைய பேரைக் கெட்ட வழியிலிருந்து திருத்தி நல்ல வழிக்குக் கொண்டுவந்தான்.  குருவானவர் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும்.* சட்டத்தை* கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக ஜனங்கள் அவரைத் தேடி வர வேண்டும்.+ ஏனென்றால், அவரே பரலோகப் படைகளின் யெகோவாவுடைய சார்பில் பேசுபவர்.  ஆனால், நீங்கள் கடவுளுடைய வழியைவிட்டு விலகினீர்கள். பலரை அவருடைய சட்டத்துக்கு எதிராக* பாவம் செய்ய வைத்தீர்கள்.+ லேவியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறினீர்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.  “நீங்கள் என் வழிகளில் நடக்கவில்லை. என்னுடைய சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டினீர்கள்.+ அதனால், எல்லா ஜனங்களும் உங்களைக் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் பார்க்கும்படி செய்வேன்.” 10  “நம் எல்லாருக்கும் தகப்பன் ஒருவர்தானே? நம் எல்லாரையும் ஒரே கடவுள்தானே படைத்திருக்கிறார்? அப்படியென்றால், நாம் ஏன் ஒருவருக்கொருவர் துரோகம் செய்ய வேண்டும்?+ முன்னோர்களோடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ஏன் அவமதிக்க வேண்டும்?+ 11  யூதா ஜனங்கள் துரோகம் செய்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களும் எருசலேம் ஜனங்களும் அருவருப்பானதைச் செய்தார்கள். யூதா ஜனங்கள், யெகோவா விரும்புகிற பரிசுத்தத்தை* தீட்டுப்படுத்தி,+ பொய் தெய்வத்தை வணங்கும் பெண்களைக் கல்யாணம் செய்தார்கள்.+ 12  அப்படிச் செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் சரி, பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு அவர்கள் என்ன காணிக்கை கொடுத்தாலும் சரி, அவர்களை யாக்கோபின் கூடாரங்களிலிருந்து யெகோவா அழித்துவிடுவார்.”+ 13  “நீங்கள் இன்னொரு பாவத்தையும் செய்கிறீர்கள். அந்தப் பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் யெகோவாவின் பலிபீடத்தில் வழிந்தோடுகிறது, அங்கே அவர்களுடைய கதறலும் பெருமூச்சும் கேட்கிறது. அதனால், கடவுள் இனிமேலும் உங்கள் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார், உங்கள் கைகளிலிருந்து எதையும் பிரியத்தோடு வாங்கிக்கொள்ள மாட்டார்.+ 14  ‘ஏன் அப்படி?’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஏனென்றால், இளவயதில் கைப்பிடித்த மனைவிக்கு நீங்கள் செய்த துரோகத்துக்கு யெகோவாவே சாட்சியாக இருக்கிறார். முறைப்படி ஒப்பந்தம் பண்ணி கைப்பிடித்த மனைவியாக இருந்தும் அவளுக்குத் துரோகம் செய்தீர்களே.+ 15  ஆனால், உங்களில் சிலர் துரோகம் செய்யவில்லை. அவர்கள் கடவுளுடைய சக்தி காட்டிய வழியில் தொடர்ந்து நடந்தார்கள். அவர்கள் எதை விரும்பினார்கள்? கடவுளுக்குப் பிரியமான பிள்ளைகள் தங்களுக்கு வேண்டுமென்று விரும்பினார்கள். அதனால் நீங்களும் ஜாக்கிரதையாக இருந்து, நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இளவயதில் நீங்கள் கைப்பிடித்த மனைவிக்குத் துரோகம் செய்யாதீர்கள். 16  ஏனென்றால், விவாகரத்தை நான் வெறுக்கிறேன்”+ என்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்கிறார். “வன்முறையில் ஈடுபடுகிறவனையும் நான் வெறுக்கிறேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “அதனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து, நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். துரோகம் செய்யாதீர்கள்.+ 17  உங்கள் பேச்சினால் யெகோவாவுக்கு எரிச்சல் உண்டாக்குகிறீர்கள்.+ ஆனால், ‘எங்கள் பேச்சினாலா? அது எப்படி?’ என்று கேட்கிறீர்கள். ‘யெகோவா கெட்டவர்களை நல்லவர்களாகப் பார்க்கிறார், அவர்கள்மேல் பிரியமாக இருக்கிறார்’ என்று சொல்கிறீர்களே.+ அல்லது, ‘நீதியுள்ள கடவுள் எங்கே?’ என்று கேட்கிறீர்களே.”

அடிக்குறிப்புகள்

அதாவது, “பண்டிகைகளின்போது செலுத்தப்படுகிற மிருகங்களின் சாணத்தை.”
அதாவது, “பலி செலுத்தப்படும் மிருகங்களின் சாணம் வீசப்பட்ட இடத்தில்.”
வே.வா., “அறிவுரையை.”
நே.மொ., “குருவானவரின் உதடுகள் அறிவைக் காக்க வேண்டும்.”
வே.வா., “அறிவுரையை.”
அல்லது, “உங்கள் அறிவுரையால்.”
அல்லது, “ஆலயத்தை.”